Saturday, September 25, 2010

நம்புவோம் நலம் பெறுவோம்

புராணங்களில் வரும் அற்புதங்கள் சிலருக்கு அதிசயமாகவும் சிலருக்கு ஆச்சர்யமாகவும் இன்னும் சிலருக்கு சந்தேகத்தையும் தரக் கூடும். அப்படி அற்புதங்கள் நிகழ்த்தியபோது பாடிய தேவாரப் பதிகங்களை அற்புதப் பதிகங்கள் என்கிறோம். திருவையாற்றுக்கு சுந்தரர் , சேரமான் பெருமாள் நாயனாரோடு வந்த போது ஒரு அற்புதம் நடந்தது. அகண்ட காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது. ஆற்றின் தென் கரையில் இருந்த இருவருக்கோ அதைத் தாண்டி மறு கரை வந்து ஐயாரப்பரைத் தரிசிக் வேண்டும். ஆற்றைத் தாண்டுவதோ சாத்தியமாகத் தெரியவில்லை. இந்நிலையில்தான்,சுந்தரர், தென் கரையில் இருந்தபடியே, மறு கரையில் இருந்த ஐயாரப்பறது கோபுரத்தை நோக்கி "பரவும் பரிசு" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். சிவனருளால் காவிரி வெள்ளம் மலை போல் நின்று விலகி வழி விட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. உடனே இருவரும் காவிரியைத் தாண்டி , கோயிலுக்குச் சென்று தரிசித்தார்கள் என்பது வரலாறு. ஆற்று வெள்ளமாவது, விலகி வழி விடுவதாவது என்று நம்பிக்கை இல்லாதவர்கள் கேட்பார்கள். நிச்சயமாக நடந்திருக்கும் என்பதைப் பின் வரும் அதிசயத்தைப் படித்தால் ஒப்புக்கொள்ளலாம். இதனை எனக்குத் தெரிவித்து உதவிய ஆப்த நண்பர் ஸ்ரீ மணி அவர்களுக்கு என் நன்றி உரியது.


இந்த அதிசயம் நடந்து கொண்டிருப்பது குஜராத் மாநிலத்தில். அங்கு உள்ள சிவாலயம் கடலுக்கு உள்ளே ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது. மதியம் முதல் மாலை வரை பக்தர்கள்சென்று வர சௌகர்யமாக, கடல் மட்டம் மிகமிகக் குறைந்து விடுகிறது. தரையில் நடப்பது போல் கோவில் வரை நடந்து செல்கிறார்கள் அங்குள்ள சிவலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்து , பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இவ்வாறு கடலுக்குள் நடந்துபோய் சுவாமியைத் தரிசித்துவிட்டு வருகிறார்கள். ஆகஸ்ட்- செப்டம்பர் மாதத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தரிசனம் முடிந்து மக்கள் அனைவரும் கரைக்குத் திரும்பியவுடன் கடல் மட்டம் உயர்ந்துவிடுகிறது.



இப்பொழுது சொல்லுங்கள், திருவையாற்றில் காவிரி விலகி வழி விட்டது நிச்சயமாக நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை தானே?

Wednesday, August 25, 2010

காயத்ரி ஜப மகிமை

"காயத்ரி ஜபம்" என்ற தலைப்பில் சென்ற ஆண்டு எழுதியிருந்தோம். அதன் முக்கியத்துவத்தைக் கருதி மேலும் கொஞ்சம் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. அதன் பெருமை தெரியாததாலோ என்னவோ பெரும்பாலானவர்கள் சிரத்தை இல்லாமலும் அரைகுறையாகப் பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுவதுமாக இருக்கிறார்கள். அன்றையதினம் விடுமுறையாக இருந்தாலும் நிதானமாக, சிரத்தையுடன் ஜபம் செய்வார்களா என்பது வேறு விஷயம். அப்பா எப்பொழுது எழுந்திருப்பார் என்று பார்த்துக்கொண்டே அருகில் ஜபம் பண்ணும் பிள்ளை. அப்பாவும் பிள்ளையுமாக ஜபம் பண்ணியதைப்(??) பார்த்துப் பூரித்த அம்மா. எவ்வளவு பேர் வீட்டில் இது போல் நடக்கிறது? தினசரி சந்த்யாவந்தனத்தைப் பண்ணாமல் ஆவணி அவிட்டத்தையும் காயத்ரி ஜெபத்தையும்கண் துடைப்பாகப்பண்ணும் குடும்பங்கள் இக்காலத்தில் அதிகரித்து வருகின்றன.

மும்மூர்த்திகளாலும் தேவர்களாலும் செய்யப்படுவது இக்கர்மா. தீட்டு வந்த போது கூட இதைச் செய்ய வேண்டும். ஸ்ரீ பரமேச்வரன் இதைச் செய்ததாக குமார சம்பவத்தில் கவி காளிதாசன் குறிப்பிடுகிறார். இதைச் செய்யாமல் வேறு எந்தக் கர்மாவை செய்தாலும் பலன் தராது. வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யும் இடம், தேவ பூஜை செய்யும் இடம்,பசுமாடு கட்டும் கொட்டகை,துளசி மாடம் ஆகியவற்றின் அருகில் காயத்ரி ஜபம் செய்வது அதிகப் பலனைத்தரும். ஹோமமாகச் செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் காரிய சித்தியும் பாப நிவர்த்தியும், இறுதியில் மோக்ஷமும் சித்திக்கும்.

அர்த்தம் தெரியாததால் இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவை விட்டு விடுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆ சத்யேன எனத் தொடங்கும் மந்த்ரம் தீர்காயுளைப் பிரார்த்திக்கிறது. அதன் சுருக்கமான பொருளாவது: " நூறு வருஷம் உதய காலத்தில் சூரிய மண்டலத்தைத் தரிசிப்போம்.நூறு வருஷம் ஜீவிப்போம். நூறு வருஷம் புத்திர பௌத்ராதிகளோடு இருப்போம்.நூறு ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்வோம். அப்பொழுது நல்ல சொற்களையே பேசுவோம். நல்ல சொற்களையே கேட்போம்.சத்ருக்கள் யாரும் எங்களை ஜெயிக்கப்படாதவர்கள் ஆவோம். " என்று ப்ரத்யக்ஷ தெய்வமான சூர்யனிடம் வேண்டப்படுகிறது.

இவ்வளவு மகிமை வாய்ந்த கர்மாவைப் பண்ணாமல் ஆயுளை வீணாகக் கழிக்கக் கூடாது. விடுமுறை நாட்களில் அதிக ஆவர்த்தி ஜபம் பண்ண முடியும். ரிடையர் ஆனவர்கள் இத்தனை வருஷம் பண்ணமுடியாமல் போயிருந்தாலும் இனிமேலாவது அதிக சிரத்தையுடன் செய்ய ஆரம்பிக்கவேண்டும். இதனால் குடும்பம் க்ஷேமம் அடைவதோடு,லோக க்ஷேமமும் உண்டாகும். நமது எல்லா அபராதங்களையும் மன்னிக்கும் வேத மாதா இதற்கு அருள் செய்ய பிரார்த்திக்கிறோம்.

Wednesday, August 4, 2010

ஆதி சைவர்களைப் போற்றுவோம்


அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பாடும்போது சுந்தரமூர்த்தி நாயனார் ஆதி சைவர்கள் எனப்படும் சிவாசார்யார்களை ,"முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்" என்று போற்றியிருக்கிறார். பஞ்சம் வந்த போதும் இடைவிடாமல் பசியோடும் களைப்போடும் சிவாலய பூஜை செய்த அழகாபுத்தூர் எனப்படும் அரிசிற்கரைப் புத்தூர் புகழ்த்துணை நாயனாரை சிறப்பித்து அந்த ஊர் பதிகத்தில் பாடியிருக்கிறார்.அப்படி பூஜை செய்ததால் அச்சிவாசாரியாருக்கு சுவாமி தினமும் படிக்காசு கொடுத்ததாக வரலாறு. கோயில்களிலிருந்து நிலக்குத்தகை மூலம் அர்ச்சகர்கள் பெற்று வந்த நெல்லும் நின்றுவிடவே கிராமங்களில் உள்ள அர்ச்சகர்கள் சொல்ல முடியாத அளவு கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். மறுநாள் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவிப்போரும் உண்டு. நிலையான வருமானம் இல்லாததால் அல்லல் படுவோர் பலர். இத்தனை கஷ்டங்களை சுமந்து கொண்டும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கிராமங்களிலேயே இருந்து கொண்டு பூஜை செய்யும் வயது முதிர்ந்த சிவாசார்யார்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

இப்படிப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலவகையான உதவிகளை செய்து வருகிறது நமது சபை. ஐந்து கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் பல்லாண்டுகளாகப் பூஜை செய்து வரும் சிவாசார்யார்களுக்கு மரியாதை செய்யும் வகையில் கடந்த ஆகஸ்ட் முதல் தேதி அன்று திருவாழ்கொளிப்புத்தூர் என்று தேவாரத்தில் வழங்கப்படும் ஸ்தலத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தலத்து சிவாச்சாரியாரும் மற்றும் நீடூர்,மேலானல்லூர்,இலுப்பப் பட்டு, வழுவூர் ஆகிய ஸ்தலத்து சிவாசார்யார்களும் தங்கள் மனைவியருடன் வந்திருந்தனர்.

செல்லும் வழியில் நீடூர் சிவாலய தரிசனமும் சுவாமியின் காலசந்தி அபிஷேகமும் கண் குளிரக் கண்டோம். தேவேந்திரன் காவேரி மணலால் செய்த மூர்த்தம். கோவிலுக்கு வெளியில் உள்ள காளிதேவியின் சன்னதியில் தீபம் ஏற்றி வழிபட்டபின், திருவாழ்கொளிபுத்தூரை அடைந்தோம். மாயூரத்திலிருந்து ஏற்பாடு செய்திருந்த பர்சாரகர்எங்களுக்கு முன்னாலேயே வந்து சமையல் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இந்த க்ஷேத்ரம் பாடல் பெற்றது. அர்ஜுனனின் வாளைப்புற்றுக்குள் சுவாமி மறைத்து வைத்துவிட்டுப் பிறகு அருள் செய்ததால் ஊருக்கு இந்தப் பெயர் வந்தது. பஞ்ச காலத்தில் சுவாமி இரத்தின மழையாகப் பெய்ததால் ரத்னபுரீச்வரர் எனப்படுகிறார். பிரமரகுந்தலாம்பிகை (வண்டுவாழ் குழலி) என்று அம்பாளுக்குப் பெயர். எல்லா திரவியங்களுடன் சுவாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. அலங்காரம் ஆனவுடன் ஐந்து சிவாசார்யார்களும் சுவாமியின் அருகாமையில் நின்றுகொண்டு வில்வ தளங்களால் ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்தது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பின்னர் அம்பாளுக்கும் , துர்கைக்கும் அர்ச்சனைகள் நடந்தன.

அந்தந்த ஊர் சுவாமி அம்பாள் என்று சிவாசார்யா தம்பதிகளைப் பாவித்து சங்கல்பம், அர்ச்சனை,தூபம்,தீபம் ,பாதங்களில் நலங்கு இடுதல் ஆகியவை செய்யப்பெற்று வேஷ்டி - புடவைகளோடு ரூ.௨000 சம்பாவனையும் வழங்கப் பட்டது. மனமகிழ்ந்த தம்பதிகளும் ஆசி வழங்கினர்.

துர்க்கை சன்னதியின் எதிரில் மத்தியான போஜனம் பரிமாறப்பட்டது. இவ்வாறு மன நிறைவோடு விழா இனிதே நிறைவுற்றது.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. எவ்வளவு செய்தாலும் தகும். மாதாந்திர நிரந்தர வருமானம் ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும் நல்லது. மாதம் முன்னூறு ரூபாய் ஏற்பாடு செய்யும்படி ஒரு சிவாசாரியார் கேட்டுக் கொண்டதன் பேரில் எனது வங்கி கணக்கிலிருந்து அவரது வங்கி கணக்கிற்கு அத்தொகை வழங்க ஏற்பாடு செய்தாகிவிட்டது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். மாதம் தோறும் பிரசாதம் அனுப்புகிறேன் என்றார். அவருக்குத் தபால் செலவு வைக்க மனம் வரவில்லை. மேலும் அவர் வற்புறுத்தவே, மாதாந்திர சிவராத்திரி அன்று சுவாமிக்கு ருத்ர த்ரிசதி அர்ச்சனை செய்து எல்லோருக்காகவும் பிரார்த்தித்துக் கொண்டால் போதுமானது என்றேன்.

Friday, July 16, 2010

"நாலு மறை ஒது நாலூர் மயானம்"


காசி மயானம்,கச்சி மயானம் என்ற வரிசையில் நாலூர் மயானமும்அடங்கும். கும்பகோணத் திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் குடவாசலுக்கு அருகில் உள்ளது நாலூர் மயானம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம். இதற்குத் திருஞான சம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகம் ஒன்று உண்டு. அதில் இந்த ஊரை "நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் முழங்கிய இடமாக" அவர் குறிப்பிடுகிறார். இத்தலத்து இறைவனை நினைத்தால் மறு பிறவி கிடையாது என்று பாடியிருக்கிறார். இப்பதிகத்தில் "சிவாய" என்ற மந்திரம் வருகிறது. இவ்வூரை அடைய எண்ணாதவர்கள் நல்ல நெறி அடைய மாட்டார்கள் என்றும் இதனைப் பாடுவோர்களது பாவ வினைகள் அகலும் என்றும் அப்பதிகத்தில் கூறுவதைக் காணலாம். "பாலூறும் மலைப்பாம்பு" என்று இப் பதிகம் துவங்குவதற்கு ஏற்ப சுவாமியின் மேல் பெரிய பாம்பு சுற்றிக்கொண்டு இருப்பதை அடிக்கடி பார்த்தவர்கள் சொல்வார்கள்.


ஆபஸ்தம்ப ரிஷியால் பூஜிக்கப்பட்ட சுவாமிக்கு ஞான பரமேஸ்வரர் என்றும் பலாசவன நாதர் என்றும் நாமங்கள் உண்டு. அம்பிகை, ஞானாம்பிகை என்று வழங்கப்படுகிறாள். முதல் ஆதித்த சோழன் திருப்பணி செய்த இக்கோயில் , இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் கண்டது. இங்கிருந்து ஒரு கி.மீ. தொலைவில் நாலூர் என்ற தேவார வைப்புத்தலம் உள்ளது.


ஜூலை பதினாறாம் தேதியிட்ட தினமணி நாளிதழில் , இக்கோவிலில் ஒரு கால பூஜை கூட தொடர்ந்து நடப்பதில்லை என்ற செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதனால் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி,அந்த ஊரைத் தொடர்பு கொண்டபோது, பரம்பரையாக பூஜை செய்து வந்த சிவாசாரியார் காலமாகிவிடவே, பக்கத்து ஊரிலிருந்து ஒரு குருக்கள் வந்து ஒரு காலம் மட்டும் பூஜை செய்வதாகத் தெரிந்தது. அதுவும் தொடர்ந்து வருவதில்லையாம். நாலு வேதமும் சிவாகமமும் முழங்கிய ஊருக்கா இந்த கதி என்று நினைக்கும்போது சொல்லமுடியாத வேதனை ஏற்படுகிறது.


நாம் ஏற்கனவே சொல்லிவருவதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். ஆலயத் திருப்பணி செய்வோர்கள் கும்பாபிஷேகம் நடந்த பிறகு தொடர்ந்து தினசரி பூஜைகள் நடைபெறுவதில் அதிக கவனம் செய்ய வேண்டும். சொற்ப சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்த முடியாமல் சிவாச்சாரியார்கள் வருமானத்தை தேடி வேறு ஊர்களுக்குச் சென்று விடுகிறார்கள். அப்படி நடக்க விடாமல் அறநிலைத்துறை அவர்களுக்கு உரிய மாத சம்பளைத்தை முறையாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற கிராமத்துக் கோவில்கள் பூட்டப் பட்டுக் கிடக்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.


மக்களும் புராதனமான கோவில்களின் வளர்ச்சிக்கு முடிந்த அளவு உதவ வேண்டும். புதியதாகக் கட்டப் படும் கோயில்களுக்கு தாராளமாக உதவும் இவர்கள், பழைய கோவில்களின் பக்கமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே

சிவனடியார் திருக் கூட்டங்களும் தங்கள் ஊரில் மட்டுமே தொண்டு செய்து வருவதோடு இப்படிப் பட்ட கோயில்களுக்கும் சென்று உதவ முன்வரவேண்டும். இதே நிலை தொடர்ந்தால், இக் கோவில்களைப் புத்தகத்தில் மட்டுமே பார்க்க வேண்டி இருக்கும். ஸ்ரீ ஞானபரமேச்வரன் சிவ ஞானத்தை வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

Monday, July 5, 2010

தீர்த்த மகிமை


ஸ்தலத்திற்கும் மூர்த்திக்கும் எவ்வளவு மகிமை உண்டோ அந்த அளவு பெருமை அங்கு உள்ள தீர்த்தத்திற்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தீர்த்தமே சிவ ஸ்வரூபம் தான். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று அப்பர் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காஞ்சிப் புராணத்தில் வாரம் ஏழு நாட்களில் காஞ்சிபுரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டிய தீர்த்தங்கள் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதை காஞ்சி மகா பெரியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீ கச்சபேச்வரசுவாமி ஆலயத்தில் உள்ள இஷ்ட சித்தி தீர்த்தத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்நானம் செய்யும் பொழுது ஸ்ரீ பெரியவர்கள் , அந்தக் குளக்கரையில் இருந்த கல்வெட்டுக்களைப் பார்த்து, அது சூரிய சதகத்தில் வரும் ஸ்லோகங்கள் என்று கண்டுபிடித்தார்கள். அதைப் பாராயணம் செய்து வந்தால் கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும் என்றும் சொன்னார்கள்.


திருவெண்காடு என்ற க்ஷேத்திரத்தில் கோயிலுக்குள் மூன்று தீர்த்தங்கள் உண்டு.அவை சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்குப் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும் என்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அந்த வரம் கிடைக்கும் என்றும் திருஞான சம்பந்தர் அந்த ஊர் தேவாரத்தில் பாடியிருக்கிறார். இதில் சந்தேகப் படுபவர்கள் எந்தக்காலத்திலும் இருப்பார்கள் அல்லவா? அதனால் தான் ,"ஐயுற வேண்டா " (சந்தேகப்பட வேண்டாம்) என்றும் அதோடு சொல்லியிருக்கிறார். இதில் நம்பிக்கை வைத்துப் பாராயணம் செய்ததோடு, திருவெண்காடு சென்று மூன்று குளங்களிலும் ஸ்நானம் செய்த அச்சுத களப்பாளர் என்ற சிற்றரசருக்கு மகனாக சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் அவதரித்தார் என்றால், அந்த தீர்த்தங்களின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?


ஆனால் ஆலய தீர்த்தங்களின் தற்போதய நிலை பரிதாபத்திற்கு உரியது. கோவிலின் வெளியில் இருக்கும் தீர்த்தங்கள் பலவகையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறி வருகின்றன.வறண்டு போன தீர்த்தங்கள் தூர் வாரப் படுவதில்லை. ஆலயத் திருப்பணியே மிகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் திருக் குளங்களை சீரமைக்க முடிவதில்லை. கிராமக் கோவில்கள் திருப்பணி செய்யப் படும்போது,அந்த ஊர் பஞ்சாயத்தில் ஏதாவது ஒரு வேலை வாய்ப்புத்திட்டத்தின் பேரில் குளங்களைத் தூர் வாரலாம்.இதனால் அந்தக் கிராமத்தில் சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். செய்ய முன்வரவேண்டுமே? நிலத்தடி நீரைப் பற்றிப் பேசுவதோடு சரி. புதியதாகக் குளங்களா வெட்டப் போகிறார்கள்? நம் முன்னோர்கள் சிவ தர்மமாக ஏற்படுத்திக்கொடுத்ததைக் காப்பாற்றவே நாம் தயங்குகிறோம்.


"காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்பார் சம்பந்தர். நந்தவனங்கள் அமைத்தும் , குளங்கள் பல உண்டாக்கியும் சிவ தர்மங்கள் செய்தால் பாவ வினைகள் நம்மை நெருங்காது என்பது அவரது உபதேசம். குரு உபதேசத்தை இனியாவது ஏற்று இருக்கிற நந்தவனம் மற்றும் திருக் குளங்களை அழியாமல் காப்போமாக.

Tuesday, June 8, 2010

கலங்காமல் காப்பாய்

சமீபத்தில் பிரபல ஆலயங்களில் நடந்த அசம்பாவிதங்கள் எல்லோரையும் கலங்க அடித்திருப்பது ஏன்என்பது நியாயமான சந்தேகம் தான். தனக்குத் தெரிந்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இதனால் ஊருக்கும் நாட்டுக்கும் கெடுதல் ஏற்படும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.அதற்குஏற்ற மாதிரி பல இடங்களில் நடக்கும் ஏராளமான அகால மரணங்கள் கலக்கத்தை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றன.

நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது பிரபலமான கோயில்களில் சான்னித்தியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும். கோயில்களில் உள்ள மூர்த்திகள் , தேவர்களாலோ முனிவர்களாலோ மிகச் சிறந்த பக்தர்களாலோ அல்லது பறவை விலங்குகள் ஆகியவற்றாலோ வழிபடப் பட்டவை. தெய்வங்களை பய பக்தியோடு அணுக வேண்டியது போய்ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் ஆகிவிட்டது துரதிருஷ்டமே. எதில் தான் வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஆலயங்களை படப்பிடிப்பு குழுக்கள் விலைக்கு வாங்கி விடாத குறையாக ஆக்கிரமிக்கின்றனர். வழிபாட்டு இடங்களில் இவர்களை அனுமதிப்பதால் ஏதாவது வருமானம் வராதா என்ற எண்ணம் இதற்கு வழி விடுகிறது.

கோயில்களுக்கு வருபவர்களின் செய்கைகளோ சொல்லும்படி இல்லை. என்ன வேண்டுமானாலும் உடுக்கலாம்,பேசலாம் என்று ஆகிவிட்டது. இடைத் தரகர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் சென்று சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற சுய நலம் வேறு. சில இடங்களில் ஆலய சிப்பந்திகளும் இதற்கு உடந்தையாக இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சுய விளம்பரத்திற்காக தங்க கதவுகளையும் மேல் கூரைகளையும் சிலர் செய்து கொடுக்கிறார்கள். இதனால் கவனம் பூராவும் பணத்தின் மேலேயே போய் விடுகிறது. முக்கியப் புள்ளிகள் வந்தால் ஆலய சட்ட திட்டங்கள் காற்றில் விடப் படுகின்றன.

அரசாங்கமும் முதல் வேலையாக உண்டியல் வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் வரும் பணமோ பல வழிகளிலும் செலவழிக்கப் படுகிறது. கோயில்களின் பூஜைகள் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவை வருமானம் இல்லாத ஊர்களில் கேள்விக் குறியாகவே ஆகிவிட்டது. இதற்காகக் கவலைப் படுவோர் மிகச் சிலரே!

இதையெல்லாம் உத்தேசித்துதான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் ஆகியவற்றை செய்து சாந்தித்யம் நிலைக்கும்படி செய்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களைக் காணோம். பல கும்பாபிஷேகம் நடந்த கிராமத்துக் கோயில்களில் தொடர்ந்து பூஜை நடத்த வழி வகைகள் செய்யப் படுவதில்லை. வறுமையால் வாடும் ஆலய சிப்பந்திகள் வேறு ஊர்களை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்காக வருத்தப் படுபவர்கள் எத்தனை பேர்? புரட்சி ,மறுமலர்ச்சி என்றெல்லாம் பேசுபவர்கள் ஆலய மறுமலர்ச்சிக்காக ஏதும் பெரிய அளவில் செய்வதில்லை.

இதற்கெல்லாம் ஒரே வழி ,மக்கள் திருந்தவேண்டும். தானாகத் திருந்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.சிவமே அவர்களது சிந்தையைத் திருத்தவேண்டும். கோயில்களின் சாந்தித்யம் கூட வேண்டும். இறைவனது உறைவிடமாகத் திகழவேண்டும். அப்பொழுதுதான் தேசம் நன்மை அடையும். கலங்காமல் காத்த கணபதியையும் , திருபுவனத்தில் உள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் ,சரப மூர்த்தியையும் பிரார்த்திப்போமாக.

Friday, May 14, 2010

சிவ தர்ம ரக்ஷணம்


ஸ்ரீ சுவாமிநாத சுவாமியின் மீது பாடப்பட்டுள்ள திருவேரக நவரத்னமாலையில் ஒரு பாடல், பலவகையான துரோகங்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. மனத்தில் கொஞ்சம்கூடப் பயம் இல்லாமல் அதர்ம வழியில் சென்று சிவதுரோகம் செய்பவர்கள் இதில் அடங்குவர். கோயில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கோவிலுக்குரிய நெல்லைக் கொடுக்காமல் ஏமாற்றுபவர்கள் பலர். ஆலயங்களில் உள்ள பொருள்களைக் கொள்ளை அடிப்பவர்கள் பலர். கோயில் நிலங்களில் உள்ள வீடுகளில் வசித்துக்கொண்டு வாடகை தராமல் ஏமாற்றுபவர்களும் உண்டு. பலர் நெடுங்காலமாக அவற்றில் இருந்துகொண்டு ரூ பத்து முதல் முப்பது வரை வாடகை கொடுப்பவர்களும் உண்டு. முக்கிய நகரங்களின் பிரதான இடங்களில் கோவில் வீடுகளில் இப்படி ஆக்கிரமித்துக்கொண்டும் ,வாடகையை நிர்வாகம் கேட்டால் ,கோர்ட்டுக்கு இழுத்தடிப்பதுமாக அநியாயங்கள் தொடர்கின்றன. கோயில் வீடுகளை அவற்றில் வசிப்பவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்கள். கோயில் நிலங்களை சிலர் பிளாட் போட்டு விற்கத் துணிந்துவிட்டார்கள்.

தெய்வத்தை ஏமாற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் இப்படிப்பட்ட பாவங்களை செய்ய முன்வருகிறார்கள். இவர்களை " மாபாவம் செய்த கொடிய பஞ்சமாபாவிகள்" என்கிறார் நவரத்தின மாலை ஆசிரியர். சிவன் சொத்து குல நாசம் என்று ஒரு பழமொழி உண்டு. சிவசொத்தை அபகரித்தவர்களின் குடும்பங்கள் வேரோடு அழிந்து நாசமாவதைப் பலர் கண்டும் கேட்டும் இருக்கலாம்.

கோட்புலி நாயனார் என்ற சிவபக்தர் திருவாரூருக்கு அருகிலுள்ள நாட்டியாத்தாங்குடி என்ற ஊரில் வசித்து வந்தார். சிவாலய நெல்லைத் தனியாகவும் தனது குடும்பத்திற்கான நெல்லைத் தனியாகவும் சேகரித்து வைத்திருந்தார். யுத்த காலத்துக்கு அவர் போயிருந்தபோது கடும் பஞ்சம் வந்தது. வீட்டுக்காக வைத்திருந்த நெல் பூராவும் செலவழிந்துவிட்டது. மறுபடியும் நெல் விளைந்தவுடன் கோவிலுக்குத் திருப்பித்தந்து விடலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், சிவாலயத்தின் நெல்லை எடுத்துச் செலவழிக்க ஆரம்பித்தனர். போர் முனையிலிருந்து திரும்பிய நாயனார்,இதைக் கேள்விப்பட்டவுடன் கோபம் கொண்டு, அவர்களை சிவ துரோகிகள் எனக்கருதி தனது வாளால் ஒவ்வொருவரையும் வெட்டினார். கடைசியாக இருந்த குழந்தையையும் ,சுவாமியின் நெல்லை சாப்பிட்ட தாயின் பாலைக் குடித்த பாவம் செய்ததாகக் கருதி உடை வாளால் வெட்டினார். அப்போது ஆகாயத்தில் விருஷப வாகனத்தில் உமா தேவியோடு ஸ்ரீ பரமேச்வரன் காட்சி கொடுத்து அவரையும் அவரது குடும்பத்தையும் உய்யக்கொண்டார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

எனவே, இனிமேலாவது, சிவத்ரோகம் செய்யாமல் தர்ம வழியிலேயே சம்பாதித்து, அதன் பயனாக சிவ தர்மங்கள் செய்ய , தவறு செய்தவர்கள் மனம் திருந்தி முன் வரவேண்டும். "குற்றம் பொறுத்த நாதர்" என்று கருப்பறியலூர் என்ற ஸ்தலத்தில் சுவாமிக்குப் பெயர் உண்டு. பிழை பொறுக்கும்படி மனம் உருகி வேண்டினால் நிச்சயமாக மன்னிப்பும் பெறலாம்.