ஒரு காலத்தில் ஆலயத்தின் கருவறையில் இருந்த மூர்த்திகளைத்தான் மேற்கண்ட படத்தில் இந்த அவல நிலையில் காண்கிறீர்கள். விமானம்,கருவறை முதலியவற்றை ஆலமரங்கள் ஆக்கிரமித்து முற்றிலுமாக அழித்து விட்ட நிலையில் ஆல மர வேர்களின் அரவணைப்பில் காட்சி அளிக்கிறார் ஈசன். இதுபோன்று எத்தனையோ ஆலயங்கள் அழியும் நிலையில் உள்ளன. உள்ளூர் காரர்களின் அலட்சியத்தால் மட்டுமே இப்படிப்பட்ட நிலை ஏற்பட முடியும். ஆல் ,அரசு ஆகியவற்றின் செடிகள் விமானங்களிலும், சுவர்களிலும் தென்பட்டவுடனேயே அவற்றைக் களைந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா? நம் சொந்த வீடாக இருந்தால் பார்த்துக் கொண்டு இருப்போமா? இப்படிக் கைவிடுவார்கள் என்று கோயில்களைக் கட்டியவர்கள் ஒரு நாளும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது உள்ளூர்வாசிகள் தங்கள் ஊர்க் கோவிலில் பிராகாரங்களிலும், விமானங்களிலும், சுவர்களிலும் செடிகள் வேரூன்றி உள்ளனவா என்று பார்த்து, அவற்றை உடனே களைய வேண்டும். இதற்குக்கூடவா வெளியூரை நம்பி இருக்க வேண்டும்? அப்படியே வெளியூர்காரர்கள் வந்தாலும் வந்தவர்கள் ஏதாவது செய்து விட்டுப் போகட்டும் என்று இருக்கிறார்கள். உழவாரத் தொண்டு செய்பவர்களுக்கு மோர், சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் மனம் எத்தனை கிராமவாசிகளுக்கு உள்ளது ? தாங்களும் வந்தவர்களோடு இணைந்து உழவாரப்பணி செய்யாவிட்டாலும், அவர்கள் களைந்து வைத்த குப்பைகளையும் செடிகளையும் கோவிலுக்கு வெளியில் எடுத்துச் சென்று அப்புறப்படுத்தகூட மனம் வரவில்லையே !
சில உழவாரத் தொண்டாற்றும் குழுக்கள் மாதம் தோறும் ஆலயங்களில் பணி செய்கிறார்கள். அக்குழுக்களில் பெண்களும் இடம் பெறுகிறார்கள். அவர்களது பங்காவது, அக்குழுவினருக்கு உணவு ஏற்பாடு செய்தல், கோயில் விளக்குகள்,பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தம் செய்தல் ஆகியன. இவர்கள் ஆண்டு முழுவதும் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்றாலும், உழவாரப்பணி செய்த ஆலய எண்ணிக்கை கூடுகிறதே தவிர ஏற்கனவே பணி செய்த ஆலயங்களில் மீண்டும் வெட்டிய இடத்திலேயே செடிகள் முளைத்து, நாளடைவில் பிரம்மாண்டமான மரங்களாகி வேரூன்றிப் போகின்றன. திருப்பணி செய்பவர்கள் பழைய அமைப்பை மாற்றாமல் கற்களை அடையாளப் படுத்திய பின்னர் ஒவ்வொரு கல்லாகப் பிரித்து, மரத்தின் வேர்களை அப்புறப்படுத்திய பிறகு மீண்டும் அதே கற்களை அதே இடத்தில் அமைத்து மீண்டும் செடிகள் முளைக்காமல் இருக்க இணைப்பிடங்களை நிரப்பித் திருப்பணி செய்ய வேண்டியிருப்பதால் பெரும் செலவை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதெல்லாம் உள்ளூர் வாசிகளின் நெடுங்கால அலட்சியத்தால் விளைந்தது தானே !
உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு ஒரு விண்ணப்பம். நீங்கள் வசிக்கும் பகுதியில் சரிவரப் பராமரிக்கப்படாத நான்கு கோயில்களைத் தேர்ந்தெடுங்கள். ஐந்தாவது மாதம் புதியதாக ஒரு கோவிலில் உழவாரப்பணி மேற்கொள்வதை விட, முதலாவதாகப் பணி செய்த கோயிலுக்கே திரும்பச் சென்று பணியாற்றுங்கள். அப்போதுதான் இடைப்பட்ட காலத்தில் அங்கு மீண்டும் முளைத்த செடிகளை மேலும் வளர விடாமல் தடுக்க முடியும். ஆகவே ஒரு ஆண்டில் ஒரே ஆலயத்தில் மூன்று முறை உழவாரப்பணி செய்ய முடியும். எத்தனை கோயில்களில் உழவாரம் செய்தோம் என்பதைவிட, நான்கு கோயில்களில் செம்மையாகச் செய்யும் பணியே சிறந்தது அல்லவா?
வேரூன்றிப் போன மரங்களை வெட்டுவதால் பயன் ஏதும் இல்லை. மீண்டும் அவை தழைக்க ஆரம்பித்து விடுகின்றன. கருங்கற்களுக்கு இடையில் உள்ள ராட்சச வேர்களை எப்படிக் களைவது? பலவிதமாக முயன்று பார்த்தும் பலனளிக்காமல் போகவே இப்போது மருந்து வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் வேர்கள் வரை மருந்தின் தாக்கம் சென்று, சில நாட்களில் அச் செடியோ, மரமோ கருகி, அழிந்து விடுவதாகச் சொல்கின்றனர். இம்முறை பின்பற்றப்படுமேயானால் மேலும் சில கோயில்களில் பணியாற்ற முடியும்.
ஆலயத் திருக்குளத்தைத் தூய்மை செய்வதையும் அன்பர்கள் மேற்கொள்ளலாம். அதேபோல் நந்தவனப் பராமரிப்புக்கும் இயன்ற உதவி செய்யலாம். இவை யாவும் " கைத் தொண்டு " என்ற வகையில் அடங்கும். கைத்தொண்டு செய்த திருநாவுக்கரசருக்கு வாசியில்லாக் காசினைப் பரமன் அளித்ததை, " கைத்தொண்டாகும் அடிமையினால் வாசியில்லாக் காசு படி பெற்று வந்தார் வாகீசர் " என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது.