சோழ நாட்டில் உள்ள பல சிவாலயங்கள் மிகப் பிரம்மாண்டமான விஸ்தீரணத்துடன்
கட்டப்பட்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள்.சில எடுத்துக்காட்டுகளாகத்
திருவாரூர்,திருவிடைமருதூர்,மயிலாடுதுறை, சிதம்பரம், நாகை, சீர்காழி,வேதாரண்யம்
போன்ற ஊர்களில் உள்ள கோயில்களைக் கூறலாம். ஊரிலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்பவோ, மகிமைக்கு
ஏற்பவோ இவ்வாறு பல பிராகாரங்களோடு கூடிய மிகப் பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டன.
காலப்போக்கில் மக்கள் இடம் பெயரும் போது வருவோர் எண்ணிக்கை குறைய நேரிட்டது . மக்கள்
ஆதரவு குறைவதால் பராமரிப்பில் மந்த நிலை ஏற்படுகிறது. விஷமிகள் ஆக்கிரமிப்பு
செய்யும் அளவுக்குச் சில ஆலயங்களில் ஊடுருவல் நடைபெறுகிறது.
எப்போதாவது இதுபோன்ற கோயில்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள், பெரிய
பிராகாரங்களில் ஈ, காக்காய் கூட இல்லையே என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.
இந்நிலைக்குத் தன்னைப் போன்றவர்களும் காரணம் என்பதை உணராமல் மேலேழுந்தபடியாகப்
பேசும் பேச்சு இது! பழைய பொலிவை ஏற்படுத்த முடியாவிட்டாலும், இதுபோன்ற கோயில்களின்
பராமரிப்பிற்காவது உதவக் கூடாதா ? தனக்கென்ற செலவுகளில் பல வீண் செலவுகளாக
இருந்தபோதிலும், செலவழிக்கத் தயங்குவதில்லையே ஆனால் தருமம் என்னும்போதில்
மட்டும் கைகள் முடங்கிவிடுகின்றன.
கோயில்களுக்கு என்னவோ தலபுராணச் சிறப்புக்கள் பல இருந்தும், தினசரி
வழிபடுவோர் இன்றி,தலயாத்திரை செய்ய வருவோரை நம்பியே இன்று அவை விளங்குகின்றன.
பெயர் அளவிற்கே அர்ச்சனை,அபிஷேகம் ஆகியவை செய்ய முன் வருகின்றனர். இதற்குத் தேவைப்படும்
பொருள்கள் அநேகமாக வீட்டுக் கொல்லையிலே கிடைப்பனவாக இருந்தாலும் அவற்றை இறைவனுக்கு
அர்ப்பணிக்க முன்வருவதில்லை. பாடல் பெற்ற தலங்கள் பலவற்றிலும் இதேநிலைதான்! காரணம்
அவை பெரும்பாலும் கிராமங்களிலேயே இருப்பதுதான் !வெளியூர் அன்பர்கள் திருப்பணி செய்ய உதவினாலும் தினமும் ஆலயத்திற்கு வருகை தர வேண்டியவர்கள் அந்தந்த ஊர் மக்கள் தானே !
விடியற்காலையில் வீட்டின் அருகே உள்ள ஆலயத்திற்குச் சென்று
பெருக்கியும் மெழுகியும்,கோலம் போட்டும்,விளக்கேற்ற எண்ணையும் வழங்கியவர்கள்
இப்போது அங்கு அநேகமாக இல்லை! கோயிலில் பனி செய்வதையும் வழிபாடு செய்வதையும்
தினசரி கடமையாக அவர்கள் கருதி வந்ததால் கோயில்கள் பொலிவுடன் திகழ்ந்தன. பல்வேறு
காரணங்களால் இவை தடை பட்டுப் போயின. பல இடங்களில் கோயிலைக் கவனிக்க அர்ச்சகர்
குடும்பம் மட்டுமே ஊரில் இருக்கிறது. மற்றவர்கள் தனக்கு சம்பந்தம் இல்லாதது போல்
இருந்து விடுகிறார்கள். இதன் விளைவே கோயில்கள் வெறிச்சோடியிருப்பதற்குக் காரணம்.
இப்படிக் கைவிடப்பட்ட நிலையிலும்,விழாக் காலங்களிலும்,பிற விசேஷ
தினங்களிலும் ஊர் மக்கள் கோயிலுக்கு வருகை தருகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை.
அப்படி வருபவர்கள் ஆன்மிகம் பற்றி மிகக் குறைவாக அறிந்தவர்களாகக் கூட இருக்கக்
கூடும். வேடிக்கை பார்க்க வந்தவர்களாகவும் இருக்கலாம். திருவிழாவை முன்னிட்டு
அமைக்கப்படும் கடைகளில் பல பொருள்களை வாங்குவதற்காக வந்தவர்களாகவும் இருக்கலாம்.
இருக்கட்டுமே! அதில் என்ன தவறு ? அறியாமலேயே செய்யப்படும் புண்ணியமாக இருக்கட்டுமே
!
திருவாரூர் கும்பாபிஷேகம்- நன்றி-வலைத்தளப் படம் |
தங்கள் ஊர் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கப்போகிறது என்று தெரிந்தவுடன்
அவர்களுக்கு ஈடுபாடு தானாகவே வந்து விடுகிறது. பரம ஏழையும் தன்னால் முடிந்ததை
அர்ப்பணிக்கிறான். உடல் வருத்தம் பாராமல் கும்பாபிஷேகத்திற்கு முன்னாள் இரவு கண்
விழித்துப் பங்கேற்கிறான். அவன் எதிர்நோக்குவதெல்லாம் மறுநாள் பொழுது சீக்கிரமே
விடிந்து விமான கலசங்களுக்கு விடப்படும் கலச நீர்த் திவலை தன் மீதும் படாதா
என்பதுதான். ஆவலோடு ஆகாயத்தை மற்றவர்களோடு சேர்ந்து பார்க்கிறான்- கருடன்
அக்கும்பாபிஷேகத்தைக் காண வந்து மும்முறை விமானத்தை வலம் செய்துவிட்டு அடுத்த
வினாடி விண்ணில் மறைவதை.
சப்த ஸ்தான பல்லக்கு-திருச்சோற்றுத்துறை |
எனவே ஆலயங்களில் மக்கள் கூட வேண்டும் என்றால் அங்கு ஏதாவது ஒரு ஆன்மீக
நிகழ்ச்சி நடைபெற்றே ஆக வேண்டும். அது உழவாரப் பணியாக இருக்கலாம். லக்ஷார்ச்சனையாக
இருக்கலாம். வீதி உலாவாகவும் இருக்கலாம். விசேஷ தினமாகவோ, திருவிழாவாகவோ
இருக்கலாம். அடிப்படைக் கருத்துக்களை வழங்கும் சொற்பொழிவுகளாக இருக்கலாம். குடமுழுக்கு நடைபெற்ற தினத்தில் மறு
கும்பாபிஷேகம் நடைபெறும் வரை செய்யப்படும் சம்வத்சராபிஷேகமாகவும் கூட இருக்கலாம்.
ஐம்பது ஆண்டுகளாகியும் திருப்பணியோ கும்பாபிஷேகமோ செய்யாமல், பன்னிரண்டு
ஆண்டுக்கொருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று யார் சொல்வது என்று வினா
எழுப்புபவர்களுக்கு என்ன சொல்வது ? அறியாதவர்களுக்கு மட்டுமே பிரமாண வாக்கியங்கள்
மூலம் எடுத்துக் காட்டலாம். அறியாதவர்கள் போல இருப்பவர்களுக்கு எப்படிச் சொல்வது?
நிகழ்ச்சிகள் நடத்தப்பெறுவதற்கு நிதி வேண்டுமே என்று கேட்கலாம். தாமாகவே
முன்வந்து நிதி தந்த காலம் போய் விட்டது. ஊர் கூடிக் கலந்து ஆலோசிக்கும்போது, நிதி
தர முன்வருவோர் பலர். இதை நம்முடைய அனுபவத்தில் பார்க்கலாம். வலைத்தளம் மூலம்
விண்ணப்பித்தால் உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வேண்டிய நிதி பெறப்படுகிறது. நாம்
செய்ய வேண்டுவதெல்லாம் ஊரைக் கூட்டுவது ஒன்றுதான். இந்த ஒற்றுமை, கோயில் சொத்தை
அபகரித்தவர்களையும் சிந்திக்க வைக்கும் அல்லவா ?