ஊர் கூடித் தேர் இழுப்போம் |
நல்ல பலன்களை எதிர்நோக்கியே செயல்களைத்
திட்டமிட வேண்டியிருக்கிறது. நடப்பது நடக்கட்டும் என்று மனம் போன போக்கில் எல்லாம்
செய்து வந்தது போதும் வாழ்க்கைப் பாதையைச்
சற்று மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியது இன்றைய அத்தியாவசியம் ஆகிவிட்டது. கடமையைச்
செய்பவர்களும் பலனை எதிர்பார்த்தே இருக்கும் நிலையைப் பார்க்கிறோம். சமுதாயத்திற்கென்றே
ஏற்பட்ட சமயமும் அவ்வாறே செயலாற்ற வேண்டி உள்ளது.
எந்த விழாவாக இருந்தாலும்,
கருத்தரங்கமானாலும் அவை உயர்ந்த நோக்கங்களைக் கொண்டதாக அமைதல் முக்கியமானது.
இல்லையேல் அவை பொழுது போக்கில் முடிந்து எந்தப் பலனையும் தராமல் இருந்து விடும்.
விழா, கருத்தரங்கம்,மாநாடு நடத்துபவர்கள் சில சமயங்களில் இவ்வுட் கருத்தை ஏனோ
மறந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கும், வருகை தருபவர்களுக்கும் பொன்னான
நேரம் வீண் ஆவதே மிச்சம்.
மாநாடு நடத்துவதால் மக்கள் என்ன பலனை
அடைகிறார்கள் என்று சிந்திப்போம். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்
இளையாத்தங்குடியில் காஞ்சி பெரியவர்கள் வேத-சில்ப-ஆகம சதஸ் என்ற பெயரில் ஒரு
மாநாடு நடத்தினார்கள். அதனால் ஏற்பட்ட நற்பலன்கள் அனைவரும் அறிந்ததே. அதேபோல் பாவை
மாநாடு நடத்தித் தமிழ்ப் பாக்களில் ஆர்வம் ஏற்படுத்தினார்கள். உலக அளவில் மாநாடு
நடத்தினாலும் அதனால் விளையக் கூடிய நற்பலன்கள் இருக்குமா என்று சிந்திக்க
வேண்டியுள்ளது. இது குறிப்பாக எந்த ஒரு மாநாட்டையும் மனதில் கொண்டு எழுதப்படுவது
அன்று.
தற்கால மாநாடுகள் அடித்தளத்தில் உள்ள மக்களுக்குச்
சென்று அடைவதில்லை என்பது உண்மை. மாநாட்டை நடத்துபவர்களுக்கு விளம்பரம்
கிடைக்கிறது. கட்டுரை வாசிப்பவர்கள் ஏற்கனவே உள்ளதை தங்கள் பாணியில் மாற்றி
அமைத்துத் தருகிறார்கள் என்பது நிதர்சனம். அதைக் கூடப் பொருட்படுத்தாமல்
இருந்தாலும் கற்பனையால் விளைந்த கருத்துக்களை சிலர் புகுத்தும் போது தங்களை வித்தியாசமாக் காட்டிக்
கொள்ள முயற்ச்சிக்கிறார்களா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு மாநாட்டில் ஒரு பேச்சாளர், “ அர்ச்சனை
பாட்டே ஆகும் “ என்று சுந்தரரிடம் இறைவன் கூறியதை அடிப்படையாகக் கொண்டு , பாடினாலே
போதும், அர்ச்சனை செய்ய வேண்டாம் என்ற விபரீதமாகக் கருத்தை வெளியிட்டதாக நண்பர்
ஒருவரின் முக்நூல் பதிவு மூலம் அறிந்தோம். அப்படியானால், எண்ணில் ஆகமம் இயம்பிய
இறைவர் கம்பை ஆற்றங்கரையில் பூஜை செய்த இறைவியிடம், நீ செய்யும் இப்பூஜை என்றும்
முடிவதில்லை என்று அதனை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டதாக அதே பெரிய புராணம் தரும்
செய்தியை அந்த “ அறிஞர் “ அறியவில்லையா ? இது போன்ற முரணான கருத்துக்களை மக்களிடம்
திணிக்கவா மாநாடுகள் நடக்க வேண்டும் ?
நடைபெறும்மாநாடுகளில் பெரும்பாலும் ஏற்கனவே
கௌரவிக்கப்பட்டவர்களுக்குச் சால்வைகள்
போர்த்துவதும், பட்டங்கள் கொடுக்கப்படுவதும், பிரபலங்களை அழைத்துத் தலைமை தாங்கி
உரை நிகழ்த்தச் செய்வதும் வாடிக்கை ஆகி விட்டது. இவை மூலம் நாம் பெறப் போவது என்ன?
இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் அடி மட்டத்திற்குச் சென்று மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றத் தயாராக இருக்கிறார்கள்? எல்லாவற்றிற்கும் அடிப்படையான பக்தி இவர்களிடம் அநேகமாக இல்லாமல் போனது ஏன்? வெறும் புரட்டு வாழ்க்கை தேவை தானா ? ” கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே “ என்று அப்பர் பெருமான் அருளியது நினைவில் வரவில்லை போலும்! நாம் செய்யும் தொண்டை இறைவன் எழுதி வைத்துக் கொள்வான் என்று உதட்டளவில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் செய்து காட்டலாமே!
இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களில் எவ்வளவு பேர் அடி மட்டத்திற்குச் சென்று மக்களுக்கும் மகேசனுக்கும் தொண்டாற்றத் தயாராக இருக்கிறார்கள்? எல்லாவற்றிற்கும் அடிப்படையான பக்தி இவர்களிடம் அநேகமாக இல்லாமல் போனது ஏன்? வெறும் புரட்டு வாழ்க்கை தேவை தானா ? ” கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே “ என்று அப்பர் பெருமான் அருளியது நினைவில் வரவில்லை போலும்! நாம் செய்யும் தொண்டை இறைவன் எழுதி வைத்துக் கொள்வான் என்று உதட்டளவில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் செய்து காட்டலாமே!
உயரத்திலேயே பறந்து கொண்டு இருந்தது போதும்.
கொஞ்சம் கீழே இறங்கி வர வேண்டிய தருணம் இது. பாமர மக்களைச் சென்று அடைவதாக நமது
செயல்கள் ஒவ்வொன்றும் திட்டமிடப் பட வேண்டும். காலம் தாழ்த்தினாலோ,உதாசீனப்
படுத்தினாலோ அவர்கள் நிரந்தரமாக விலகிவிடும் அபாயகரமான கால கட்டத்தில் நாம்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறக்கலாகாது. எனவே பட்டி தொட்டிகளுக்குச் சென்று
‘ பட்டியாய்ப் பணி செய்ய “ வேண்டிய தருணத்தில் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது.
நித்திய
வழிபாடு ஆகட்டும், திருப்பணி ஆகட்டும்,
கும்பாபிஷேகம் ஆகட்டும், பாமரர்களையும் அரவணைப்போம். அவர்கள் நிச்சயமாகத் தோள்
கொடுக்க முன்வருவர். ஊரே கூடித் தேர் இழுக்க வருவதுபோல் உற்சாகத்தோடு வர அவர்கள்
காத்திருக்கிறார்கள். இப்போதைய அவசரத்தேவையான அதனைச் செயலாற்றுவோம். மற்றவை சிறிது
காத்திருக்கலாம்.