Tuesday, February 20, 2018

நீதி விரைவில் கிடைக்கட்டும்

நன்றி: திரு ராஜேந்திரன்,முக நூல் பதிவு 
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் பெரும்பாலும் பாதுகாப்பு அற்றவைகளாகவே உள்ளன. ஏராளமான கலைச் செல்வங்களை இழந்தும் இன்னும் பாடம் கற்காதது பரிதாபமே. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உற்சவ மூர்த்திகளை எடுத்துச் சென்று அந்தப்பகுதியில் உள்ள பெரிய கோயில்களில் வைத்துப் பூட்டுவது தான். ஆலயம் இருக்கும் இடத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தாதது ஏன் என்று பலமுறை குரல் எழுப்பியும் இன்றுவரை பதில் இல்லை. இவ்வாறு எடுத்துச் சென்ற மூர்த்திகள் அழுக்கும் பாசியும் படிந்து ஆண்டாண்டுக் காலமாக ஓர் அறையில் வைக்கப்படுகின்றன. உற்சவர் வெளியில் சென்றால் திரும்பி வரும் வரை மூலவருக்குப் பூஜைகள் செய்யாமல் கோயிலை  மூடிவிடும் ஆகம நெறிக்குப் புறம்பாகவே இவை நடை பெறுகின்றன. காணாமல் போனால் நாம் பதில் சொல்ல வேண்டுமே என்ற அச்சத்தால் சிப்பந்திகளும்,ஊர் மக்களும் வாயை மூடிக் கொண்டு இந்த அக்கிரமத்திற்குத் துணை போகின்றனர். ஆகம கலாநிதி என்று சொல்லப்படுபவர்கள்  இதுபற்றி குரல் கொடுக்காமல் இருப்பதன்  காரணம் தெரியவில்லை. 

பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து விசேஷ நாட்களில் மூர்த்திகளைக்  கொண்டுவந்து விழா நடத்த  ஆகும் செலவை யார் ஏற்க முடிகிறது ? கும்பாபிஷேகத்தின் போதாவது கொண்டு வரலாம் என்றால், கும்பாபிஷேகம் நடந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகி, மரம் முளைத்துப் போன நிலையில் உள்ள அறநிலையத் துறைக் கோயில்கள் ஏராளம். திருப்பணி, கும்பாபிஷேகம் ஆகியவற்றில் சிறிய பங்கையே ஏற்று, மீதி செலவுகளை உபயதாரர்களே செய்ய வேண்டி உள்ளது. ஆகவே, ஒரு கோயில் திருப்பணி செய்யப்பட வேண்டுமானால் உபயதார்களைத் தேடி அலைய வேண்டிய நிலை இருப்பதை இத்துறையால் மறுக்க முடியுமா ? ஒருவேளை அதெல்லாம் எங்கள் வேலை இல்லை என்று அவர்கள் சொன்னால், நித்தியபூஜைகள் நின்று போனதும், சிப்பந்திகள் வெளியேறியும், அர்ச்சகர் ஒருவரே பணி செய்தும், சம்பளமாக அவருக்கு சில நூறுகளைக் கொடுப்பதும், அதையும் இழுத்தடிப்பதும் எந்த வகையில் நியாயம் ? இவற்றிற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியது வேறு யார் என்று தெளிவுபடுத்துவார்களா ?  


பாதுகாப்புப் பெட்டகம் சென்ற மூர்த்திகளை அதிகாரிகள்/அலுவலர்கள் துணையுடன் விற்றதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமை இப்படி இருக்கும்போது யாரை நம்பி உற்சவ மூர்த்திகளைக் காப்பகத்திற்கு  அனுப்புவது? அப்படியே அனுப்பினாலும், அவை பெட்டகத்தில் இருப்பதற்கான ஆதாரங்கள் காப்பாற்றப்படும் என்பது என்ன நிச்சயம் ? சம்பந்தப் பட்ட ஆலயங்களும் அவற்றைத் திரும்பப்பெறும் எண்ணமே இல்லாமல் இருப்பதால் மூர்த்திகள் காணாமல் போவதற்கு வாய்ப்பு அதிகமாகிறது. நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக்கொண்டு காமிரா பொருத்தும் பணி சில ஆலயங்களில் நடந்து வருகிறது. தக்க பாதுகாப்பு இருந்தும், சில ஊர்களிலுள்ள மூர்த்திகளைக் காப்பகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இவர்கள் பொருத்தும் காமிராக்கள் எத்தனை ஆண்டுகள் பராமரிக்கப்படும் என்பது தெரியவில்லை. இப்போதைக்கு யார் யாருக்கு அதனால் பலன் விளைகிறதோ யாம் அறியோம். 

கல்லாலான மூர்த்திகளும் களவாடப்படும் நிலையில் அவற்றுக்கு எப்படிப் பாதுகாப்புக் கொடுக்கப்போகிறார்கள்?  பல ஆலயங்களில் சுற்றுச் சுவரே இல்லை. இதை அலட்சியம் என்று சொல்லாமல் என்ன சொல்வது ? 

நீதி மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் போது ஓரளவு ஆறுதலாக இருந்தாலும் இறுதித் தீர்ப்பு எப்போது வரும் என்று காத்து இருக்க வேண்டியுள்ளது. அதற்குள் இன்னும் எத்தனை பொக்கிஷங்கள் களவாடப்பட்டுவிடுமோ என்ற பயம் அதிகரிக்கிறது.வேலியே பயிரை மேயத் துணிந்து விட்டபடியால் இந்த அச்சம் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.  ஒருவேளை அறநிலையத்துறை வெளியேறிவிட்டாலும், ஆலயங்கள் தக்காரிடம் ஒப்படைக்கப் படும் வரையில் ஆலயங்களின் எதிர்காலம் கேள்விக்குறியே.