பெங்களூரிலிருந்து சுமார் 450 கி. மீ. தொலைவில் அரபிக்கடலை நோக்கியவாறு அமைந்துள்ள இத் தலம் மிகவும் பழமை வாய்ந்தது. ராவணன் கொண்டு வந்த ஆத்மலிங்கத்தை விநாயகப்பெருமான் ஒரு சிறுவனாக வந்து இங்கேயே வைத்துவிட்டதால், ராவணனால் அதைப் பெயர்க்கமுடியவில்லை.ராவணனால் குட்டுப்பட்ட கணபதியும் தனி ஆலயத்தில் காட்சி அளிக்கிறார். சுவாமியை ஞான சம்பந்தர் மற்றும் அப்பர் தேவாரப் பதிகங்கள் துதிக்கின்றன. ஆதிசங்கரரும் இங்கு தரிசிக்க வந்ததாகச் சொல்வர். அவரது பெரிய திருவுருவச்சிலை கடலை நோக்கியபடி அமைக்கப்பட்டிருக்கிறது. கோடி தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தம் ஊருக்குள் இருக்கிறது. மகா சிவராத்திரியன்று ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவார்களாம். இரு தினங்கள் இந்த கோடி ருத்ர ஜெபத்தில் கலந்துகொண்டு, ஒவ்வொரு காலத்திலும் ஆத்மலிங்க தரிசனம் கிடைத்தது பாக்கியமே. சிவ லிங்கத்தின் பிரம பாகம் பெரும்பாலும் வட இந்தியக் கோயில்களில் பார்க்க முடியாது. விஷ்ணு பாகமான ஆவுடையாரையும் அதன் மேலே உள்ள சிவ மூர்த்தியையும் மட்டுமே தரிசிக்கலாம். ஆனால் இந்த ஸ்தலத்திலோ, ஆவுடையார் மட்டுமே காணப்படுகிறது. அதன் நடுவில் உள்ள குழிவான இடத்தில் நீர் தேங்கியிருக்கிறது. அதை சற்று அகற்றிவிட்டு, கையை விட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். அப்பொழுது சிறிய லிங்கம் இருப்பதை உணர முடிகிறது. அவசியம் ஒரு தடவையாவது தரிசிக்க வேண்டிய ஸ்தலம்.
ஊருக்குத் திரும்பியவுடன் மற்றும் ஓர் அழைப்பு. 13 ம தேதி திருக்கள்ளில் என்ற ஸ்தலத்தில் நடைபெற்று இருக்க வேண்டிய ஏக தின லக்ஷாச்சனை, 19 ம தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதால் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்ததால் அந்த வைபவத்தையும் காணும் பாக்கியம் கிடைத்தது.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருக்கள்ளில் என்ற இந்த ஸ்தலம், சென்னையிலிருந்து பெரிய பாளையம் போகும் வழியில் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளி மரம் ஸ்தல விருக்ஷம். சோமாஸ்கந்த வடிவில் , சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சுப்பிரமணியர் சன்னதி இருக்கிறது. அபிஷேக அலங்காரங்கள் ஆனவுடன், லக்ஷார்ச்சனையும், ருத்ர த்ரிசதியும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த ஆலய சிவாசாரியார் , ஸ்ரீ ஆறுமுக குருக்களுக்கு அண்மையில் 100 ஆண்டுகள் பூர்த்தி ஆனதை ஒட்டி அன்பர்கள் அவருக்கு விழா எடுத்தார்கள். தனது 18 வது வயதிலிருந்து, தொடர்ந்து சுவாமிக்கு இந்த உள்ளடங்கிய/ வசதிகள் மிகக் குறைவாக உள்ள இக்கிராமத்தில் இருந்து கொண்டு பூஜை செய்துவரும் இப் பெரியவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்றைய தினம் அவரது ஆசிகளை பெற்ற அனைவரும் பாக்கியசாலிகள்.