Thursday, February 25, 2010

பன்னகாபரணன்


ஸ்ரீ பரமேச்வரனுக்குப் பன்னகாபரணன் என்று ஒரு நாமம் உண்டு.திருவாரூருக்குப் பக்கத்தில் உள்ள திருச்சாட்டியக்குடி என்ற ஊரில் மூலவருக்கு இந்தப் பெயர்தான் வழங்கப்படுகிறது. பல ஊர்களில் மூலவருக்கு வெள்ளியில் நாகாபரணம் சார்த்திப் பார்க்கிறோம். பன்னகம் என்றால் நாகம் அல்லது பாம்பு என்று அர்த்தம். ஆதிசேஷனால் சிவராத்திரி பூஜை செய்யப்படும் திருப்பாம்புரம் என்ற ஸ்தலத்தில் மூலவர் மீது பாம்பு சட்டை உரித்துவிட்டுச் சென்றதை சில வருஷங்கள் முன்பு பத்திரிக்கைகளில் பார்த்தோம். திருநாகேஸ்வரத்தில் நாகராஜா (ராகு பகவான்) சன்னதியிலும் இரவில் பாம்பு விட்டுச்சென்ற சட்டையை மறுநாள் காலை அநேகர் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் சென்ற கிரகண தினத்தன்று தேப்பெருமாள் நல்லூர் என்ற ஊரில் நடைபெற்ற அதிசயம் யாரும் கேள்விப் படாததொன்று

கும்பகோணத்திற்கு சமீபத்திலுள்ள திருநாகேஸ்வரத்தின் அருகில் உள்ளது தேப்பெருமாள் நல்லூர் என்ற கிராமம். தேப்பெருமாள் நல்லூர் சிவன் என்ற மகா சிவபக்தரைப் பற்றி காஞ்சிப் பெரியவர்கள் மிகவும் புகழ்ந்துள்ளார்கள். காரணம் தான் ஒருவராகவே கையில் செம்பு ஏந்தியவராகத் திரவியங்களை
சேகரித்து , கும்பகோணத்தில் மரங்கள் முளைத்துக் கிடந்த ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோபுரத்தைத் திருப்பணி செய்ததோடு பல சிவ க்ஷேத்திரங்களில் அன்ன தானம் ஏராளமாக செய்ததால் எல்லோரும் அவரை அன்னதான சிவன் என்றே அழைத்தனர். அப்படிப்பட்ட மகானைத் தந்தது தேப்பெருமாநல்லூர்.

இந்த ஊர் சிவாலயத்தில் சென்ற கிரகணத்தன்று ஒரு நல்ல பாம்பு வில்வ இலைகளை சிவ சன்னதிக்குள் நுழைந்து சுவாமியின் சிரசில் வைப்பதை அர்ச்சகர் பார்த்துவிட்டு, போட்டோ எடுப்பவரை அழைத்துக் காட்டியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட படங்களைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.


முதல் படத்தில் பிராகாரத்தில் உள்ள வில்வ மரத்தில் பாம்பு வில்வ இலையை எடுப்பதைக் காண முடிகிறது.அடுத்ததாக, அப்பாம்பு,கர்ப்பக்ருகத்தின் கோமுகி வழியாக சுவாமி சன்னதிக்குள் நுழைவதைத் தெளிவாகக் காணலாம். அடுத்த படங்களில் அது மூலவருக்கு முன் வந்துவிட்டதையும்,அதன் வாயில் வில்வ தளம் இருப்பதையும் கவனிக்கலாம். கடைசியாக , சுவாமியின் பாணத்தைச் சுற்றி சிரத்தை அடைந்து வில்வ அர்ப்பணம் செய்துவிட்டுப் படம் எடுத்து நிற்பதையும் பார்க்கும் போது,பரவசம் அடைகிறோம்.
புகைப்படத்தைப்பார்த்தும் நம்பாதவர்கள் இருக்கிறார்கள்.பல ஊர்களில் சுவாமியின் மீது பாம்பு சுற்றிக் கொள்வதையும் சட்டையை விட்டுவிட்டுப் போவதையும் எவ்வளவோ பேர் பார்த்திருந்தும்,போட்டோ எடுத்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம். திருக்குரக்குக்கா(வல் ) என்ற பாடல் பெற்ற ஸ்தலம் மாயூரம் அருகில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டு தோறும் ஒரு குரங்கு (ஊர்ப் பெயருக்கு ஏற்ற மாதிரி) கருவறைக்குள் சென்று இலைகளாலும் மலர்களாலும் சுவாமியை அர்ச்சிக்கிறது. இதைப் படம் எடுத்தாலும் நம்பமாட்டேன் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். பாம்பு,குரங்கு இவற்றிற்கு ஆறறிவு ஏது என்பார்கள். அவை சாதாரண பாம்போ குரங்கோ அல்ல. யாரோ சாப விமோசனத்திற்காக இந்த உருவங்களில் வந்திருக்கக் கூடும். நமது அறிவுக்குத் தெரியாதவற்றை மறுப்பது அறிவீனம்.

யக்ஷர்,கின்னரர்,யமன்,வருணன்,அக்னி,வாயு,சூர்யன்,வசுக்கள்,தேவர்கள்,மனிதர்கள் ஆகியோர் மட்டுமல்லாமல் ,வானரமும்,நாகமும் அயர்வே இல்லாமல் உன்னை பூஜித்து,வரங்கள் எல்லாம் பெறுவதைக் கண்டு,அடியேனும் உன் திருவடிகளை அடைந்தேன் என்று திருப்புன்கூர் தேவாரப் பதிகத்தில் ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடுவதைப்போல், நாமும் நாகம் செய்யும் பூஜையைப் பார்த்தாவது, ஈச்வரனை வில்வ தளங்களால் பூஜிப்போமாக.

Tuesday, February 9, 2010

கயிலையில் மகாசிவராத்திரி


கயிலை பாதி காளத்திபாதி அந்தாதி என்று ஒரு பிரபந்தம் பாடியிருக்கிறார் நக்கீரர். அதில் ஒரு பாட்டு கயிலையைப் பற்றியும் அடுத்த பாட்டு காளத்தியைப்பற்றியும் மாறி மாறி வரும். கயிலைக்கு நிகரான ஸ்தலம் என்பதால் தக்ஷிண கைலாசம் எனப்படும் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் மகா சிவராத்திரியை தரிசிக்கப் பல்லாயிரம் ஜனங்கள் இங்கு வருகிறார்கள்.


சிலந்தி,பாம்பு,யானை,கண்ணப்பர் ஆகியோரது பூஜையை ஏற்றுக் கொண்டுள்ள காளத்திநாதனைமூவரும் தேவாரம் பாடியிருக்கிறார்கள். சாந்த்ர மாதக் கணக்கில் இந்த வருஷம் பிப்ரவரி மாதம் 12 தேதி மகாசிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.(தமிழ் நாட்டில் சௌரமாதக் கணக்கு அனுசரிப்பதால் மார்ச் 13 அன்று பெரும்பாலான சிவாலயங்களில் நடைபெறுகிறது).


29 ஆண்டுகளாக தேவகோட்டை ராமநாதன் செட்டியார் என்பவர் இந்த ஸ்தலத்திற்கு வந்து மகாசிவராத்திரியை தரிசித்து வந்தார். அப்போது ஆலய குருக்களாக இருந்தவருக்கு 20 வருஷங்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. அவரது வேதனையைப் புரிந்துகொண்ட செட்டியார்,அந்த ஆண்டு மகாசிவராத்திரி ஆறு கால பூஜை செலவுகளையும் தானே ஏற்று விரதம் இருந்து குருக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். அவரது பிரார்த்தனை வீண் போக வில்லை.பரமேச்வரனுடைய கருணையால் பிள்ளைக் குழந்தை பிறந்தது.


செட்டியார் மகா சிவபக்தர் ஆதலால் காளத்தி நாதனின் கோயிலைத் திருப்பணி செய்யத் தொடங்கினார். சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பிரமாண்டமான அத்திருப்பணி ஒன்பது லட்சத்தைத் தாண்டியதாம். 1912 ல் மகா கும்பாபிஷேகமும் நடத்தி மகிழ்ந்தார் செட்டியார். அதனால் மக்கள் அவரைத் திருப்பணிச் செட்டியார் என்று அழைத்தார்கள்.


தனது முப்பதாவது ஆண்டு மகாசிவராத்திரியைக் கொண்டாட 1942 ல் அங்கு சென்ற செட்டியார் காலம் தோறும் தன் மனைவியுடன் சுவாமியின் அபிஷேக ஆராதனைகளைத் தரிசித்துவிட்டு ஆறாவது காலத்தின் இறுதியில் அருகே நின்ற மனைவியிடம் தாலியைக் கழற்றி ஸ்ரீ ஞானப்ப்ரசூனாம்பிகையின் கழுத்தில் அணிவிக்கும்படிக் குருக்கள் கையில் கொடுக்கச் சொன்னார். அம்பாளுக்கு அது சார்த்தப் பட்டுக் கற்பூர தீபம் நடந்தது. தனது இடத்தை வந்து அடைந்ததும் சிவசிவ என்று சொல்லிக்கொண்டே விபூதி இட்டுக் கொண்டவுடன் மனைவி கொண்டுவந்த தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் ஒருமுறை சிவசிவ என்று சொல்லிக் கொண்டே கண்களை மூடினார். அடுத்த நிமிடம் அவரது ஜீவன் ஸ்ரீ காளத்தி நாதனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. இன்றும் கோயில் வாயிலில் சிலாரூபமாகத் திருப்பணிச் செட்டியார் கைகளைக் கூப்பியபடிக் காட்சி அளிக்கிறார்.


தன் நினைவாகவே இருக்கும் பக்தர்களைக் கடைசி வரையிலும் கூட இருந்து என்றும் காப்பாற்றும் பரமேச்வரன் சர்வ மங்களங்களையும் அளிக்க வேண்டும்படி ஸ்ரீ மகாசிவராத்திரி தினத்தில் பிரார்த்திப்போமாக.