இவர் தனி நபரா ? |
சமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது ? இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.
கிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர்? அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள்? எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள்? அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா? அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை? வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத் தான் எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ ? இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா ? . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது?
சொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: "கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர் சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். " சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்: " செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் . இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் ." இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.