Friday, November 25, 2011

தெரிந்த புராணமும் திரிக்கப்படும் "கதைகளும்"

இப்பொழுதெல்லாம் பிரபலங்கள் எழுதும் ஆன்மீகக் கட்டுரைகள் பிழை இல்லாமல் இருக்கின்றனவா என்று பார்ப்பதற்கு பத்திரிக்கை ஆசிரியர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கடைசிபக்கத்தை எப்படியோ நிரப்பி விடுகிறார்கள். அதிலுள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதும் இல்லை. அண்மையில் ஒரு ஆன்மீக இதழின் கடைசிப் பக்கத்தில் ஒரு பட்டி மன்றப் பேச்சாளர், "நந்தி மாதிரி குறுக்கே நிக்காதீங்க" என்ற தலைப்பில் தனக்குத் தோன்றிய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்!

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நந்தனாருக்காக நந்தி விலகியதைப் பற்றித்தான். புராணத்தைக் கவனமாகப் படிக்க வேண்டும். "சற்றே விலகியிரும் பிள்ளாய்" என்ற கோபாலக்ருஷ்ண பாரதியின் பாடலைக் கேட்டுவிட்டு, நந்தியை சிவபெருமான் விலகச் சொன்னார் என்று மட்டும் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இது நடந்த இடம் தில்லை என்று எழுதியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். ஆனால் திருப்புன்கூர் சிவலோகநாதர் சன்னதியின் முன்னால் இருக்கும் பிரம்மாண்டமான நந்தியே விலகியது என்பதை," புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போர் ஏற்றை விலங்க அருள் புரிந்து அருளி.." என்று பெரிய புராணம் தெளிவாகக் காட்டுகிறது.

இக்காலத்தில் குறுக்கே மறைத்துக் கொண்டு நின்றால், "நந்தி மாதிரி" மறைப்பதாகத் தவறாகக் கூறி வருகிறார்கள். சிவாலயங்களிலாவது நந்திக்குப் பின்னால் நின்றால் கொம்புகளுக்கு நடுவழியாகப் பெருமானை தரிசிப்பார்கள். பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு முன்னால் கைகூப்பி நிற்கும் கருடாழ்வாரைச் சுற்றி சன்னதியே கட்டியிருப்பதைப் பார்க்கலாம். இப்படி இருந்தும், "கருடன் மாதிரி குறுக்கே மறைப்பதாகக் " கூறுகிறார்களா என்ன?


சரி! இனி அவர் எழுதியுள்ள பட்டீஸ்வரம் கதைக்கு வருவோம். சம்பந்தர் சிவிகையில் வருவதைக் காண "எம்பெருமாட்டி ஆசைப்பட்டாளாம்." அத்தலத்தில் இறைவன் முன்பிருக்கும் நந்திகள் சற்று விலகி இருப்பதை இன்றும் காணலாம். இதோடு விட்டால் பரவாய் இல்லை. நந்தியைத் தள்ளிவைத்து பிரதிஷ்டை பண்ணியிருக்காங்களா" என்று ஒரு அறிவு ஜீவி கேட்டதாக வேறு எழுதியிருக்கிறார். அவர் கேட்டதாகவே இருக்கட்டும். அக்கேள்வி உலகம் முழுவதுக்கும் தெரிந்துதான் ஆக வேண்டுமா? இதெல்லாம் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். " நம்பிக்கை --- அதானே எல்லாம்?" என்று ஒரு நகைக்கடை விளம்பரம் செய்வதையுமா இவர் டீ.வீ யில் பார்க்கவில்லை?


"தெரிந்த புராணம் ... தெரியாத கதை" என்ற தலைப்பில் அதே ஆன்மீக இதழின் வேறு ஒரு பக்கத்தில் , தனது பெயரின் முன் டாக்டர் பட்டம் போட்டுக் கொண்டு ஒருவர் எழுதிய கட்டுரை வெளியாகியிருக்கிறது. பைரவரையும் பிக்ஷாடனரையும் போட்டுக் குழப்பிக்கொண்டு இருக்கிறார். " பரமேஸ்வரனே பாவம் செய்த கதை" என்று வேறு எழுதியிருப்பது கண்டனத்துக்கு உரியது. முதலில் இவருக்குத் தெரியாத/ படித்திராத புராணத்தைக் கூறுவோம். பதினெட்டுப் புராணங்களை நமக்குத்தந்த வியாச பகவான், அவற்றுள் ஒன்றான ஸ்காந்த மஹாபுராணத்தில் சங்கர சம்ஹிதையில் சிவரஹஸ்ய கண்டம்,தக்ஷ காண்டத்தில், சிவாம்சமான பைரவ மூர்த்தி, பிரமனின் ஐந்தாவது தலையைக் கொய்து அவனது அகந்தையை அகற்றி, அவனது கபாலத்தில் விஷ்ணு தனது நெற்றியைப் பிளந்து, ரத்தத்தால் நிரப்ப முற்பட்டபோது மூர்ச்சை ஆகவே, மாங்கல்யப் பிச்சை கேட்ட மஹாலக்ஷ்மிக்கு இரங்கி விஷ்ணுவை மீண்டும் உயிர்ப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். சிவனுக்குப் பிரமகத்தி தோஷம் வந்ததாகக் கூறவில்லை.


பிக்ஷாடன மூர்த்தம் என்பது தாருகாவன முனிவர்களின் கர்வத்தை அடக்குவதற்காகக் கொண்ட கோலம். இதற்கும் பைரவ மூர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?? எந்த தெய்வத்தையும் இழிவு படுத்தாமல் எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும். இன்ன இன்ன கோத்திரக்காரர்கள் வணங்கவேண்டிய ஆலயங்கள் என்றும், இன்ன ராசி மற்றும் இன்ன நக்ஷத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்கள் என்றெல்லாம் எது வேண்டுமானாலும் எழுதட்டும். அப்படியாவது சிலர் அக்கோயில்களுக்குப் போகிறார்களே என்று சந்தோஷப் பட வேண்டியிருக்கிறது.


ஆன்மீக உலகில் மலைகள் என்று சொல்லக் கூடியவர்கள் இப்போது யாரும் இல்லை. எனவே அவரவர்கள் பிரபலங்களாகிவிட்டால் போதும்.பிறகு ஆன்மிகம் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பிரசுரிக்கப் பத்திரிகை ஆசிரியர்கள் தான் தயாராக இருக்கிறார்களே?

Wednesday, November 2, 2011

கிண்டல் இனியும் தொடருமா?



ஒருவர் பிரபலமாக இருந்து விட்டால் போதும். அவர் என்ன எழுதிக்கொடுத்தாலும் பத்திரிக்கைகள் அதைப் பிரசுரிக்கத் தயாராக இருப்பதைபோலத் தோன்றுகிறது.பத்திரிகை ஆசிரியரும் அதில் வரும் செய்திகளுக்கு நிர்வாகம் பொறுப்பில்லை என்று நழுவி விடுகிறார். இதனால் சரிபார்க்கப்படாத செய்திகள் மக்களைச் சென்று அடைகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டினாலும் திருத்தம் வெளியிடப் பெறுவதில்லை. ஆன்மீகப் பத்திரிகைகளும் இதற்கு விதி விலக்கல்ல. கடைசிப் பக்கத்தில் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபல எழுத்தாளர்கள் மூலம் எழுதப்படும் கட்டுரைகளும் இதுபோன்ற தவறான செய்திகளை நகைச்சுவை என்று எண்ணிக்கொண்டு அள்ளி வீசுகின்றன. சில சமயம் அவற்றில் கேலியும் கிண்டலும் கூடத் தொனிக்கின்றன.சில மாதங்களுக்கு முன்னர் பிரமதேவனைத் தவறாகச் சித்தரித்து ஒரு ஆன்மீகப்(?) பத்திரிகை கடைசி பக்கத்தில் எழுதியிருந்ததைக் கண்டித்திருந்தோம். அக்கிண்டல் மீண்டும் வேறு ஒருவர் மூலம் முளைத்திருப்பது வேதனையை அளிக்கிறது. 

"பம்பரத்தை முழுங்கிய தந்தை" என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் அண்மையில் ஒரு ஆன்மீக இதழில் கடைசி பக்கத்தில் எழுதியிருக்கிறார். திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பதற்காக ஒரு மாணவன் எழுந்து, " அப்படீன்னா கடவுள் இல்லைன்னு திருவள்ளுவர் ஒத்துக்கராரு. அப்படித்தானே ஐயா?" என்று கேட்டவுடன் அனைவரும் கை தட்டினார்களாம். அதற்கு விடையாகத் தமிழ்ப்பேராசிரியரான கட்டுரை ஆசிரியர், "எதையும் அரைகுறையாகப் புரிஞ்சுக்கக் கூடாது." என்று சொல்லிவிட்டுக், "கண்ணப்பநாயனாரைத் தெரியுமா?" என்று கேட்டாராம். அதற்க்கு ஒரு மாணவன், "அவர் வேட்டையாடிக்கொண்டு வந்த மான்கறியைத்தானே சிவபெருமான் சாப்பிட்டார்" என்றவுடன், மற்ற மாணவர்கள், சல்மான் கானுக்கு முன்னாடியே சிவபெருமான் மான் கறி சாப்பிட்டிருக்கிறாரா?" என்றார்களாம். அதற்க்கு இவர், " கண்ணப்பன் மான்கறி கொண்டு வந்து கொடுத்தார் என்பது சம்பவம்" என்று சொன்னதாகக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். 

இதன்மூலம், தெய்வ நம்பிக்கை வேரூன்ற வேண்டிய பருவத்தில், தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு, கடவுளர்களைக் கிண்டலாக-- அதுவும் சினிமா நடிகருடன் ஒப்பிட்டு, ஏதோ பெரிதாக ஜோக் அடித்துவிட்டதாக மகிழ்ச்சியில் மிதக்கும் மாணவ மணிகளை அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும் மெச்சிக்கொள்ளட்டும். 

தமிழ் ஆசிரியராக இருந்தும் மாணவர்களை, "எதையும் குழப்பமாகவே தெரிஞ்சுக்கிறீங்களே." என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தவறாகப் புரிந்துகொண்டு பேசலாமா? கண்ணப்ப நாயனார் கொண்டு வந்தது மான் கறி அல்ல. பெரிய புராணத்தை மீண்டும் அவர் படிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். " வன் பெரும் பன்றி தன்னை எரிதனில் வதக்கி" என்று குறிப்பிடப்படுவதால் காட்டுப் பன்றி இறைச்சியையே கொண்டு வந்தார் என்று அறியலாம். ஆறு இரவுகள் இறைவனின் பக்கத்திலிருந்தே கண் துஞ்சாது அன்பு செலுத்தியமைக்கு ஈடு இணை எது? எனவேதான், "கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்று திருவாசகமும் பேசுகிறது. மாணவர்களிடம் புராணத்தில் இருப்பதைத் தெளிவாக எடுத்துச்சொள்ளவேண்டும். அதைச்செய்யாமல், அதுதான் நடந்த சம்பவம் என்று இவர் சொல்லியிருப்பது வேதனை அளிக்கும் விஷயம். 

இதுபோன்ற கேலிகளையும் கிண்டல்களையும் பிற பத்திரிகைகளில் வைத்துக்கொள்ளட்டும். ஆன்மீகப் பத்திகைகளும் இதற்கு இடம் கொடுக்க வேண்டுமா? கடைசி பக்கம் , தரத்திலும் கடைசியாகப் போய் விடக்கூடாது. நிர்வாக ஆசிரியர்கள் கவனிப்பார்களா?