தஞ்சைப் பெரிய கோவில் சர்ச்சை
சிவபாதசேகரன்
எதற்கெடுத்தாலும்
சர்ச்சையைக் கிளப்பி எதிர்ப்பைத் தெரிவித்து மக்களைக் கவரும் முயற்சி சிறிது காலமாகவே
நாடு முழுதும் நடந்து வந்தபோதிலும் தமிழ்நாட்டில்
மொழி ,இனம் ஆகிய பெயர்களில் அதிகமாகவே காணப்படுகிறது. சமய உலகையும் இது விட்டு வைக்கவில்லை.
இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வரும் 5.2.2020 அன்று தஞ்சைப் பெரிய கோவிலில் நடைபெற
இருக்கும் வேளையில் அதனைத் தமிழ் மொழியில் தான் செய்ய வேண்டும் என்று அரசியல் வாதிகள்
சிலரும் ஆத்திகத்திற்கு சம்பந்தமே இல்லாத சிலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இதற்கான
அடிப்படைக் காரணங்களைப் பலரும் விவாதித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
எதிர்ப்புக்கான
முதல் காரணம் வடமொழித் துவேஷம். இதற்கு முன்னர்
நடைபெற்ற கும்பாபிஷேகங்கள் தமிழ் மொழியில் செய்யப்பட்டனவா
என்று முதலில் இவர்கள் விளக்கட்டும்.
கடவுள் இல்லை
என்று சொல்பவர்களுக்கு ஏன் இந்த அக்கறை ? பின்புலத்திலிருந்து தூண்டி விடும் தீய சக்திகள்
இருக்கிறார்களா? அதனால் எவ்வகையில் இவர்கள் ஆதாயம் பெறுகிறார்கள் ?
தமிழில் கும்பாபிஷேகம்
செய்வதற்கான விதிகள் அடங்கிய பழங்கால நூல்கள் இல்லை என்பதால் அது மொழியின் குறை இல்லை.
வடமொழியில் உள்ள ஆகமங்களை இத்தனை காலமும் பின்பற்றிவிட்டு இப்பொழுது தமிழில் செய்தாலென்ன
என்று கேட்பதால் சர்ச்சையைக் கிளப்பவேண்டும்
என்ற ஒரே நோக்கம் வெளிப்படையாகவே தெரிகிறது.
ஊர் இரண்டு பட்டால்
யாருக்கோ கொண்டாட்டம் என்று சொல்வார்கள். வெறும் வாயையே மெல்லும் தொலைக் காட்சிகளுக்கு
அவல் கிடைத்துவிட்டது. விவாதப்பொருள் ஆக்கி
மக்களை வேடிக்கை பார்க்கச் செய்கிறார்கள்.
வைணவக்கோயில்களிலும்
இதுபோலவே திவ்வியப்பிரபந்தம் மூலம் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்.
கோர்ட்டுக்கும் போவார்கள். தடை தரத் தயாராக நீதி மன்றங்கள் இருக்கும் நிலையில் இவர்கள்
எண்ணியது எளிதாக நடைபெற்று விடும்.
கோயில் சொத்துக்களைத்
திருடுபவர்கள் குரல் கொடுப்பதைப் பார்த்தால் திருடனை விரட்டிக்கொண்டு ஒடுபவர்களோடு
உண்மைத் திருடனும், “ திருடன்,திருடன் “ என்று
கூவிக் கொண்டு அவர்களோடு ஓடுவது போல இருக்கிறது.
ஒன்று மட்டும்
நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேத மந்திரங்களால் செய்யப்படுவது கிரியை. ஆனால்
திருமுறைகள் என்பவை பக்தி இலக்கியங்கள். இறைவனைப் போற்றித் துதிப்பனவாக நமக்குக் கிடைத்த
அரும் பொக்கிஷங்கள். நமக்கு இரண்டும் வேண்டும் என்று சொல்வதே உண்மையான அடியார்களுக்கு
இலக்கணம். “ ஓம் என்று மறை பயிலும் “ என்றும் “ ஆகமமாகி அண்ணிப்பான் “ என்றும் “ ஆகமசீலர்க்கு ஓர்
அம்மானே “ என்றும் வரும் திருமுறை வாக்கியங்கள் ஆகமம் அருமறைப் பொருளாவதைச் சுட்டிக்
காட்டுகின்றன.
தமிழன் கட்டிய
கோயிலில் வடமொழி எதற்கு என்பவர்கள் , மகுடாகமத்தைப்
பின்பற்றிக் கும்பாபிஷேகம் செய்ததாக இராசராசனே கல்வெட்டில் பொறித்து வைத்திருப்பதைப்
பார்த்தாவது, அம் மாமன்னன் தமிழையும் வடமொழியையும் பேதமின்றிப் பேணியதை அறிந்து கொள்ளலாமே
. பெருவுடையார் என்ற பெயரை பிரகதீஸ்வரர் என்று மொழி பெயர்த்து விட்டார்கள் என்று கொந்தளிப்பவர்கள்
ராஜராஜன் என்ற பெயர் தமிழ்ப் பெயரா என்பதை விளக்கட்டும்.
தமிழில் பற்று இருப்பதைப் போலக் காட்டிக் கொள்பவர்களில்
கோவில் பக்கமே வராதவர்களும் தேவாரத் திருமுறைகளைக் கற்காதவர்களும் உண்டே ! இந்த லட்சணத்தில்
விவாதம் செய்ய மட்டும் முந்திக் கொண்டு வருவது பரிதாபத்திற்குரியது. தமிழையே தாங்குவது
போல நடிப்பவர்கள் பள்ளிக்கூடங்களில் தமிழின் நிலை பற்றி ஏன் பேசுவதில்லை? அது வியாபாரம் என்ற காரணத்தினாலா
வைதீகமும் சைவமும்
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. திருஞான சம்பந்தரது திருவவதார நோக்கத்தைக் கூற வந்த சேக்கிழார் பெருமான்
, “ வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க “ என்று தெளிவு படக் கூறியுள்ளார்.
மேலும் ,
“ வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் “ என்று இறைவனைத் தேவாரம் துதிக்கிறது.
உள்நோக்கம் இல்லாமல் இவர்கள் ஆகம வழியை நிந்தித்து
எதிர்க்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. இக்கோயில் பரம்பரைத் தர்மகர்த்தாக்களான தஞ்சாவூர் சமஸ்தானத்திடமும், மத்தியத்
தொல் பொருள் ஆராய்ச்சித் துறையிடமும் உள்ளது. தவிரவும் உலகப் பாரம்பர்ய சின்னமாகவும்
போற்றப்படுகிறது. தமிழன் கட்டிய கோயில் என்றும்,திராவிடக் கலைக்கூடம் என்றும் பெருமிதம்
கொள்வதில் தவறில்லை. கும்பாபிஷேகம் முடிந்த மறுநாள் முதல் கோவிலுக்கு வருகை தரப் போகிறவர்கள்
பக்தர்களும், கலைப் பிரியர்களும் மட்டுமே. இந்த எதிர்ப்பாளிகளின் குரல்கள் ஓய்ந்து
விடும். இதற்குத்தான் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள். அதற்குப்பின் கோவிலைப் பற்றிக்
கவலைப் படாமல் வேறெங்காவது நாத்திகம் பேசியும் , வடமொழியை இழித்துப் பேசியும் வயிறு
வளர்க்கும் பிறவிகள் இவர்கள் . இந்த ஈனப் பிழைப்பு இவர்களுக்குத் தேவையா ? இறைவன் அவர்களுக்கு நல்ல அறிவை வழங்கட்டும்.
எத்தனையோ பழங்காலக் கோயில்கள் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகக் கும்பாபிஷேகத்திற்காகக் காத்திருக்கும்போது, இருபத்துமூன்று ஆண்டுகள் காத்திருந்ததோடு இன்னும் சற்றுக் காத்திருந்து மரபு வழியில் கும்பாபிஷேகம் செய்யலாம் என்று தோன்றுகிறது. இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் இந்த எதிர்ப்புக்களை அடுத்த தலைமுறையினர் எளிதாகச் சமாளித்து விடுவர். தடைக்கற்கள் தானாகவே மாண்டுவிடும். இல்லையேல் தகர்த்தெறியப்படும். அதுவரையில் பொறுமை காப்பதோடு அப்பொன்னான தருணம் சீக்கிரமே வருமாறு எல்லாம்வல்ல பெருவுடையாரைப் பிரார்த்திக்கிறோம்.