திருவாவடுதுறை சிவஸ்ரீ தண்டபாணி சிவாச்சார்யார் அவர்களின் மறைவு அன்னாரை அறிந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவர்களை சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருந்தபடியால் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதி அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எழுந்ததே இவ்வலைப்பதிவு.
தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இவர், தனது உடலில் சக்தி இருந்தவரை ஆலய பூஜைகளைத் தவறாது செய்து வந்தார் . திருவாவடுதுறை சன்னதி தெருவில் வசித்து வந்த இவர், மாசிலாமணீச்வரர் ஆலய உச்சிக்கால பூஜையை முடித்து விட்டு, சைக்கிளில் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோழம்பம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்திற்கும், அங்கிருந்து, பேராவூர், கறைகண்டம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கும் பூஜை செய்து விட்டு மதியம் சுமார் 3 மணிக்கு இல்லம் திரும்பிய பின்னரே உணவு உண்பார். மீண்டும் 5 மணிக்குப் பெரிய கோவில் பூஜைக்குத் தயாராகி விடுவார்.
இதில் பேராவூர், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோவில்கள் எண்பதுகளில் புதர் மண்டிக் கிடந்தன. மேற்கூரை பிளந்து மரங்களின் வேர்கள் தொங்கிக்கொண்டு இருந்தன. விமானங்களில் மரங்கள் வேரூன்றிக் கிடந்தன. ஆங்காங்கு பாம்புப் புற்றுகள் வேறு !. ஊர்க்காரர்கள் பெரும்பாலும் திரும்பிப் பார்க்காத நிலை.மாதச் சம்பளமும் சில நூறுகளே! பரிதாபப் படுவோர் எவரும் இல்லாத காலம் அது. எப்போதாவது பாடல் பெற்ற தல யாத்திரையாக யாராவது வந்தால் உண்டு. திருவாவடுதுறையில் உச்சிக் காலம் ஆன பிறகு அவர்களை அங்கு வரச் சொல்லித் தரிசனம் செய்து வைப்பார்.
திருவாவடுதுறைக் கோயிலில் தரிசனம் செய்து வைத்து விட்டு, கோமுக்தீச்வரர் மீது சம்பந்தர் பாடிய " இடரினும் தளரினும் " என்ற பாடலைப் பாடியபடியே பிரசாதம் கொடுப்பார். " சம்பந்த சுவாமிகளின் பெருமைக்கு ஈடு எது" என்று வியந்தபடி, நம்மையும் வியக்க வைப்பார். தை மாதத்தில் அக்கோவிலில் வரும் பிரமோற்சவத்தில் சம்பந்தருக்கு உலவாக் கிழி கொடுத்த நாளன்று அவசியம் தரிசனம் செய்யும்படி சொல்லுவார். மேலும் திருமூலரிடத்திம் அவருக்கு நிறைய பக்தி இருந்தது. ஆதீனத்தின் மீதும் , மகாவித்துவான் பிள்ளை மற்றும் உ.வே.சா. ஆகியோரிடத்தும் மிகுந்த பற்று இருந்தது. மடத்திற்குள் அழைத்துச் சென்று திருமாளிகைத்தேவர் நமசிவாய மூர்த்திகள் ஆகியோரது சன்னதிகளைத் தரிசனம் செய்து வைப்பதோடு, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் முந்தைய மடாதிபதிகளின் படங்களைக் காட்டி விளக்குவார். அப்போது சின்ன பட்டத்தில் எழுந்தருளியிருந்த ( பின்னர் 23 வது பீடாதிபதிகளாகப் பட்டம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக) சுவாமிகளைப் பசுமடத்தில் அறிமுகம் செய்து வைத்ததை எவ்வாறு மறக்க முடியும்?
திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம், அவருடன் திருக்கோழம்பம் தரிசனம் செய்வதற்காகச் செல்வது வழக்கம். அபிஷேக சாமான்களை இங்கேயே வாங்கிக் கொண்டு செல்வோம். அங்கு செல்வதற்கான பாதை அப்போது மண் பாதையாக இருந்தது. மழை நின்றவுடன் சைக்கிளில் செல்வோம். மண் பாதையானபடியால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கும். ஒரு நாள் போவதற்கே இவ்வாறு சிரமப்படுகிறோமே.இவர் தினமும் இந்த முதிர்ந்த வயதில் எவ்வாறு செல்கிறாரோ என்று வியப்பது உண்டு. கோவிலில் சிப்பந்தி எவரும் இல்லாததால் நுழைந்தவுடன் சன்னதியை சுத்தம் செய்து விட்டுத் தீபம் ஏற்றுவார். பிறகு அருகிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை தோளில் சுமந்து கொண்டு வந்து அபிஷேகம் செய்வார். உதவி செய்யலாம் என்றால், " வேண்டாம் அப்பா. மார்கழி மாதமாக இருப்பதால் நீ சுவாமிக்குத் திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும் பாடிக் கொண்டு இரு. சிறிது நேரத்தில் வேண்டிய தண்ணீரைக் கொண்டு வந்து விடுகிறேன் " என்பார். பின்னர் இருவரும் ஸ்ரீ ருத்ரம் சொல்வோம். பிறகு அம்பாளுக்கும் நடைபெறும். அதற்குப் பிறகு பேராவூர் கோவில். இப்படித்தான் அவரது தினசரிக் கடமைகள் நடைபெற்று வந்தன.
சிரமமே இல்லாமல் வேலை செய்து விட்டுக் கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கம் உள்ள இக்காலத்தவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைய வேண்டும். பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் பூஜை செய்வதற்கு ஆள் இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது.
திருக்கோழம்பம் கோவிலுக்குத் திருப்பணி ஆகி , கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நாம் வாங்கிசென்று அர்பணித்த வஸ்திரங்களை சுவாமி- அம்பாளுக்கு சார்த்தி ஆனந்தப்பட்டதை நினைவு கூர்கிறோம். அவர்களது பணியினைப் பாராட்டி திருவாவடுதுறை மகாசன்னிதானம் அவர்கள் ருத்ராக்ஷ மாலையை வழங்கியதை மிகுந்த மகிழ்ச்சியோடும் பெருமையோடும் காட்டுவார். அதுபோலவே, திருவாவடுதுறை கும்பாபிஷேகம் ஆனதும்,சந்நிதானம் அவர்கள் பதக்கமும்,சம்பாவனையும் வழங்கியதை யாகசாலையிலேயே காட்டி மகிழ்வெய்தினார்.
சிவாச்சாரியாருக்கு மிகவும் அத்தியாவசியமானவை சிவபெருமானிடத்தில் பக்தியும், ஈடுபாடும், கடமை தவறாமையும் தான் என்பதைத் தனது வாழ்க்கையில் அனுசரித்துக் காட்டிய இவர்கள் சிவலோகத்தில் பெருமானுடைய சேவடிகளைச் சென்று அடைந்து விட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாகக் கோமுக்தீச்வரருக்கு கைங்கர்யம் செய்து வந்த அவருக்கு இறைவன் முக்தி வழங்காமல் இருப்பானா? சென்னையில் மருத்துவம் பெறப் கடந்த பல மாதங்களாக வசித்து வந்த இவருக்கு திருவாவடுதுறையில் தை மாதத்தில் நடைபெறும் உற்சவத்தைக் காண வேண்டித் திரும்பச் செல்லும் எண்ணம் ஏற்பட்டது. திரும்பிய சில நாட்களில் அவர் மிகவும் விரும்பிய சம்பந்தர் பல்லக்கு உற்சவம் நடை பெற்றது. அவரது வீட்டு வாயிலோடு சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். மாலையில் இவர் கோமுக்தீச்வரரின் திருவடி நீழலை அடைந்து விட்டார். ஒவ்வொரு ஊரிலும் இவரைப் போன்று ஈடுபாடு கொண்ட சிவாச்சார்யார்கள் மேன்மேலும் தோன்றி ,இறை பணி ஆற்றுமாறு அருள வேண்டிக் கோழம்ப நாதனை மனதாரப் பிரார்த்திக்கிறோம்.