கோயில் சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதையும், துஷ் பிரயோகம் செய்யாமல் இருக்கச் செய்யவும் ,வருவாய் ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என்பதையும் மேற்பார்வை இடுவதற்கு அரசுத் துறை தேவை என்று சொல்லிக் கொண்டு மேற்கண்ட எதையும் சரிவரச் செய்யாமல் இருப்பதோடு சிப்பந்திகளின் நலனில் அக்கறை இல்லாமல் செயல் படுவது எதற்காக ?
கோயில் நகைகள், விவசாய நிலங்கள் , மனைக் கட்டுக்கள், உண்டியல்கள் ஆகிய எல்லாவற்றிலும் கை வைக்கத் தவறாததோடு விக்கிரகங்களைக் களவாடவும் துணிந்துவிட்ட போது இனிமேலும் இந்தத் துறை வேண்டுமா என்று கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும் ?
அதிகாரிகள் மாதம் தவறாமல் சம்பளம் வாங்குவதோடு பல வசதிகளையும் கோயில் வருமானத்திலிருந்து பெறும்போது முந்நூறும் நானூறும் சம்பளம் வாங்கும் சிப்பந்திகளின் வயிற்றில் ஏன் அடிக்கிறார்கள் ? பல ஆண்டுகளாக இந்த சொற்ப சம்பளமும் வழங்கப்படாத கோயில்கள் அநேகம். இந்த லட்சணத்தில் ஏதோ எஜமான்கள் போல நினைத்துக் கொண்டு சிப்பந்திகளை மிரட்டுவது நியாயம் தானா ?
ஆலயத்தில் ஏதேனும் களவு நேர்ந்து விட்டால் சிப்பந்திகள் மீது களவுப் பட்டம் சூட்டிக் காவல் துறையிடம் காட்டிக் கொடுப்பவர்கள் இந்த அதிகாரிகள். லஞ்சம், விக்கிரகத் திருட்டு போன்ற பல குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு நீதித் துறையால் தண்டிக்கப்பட்டவர்களை மீண்டும் உயர் பதவியில் பணி நியமனம் செய்யும் துறையிடம் இனிமேலும் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?
இவர்கள் மனது வைத்தாலே அற்ப சம்பளம்( பிச்சை ?) பெற முடியும் என்ற நிலையிலும் இறைவனுக்காகவே தொண்டாற்றும் அர்ச்சகர்களை அறுபது வயது ஆனால் ஈவிரக்கம் இல்லாமல் வெளியேற்றுவது வெட்கக் கேடு. நிலத்திலிருந்து வருமானம் வந்தால் தான் சம்பளம் என்று சொல்லத் தெரிந்த அதிகாரிகள் அந்த வருமானத்தைப் பெற்றுத் தராதது என்? முடியாவிட்டால் அவர்களுக்கு மட்டும் ஏன் சம்பளம் கொடுக்க வேண்டும் ? உரிய நேரத்தில் நெல்லை விற்று கோயிலுக்குச் சேர்த்துவிட்டு சிப்பந்திகளுக்கும் சம்பளம் தராமல் இழுக்கடிக்கிறார்கள். டெண்டர் விடுவதில் முறைகேடுகள் செய்யத் தெரிந்தவர்களுக்கு கோயில் திருப்பணிக்கு உதவ மனம் வராது. வெளியார் திருப்பணி செய்து கொடுக்க இவர்களிடம் மண்டியிட்டு அனுமதி பெற வேண்டும். பல ஆண்டுகள் இதற்கு இழுத்தடித்தாலும் எதுவும் செய்ய முடியாது. விரைவாக அனுமதி வேண்டினால் தனியாகக் கவனிக்க வேண்டும் என்பார்கள். இவ்வளவு ஏன்? திருப்பணி நடைபெறும்போது கோவில் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள் கும்பாபிஷேகம் செய்ய அனுமதி பெற வேண்டும் என்பார்கள்.
கோயில்களில் உற்சவ விக்கிரகங்கள் இருந்துவிட்டால் போதும். பாது காப்பு என்ற பெயரில் அத்தனையையும் எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள். இல்லாவிட்டால் களவுபோனால் பொறுப்பு ஏற்பேன் என்று எழுதித் தரும்படி அர்ச்சகரை மிரட்டுவார்கள். சுவாமி என்ற எண்ணமே இல்லாமல் உற்சவர்கள் தர தர என்று இழுக்கப்பட்டு வேனில் ஏற்றப்படுவதைக் கண்டால் கண்ணில் இரத்தம் வடியும். இந்துக்கள் அல்லாதவர்கள் இத்துறையில் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் நாம் எதை எதிர் பார்க்க முடியும் ?
சில நாட்கள் முன்பு தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள கண்டியூரில் பல்லாண்டுகளாகப் பணி செய்யும் வயதான அர்ச்சகரை மிரட்டி இம்மாத முடிவோடு நின்று விடும்படி சொன்னதாகவும், அவரால் பயிற்சி செய்யப்பட்டு சில ஆண்டுகளாகப் பணியாற்றும் இன்னொருவரை அதற்குப் பிறகு தொடர்ந்து பணியாற்றத் கூடாது என்றும் வேறிடத்திற்கு மாற்றல் செய்து விடுவோம் என்றும் கூறியதாகச் செய்தித்தாள் மூலம் அறிகிறோம். இவ்வாறு செய்வதற்கான அதிகாரம் அற நிலையத்துறைக்கு உண்டா என்பதை நீதி மன்றமே தெளிவு படுத்த வேண்டும். அறுபதாண்டு ஆன அர்ச்சகரை வீட்டுக்கு அனுப்புவது என்பதும் அபாண்டமான செயல். இந்த உத்தரவை திரும்பப்பெறுமாறு நீதிபதிகள் நீதி வழங்குவர் என்று நம்புகிறோம்.
மாமனாக வந்து வழக்கு உரைத்த மதுரைப் பெருமானையும், காஞ்சியில் நீங்காது உறையும் வழக்கறுத்தீசுவரப் பெருமானையும், கண்டியூர் வீரட்டேசப் பெருமானையும் வணங்கி , அவன் தாளே துணையாக சென்னியின் மேல் இருத்துவோமாக.