நேற்று ஆன்மீகப்பத்திரிகைகளை அரைகுறையாகப் படித்துவிட்டு இன்று ஆன்மிகம் பற்றித் தப்பும் தவறுமாகப் பலர் பேசியும் எழுதியும் வருகிறார்களே என்று அலுத்துக்கொண்டார் நண்பர். அவர் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் காலத்தில் யாரையும் யாராலும் திருத்த முடிவதில்லை. தான் சொல்வதே நூற்றுக்கு நூறு உண்மை என்று வாதம் செய்யத் தொடங்கி விடுவார்கள். திரும்பத்திரும்ப அதே தவற்றை மக்களிடையே பரப்பி விடுகிறார்கள்.பத்திரிக்கை ஸ்தாபனங்களே தாங்கள் வெளியிட்ட தவறான செய்திகளைத் திருத்திக் கொள்ள முன்வராதபோது, தனி நபர்களிடம் இப்பண்பாட்டை எதிர்பார்க்க முடிவதில்லை.
நவக்கிரகங்களில் ஒருவரான குரு மற்றொரு ராசிக்குப் பெயரும் போது குருபெயர்ச்சி வழிபாடுகள் கோயில்களில் நடை பெறுகின்றன. அப்போது குருவுக்கு அபிஷேக ஆராதனைகள் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன. இவர் தேவ குரு எனப்படும் பிரஹஸ்பதி பகவான் ஆவார். நவக் கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு அதி தேவதை உண்டு. அவ்வகையில், வியாழனாகிய குருவுக்கு அதி தேவதை தக்ஷிணாமூர்த்தி ஆவார். அதற்காக நவக்கிரக குருவுக்கு சார்த்தப்படும் மஞ்சள் வஸ்திரம் , கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை தக்ஷிணாமூர்த்திக்கு சார்த்தக்கூடாது. பல ஆலயங்களில் சிவாச்சாரியார்களே இத் தவற்றைச் செய்கிறார்கள் என்பது வேதனைக்கு உரியது.
தட்சிணாமூர்த்தியாக பரமேச்வரன் கல்லால் நீழலில் சனகாதியரோடு அமர்ந்ததை ஸ்காந்த புராணத்தில் விரிவாகக் காணலாம். இந்நாளில் ஆதி குருவாகிய பரமேச்வரனுக்கும் நவக்கிரக குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மக்கள் மயக்கத்திற்கு ஆளாக்கப் படுகிறார்கள்.
இன்று வெளியான தமிழ் செய்தித்தாள் ஒன்றில் " வித்தியாசமான கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி" என்ற தலைப்பில் தமிழகக் கோயில்களில் உள்ள பல தக்ஷிணாமூர்த்தி வடிவங்களின் தொகுப்பு தரப்பட்டுள்ளது. குருபெயர்ச்சிக்கும் இதற்கும் இப்படி தொடர்பு படுத்தியிருக்கிறார்கள்! ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும் என்று பார்த்தால் தஞ்சைக்கு அருகிலுள்ள தென்குடித் திட்டையில் வித்தியாசமாக ராஜ குருவாக தனிச் சன்னதியில் இருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். அங்கும் சுவாமி சந்நிதியின் கர்பக்கிருக கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி உண்டு. ஆனால் இவர் குறிப்பிடும் தனிச்சன்னதி கொண்டுள்ளவர் நவக்கிரகக் குரு ஆவார்.
இதற்கு மேலேயும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கோவிந்தவாடி சிவாலயத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும்போது " இங்கு சிவனே குருவாக இருப்பதாக ஐதீகம்" என்று எழுதியுள்ளார்கள். மற்றோர் தலத்தில் சிவ தக்ஷிணாமூர்த்தி என்று பெயராம்! இங்கு மட்டுமல்ல. எங்கும் ஆதி சிவனான பரமேச்வரன் தான் சனகாதி முனிவர்களுக்கு வேதப்பொருளை உபதேசிப்பதற்காக ஆதி குருநாதனாகக் கயிலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். இன்னமும் குழப்பம் உள்ளவர்கள் ஸ்காந்த புராணத்தைப் புர ட்டிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நண்பர் புன்னகைத்தார். இந்த விளக்கத்தால் ஏதாவது மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். கேள்வி என்னவோ நியாயம் தான். அதற்காக அப்படியே விட்டுவிடவும் மனம் வரவில்லை. நூறு பேருக்குச் சொன்னால் இரண்டு பேராவது ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற நப்பாசை தான்!