Saturday, August 24, 2013

தமிழ் எழுத்துக்களின் நிலை

தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றிப் பேசும்போதுமட்டும் எல்லோருக்கும் தொல்காப்பியம், சங்க நூல்கள், காப்பியங்கள் பற்றிய ஞாபகம் வந்துவிடும். தமிழ்  வளர்ச்சிக்குப்   பக்தி இலக்கியங்கள் ஆற்றிய தொண்டைப் பற்றி மட்டும் ஏனோ நினைப்பதில்லை. ஏராளமான  நூல்கள் இயற்றப்பட்டிருப்பினும் அவற்றைப் போற்றுவார் சிலரே. நல்ல வேளையாகச் சில உயர்ந்த உள்ளங்களின் பெருமுயற்சியால் பல நூல்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டுக் காப்பாற்றப் படுகின்றன.

வரலாற்று ஆய்வாளர்களும் யார் காலத்துக் கல்வெட்டு என்பதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர, அம்மன்னர்கள் காட்டிய இறை வழிபாடு, கோயில் பாதுகாப்பு,கோயில் திருப்பணி ஆகியவற்றில் மக்களின் கவனத்தை ஈர்க்க முற்படுவதில்லை. வரலாறு பற்றி இவர்கள் எழுதிய புத்தகங்கள் வரலாற்றைப் பாடமாகப் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக அமைகின்றன.

வட்டெழுத்துக் காலம் மாறிய பின்னர்  மக்களின் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் ஓரளவு சீரடைந்த காலத்தில் ஆட்சியாளர்களின் விருப்பத்தின் பேரில் எழுத்துக்கள் பல நீக்கப்பட்டும் புது வடிவம் பெற்றும் மாற்றப்பெற்றன.
விஞ்ஞானத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேண்டி (??) ஆங்கிலச் சொற்கள் பல மொழியாக்கம்  செய்யப்பட்டன.  இருப்பினும் ,பல ஆங்கிலச் சொற்கள் தொடர்ந்து மக்களால் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக," பஸ் " எப்போது வரும் என்று பாமரன் கூடக் கேட்கும் போது, "பேருந்து" எப்போது வரும் என்று கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதே நேரத்தில், " பஸ்" என்று சொல்லிவிட்டதால் தமிழின் மீது ஆர்வம்  இல்லாதவன் என்ற முடிவுக்கும் வந்து விடக் கூடாது.

பிற மொழிகளில் இருந்து சொற்களைத் தமிழாக்கம் செய்ய முனைகிறார்கள். சமீபத்தில் 35 வார்த்தைகள் அவ்வாறு  மொழிபெயர்க்கப்பட்டதாகப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது. அயல் நாட்டவர்கள் புகுத்தும் சொற்கள் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே. அவற்றை அப்படியே வழங்குவதே குழப்பத்தைத் தவிர்க்கும். "பேஸ்புக் " என்பதை "முக நூல்" என்று கஷ்டப்பட்டு மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். இன்னும் பார்த்தால்,அதில் வரும் "பே" என்ற எழுத்துக்கு முன்  ஆயுத எழுத்து பயன் படுத்த வேண்டும். ஆனால் இப்பொழுது ஆயுத எழுத்து போன இடம் தெரியவில்லை. பயன் படுத்துவாரும் இல்லை.
ஆயுத எழுத்தின் உபயோகத்தைத் தமிழ் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றையாவது காண்போம்:( துரதிருஷ்ட வசமாக கூகுளிலும், ஆயுத எழுத்தைக் காணோம். எனவே ஆயுத எழுத்து வருமிடத்தில் இடைவெளி விட்டிருப்பதைக் காண்க)

 ௧)திருக்குறளில் அறத்துப்பாலில் திருவள்ளுவர், "வெ    காமை" என்ற ஒரு அதிகாரத்திலுள்ள பத்துப் பாடல்களிலும் ஆயுத எழுத்தைக் கையாண்டிருக்கிறார்.
௨) " அ    தாஅன்று..."   _ நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை
௩) "  கண்ணில் நல்ல    துறும் கழுமல வள நகர்.."  - தேவாரம்
௪) " யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு  அ     திலான்" --- திருவாசகம்
௫)  திரு வெ      கா -   காஞ்சியில் உள்ள ஒரு வைணவத்தலத்தின் பெயர்.

"ஔவையார்"  என்பதை அவ்வையார் என்று எழுதுகிறார்கள். "ஔ" என்ற எழுத்தும் "அவ்"  என்ற  எழுத்தும்  உச்சரிப்பில் ஒன்று இல்லாத போது எதற்காக " ஔ " நீக்கப்படுகிறது என்று புரியவில்லை.

எழுத்துக்களைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு பல எழுத்துக்களைக் கால் வாங்கி நம் உயிரையும் சேர்த்து வாங்குகிறார்கள். திருவண்ணாமலை என்பதில் ணகரமும் லகரமும் மாற்றம் பெற்றதால் கை ஓடிவதுதான் மிச்சம்! தமிழில் தேர்வு எழுதும் குழந்தைகள் இப்படிக் கால் வாங்குவதால் , எழுதும் நேரம்  வீணடிக்கப்படுகிறது. யாராவது  சிந்திக்கப்போகிறார்களா  தெரியவில்லை.  வேறு வழி இல்லாமல் நாமும் அதையே பின்பற்ற வேண்டியிருக்கிறது.

தமிழில் வழக்கத்தில் இல்லாத சொற்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரக் காணோம்! " மச்சி" போன்ற சொற்கள் தான் புகுத்தப்படுகின்றன. வெட்கப்பட வேண்டிய விஷயம் இது.

வழக்கத்தில் இருந்த "ஷ" "ஸ" "ஹ" "க்ஷ" "ஸ்ரீ" போன்ற எழுத்துக்களை நீக்கினார்கள். கவனம் என்ற சொல்லில் இருக்கும் "க" வும் கல்வி என்ற சொல்லில் உள்ள "க"வும் ஒரே மாதிரியா உச்சரிக்கப்படுகின்றன?

"அழித்துப் பிறக்க வொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை இன்றிக் கற்கிலீர்.. "
என்று இதனால் தான்  அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் பாடினாரோ?

 பிற திராவிட மொழிகளில் இப்படி இல்லையே! தமிழ் அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். எழுத்தைக் குறைப்பதில் உள்ள ஆர்வம் , இருக்கும் சொற்களை ஆழப் படுத்துவதில் இல்லையே!  அப்போது தான் நமக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஆழ்ந்து கற்கும் பழக்கம் வரும்.  அது வரையில் "தமிழ் வாழ்க" என்று சொல்வதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சாகவே  முடியும். 

Friday, August 16, 2013

இணைய தளம் நட்புப்பூங்காவாகட்டும்

இணைய தளம் என்பது தகவல்களைப் பரிமாறும் இடமாக மட்டும் இல்லாமல் மக்களை ஒன்றாக இணைக்கும் தளமாக இருக்க வேண்டும். விவாத மேடையாகவோ , காழ்ப்பு உணர்ச்சிகளைத் தூண்டுவதாகவோ அது அமைந்து விடக்கூடாது. விஞ்ஞான முன்னேற்றம் என்பது ,விவேகத்தையும் நட்பையும் ஊக்குவிக்கும் பாலமாக இருக்கவேண்டும். பல தகவல்கள் இணையதளத்தில் பகிரப்படும்போது வரம்புகள் மீறப்படுவதைக் காணும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது.

ஒருவரது கருத்துக்கு மாற்றுக் கருத்து தெரிவிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் தெரிவிக்கட்டும். மாறாக, தனக்குத் தெரிந்த நபர்களுக்கெல்லாம் தெரியும்படி அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம் தானா? சிந்திக்க வேண்டும்.

நமக்குப் பிடித்ததெல்லாம், நமக்குச் சரி என்று தோன்றுவதெல்லாம் எல்லோருக்கும் ஏற்றுக்கொள்வதாக இருக்க வேண்டும் என்று இக்காலத்தில் எப்படி எதிர்பார்க்க முடியும்? பிறர் குறைகளை சுட்டிக் காட்டத் தயாராக இருக்கும் நாம் , நமது குறைகளைப் பிறர் சுட்டிக் காட்டும் போது  பொங்கி எழுவது ஏன் என்று புரியவில்லை. குறைகள் இல்லாதவர் நம்மில் யார் உளர்? ஆனால் இறைவனோ நமது குறைகளையும் குற்றங்களையும் பாராது குணம் ஒன்றையே கொள்பவன். இதனை,"குறை உடையார் குற்றம் ஒராய் ; கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர் களையாய்.." என்றார் ஞானசம்பந்தர் .

ஒரு பயனுள்ள தகவலை ஒரு அன்பர் பகிர்ந்துகொள்ளும் போது அதைப் படிப்பதோ அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்வதோ தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். அதற்குப் புதுச் சாயம் பூசி  உள்நோக்கம் கற்பிப்பவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அண்மையில் ஓர் அன்பர் , சைவப்பெரியார் திரு CKS அவர்கள் எழுதிய பெரியபுராண உரையைக் கணினிமூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முகவரியைத் தெரிவித்திருந்தார். அதனை விலை கொடுத்து வாங்குவதானால் சுமார் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகலாம். இந்நிலையில் இந்தச் சேவை இறைவன் தந்த வரப்பிரசாதமே. இச்செய்தியை ஒரு குழுவுக்கே அந்த அன்பர் தெரிவித்திருந்தார். இதைக் கண்ட மற்றொரு அன்பர் வடமொழியில் இருக்கும் பக்த விஜயத்தைச்  சிலர் உரையாற்றி வருவதால், பிற்காலத்தில்சேக்கிழார் அருளிய   பெரியபுராணம்  அந்த வடமொழி நூலின் மொழியாக்கமே என்று கூறி விடுவர் என்றும் கூறியதோடு, கடும் சொற்களால் தாக்கி இருந்தார்.
உண்மையில் பார்த்தால் தகவலைப் பரிமாறியவரும், அதற்கு விடை கூறியவரும் நிரம்பப் படித்தவர்கள். நிறைய ஆலயங்களைத் தரிசித்தவர்கள். நியமத்தோடு இருப்பவர்கள். சமயத்தின் லக்ஷக்கணக்கானத் தூண்களில் இவர்களும் அடங்குவர். இறைவனையோ சமயத்தையோ யாராவது பழித்தால் உள்ளம்  வெதும்புபவர்கள்.இப்படி இருக்கும்போது உட்பூசல்கள் தேவை தானா என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது இப்படிச் சர்ச்சைகளில் ஈடுபடலாமா?

கடவுளே இல்லை என்று நாத்தழும்பேற நாத்திகம் பேசுபவர்களைக் கூட மறந்துவிட்டு, நம்மவர்களையே நாம் ஏசிக்கொள்வது எந்த வகையில் நியாயம்? இந்த ஏக்கமும் தாக்கமும் , கோயில் நிலங்களின் குத்தகைப் பாக்கி வைத்துள்ளவர்கள் மீதோ, இடிந்த கோயில்களைப் பாராது இருக்கும் அற நிலையத்துறை மீதோ காட்டப்படுவதில்லையே! ஒரு கால பூஜைக்கே தவிக்கும் ஏராளமான கோயில்கள் பக்கம் நம் கவனத்தைத் திருப்பலாம் அல்லவா?

ஒவ்வொருவரும் தங்கள் பணியில் நின்று இறைவனுக்குத் தொண்டாற்றுவர். பணி செய்யாமல் மட்டும் இருந்து விடக் கூடாது. " என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர் பெருமான். பணிகள் பலவிதம். திருப்பள்ளி எழுச்சியும் அதைத்தானே உணர்த்துகிறது. வீணை வாசிப்பது, வேதமும் தோத்திரமும் இயம்புவது, தொடுத்த மலரோடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் வணங்குவது, உழவாரப்பணி செய்வது, அடியார்களைப் போற்றுவது போன்ற எத்தனையோ பணிகள் இதில் அடங்கும். இவற்றில் எந்தப் பணியும் ஒன்றுக்கு ஒன்று தாழ்ந்தது அல்ல . பெரிய புராணத்தை ஆழ்ந்து வாசித்தவர்களுக்கு அது நன்றாகப் புரியும். " எல்லா மொழியாலும்" வணங்கப்படும் ஈசனைக் குறுகிய வட்டத்துக்குள் அடக்கிக் கொள்ள முயற்சிப்பது வீணான செயல். மொழிகள் இறைவனது வடிவம் என்பர்  பெரியோர். இதில் எந்த மொழி இறைவனின் சொந்த மொழி என்றும் , எது முதலில் தோன்றியது என்றும், எந்த நூல் முந்தியது என்றும் வாதிட்டுக் காலத்தை வீணாக்காமல் ஈசன் திறமே பேணிப் பணியும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியப்பரைக் காணலாம் அன்றோ?  

இணையதளத்தில் வாதிடும் சகோதரர்களே ! உங்களிடம் சமய உலகம் நிறைய எதிர்பார்க்கிறது. உங்கள் அருந்தொண்டு திசை மாறலாகாது. உங்களது சமய நம்பிக்கை இணையற்றது. அதனை ஆக்கபூர்வமாக அடியார்களுக்கு அளித்து உதவுங்கள். சமயம் பற்றி அறிய வேண்டுமானால் மக்கள் பத்திரிகைகளையே நாட வேண்டிய  இத்  தருணத்தில் தாங்கள் முன்வந்தால் எத்தனையோ மக்களுக்கு வழிகாட்ட முடியும் என்பது நிச்சயம். அதைக் கண்டிப்பாகச் செய்வீர்கள் . திருவருள் துணை நிற்பதாக.
  

Sunday, August 11, 2013

பிரதோஷ வேளையில் அன்ன தானமா?

ஆன்மீக வளர்ச்சியில் ஆன்மீகப் பத்திரிகைகளுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். பல கோயில்களின் இருப்பிடமே தெரியாதவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இவை அமைகின்றன. மேலும் பல ஆலயங்களின் திருப்பணிகள் துவங்கவும் எழுச்சியை ஏற்படுத்த முனைகின்றன. திரும்பிப் பார்க்கவே ஆள் இல்லாத நிலை மாறி, மக்களைத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன. பரபரப்பாகவும்,வித்தியாசமாகவும் எழுத வேண்டும் என்ற வகையில் ," ஊருக்கே படி அளக்கும் ஈசன் ஓலைக் குடிசையில் இருக்கலாமா ? "  " சிலிர்ப்பூட்டும் சிங்காரவேலர் " போன்ற தலைப்புக்களைக் கொடுக்கிறார்கள். பிரபலங்களின் பூஜை அறையையும் விட்டு வைப்பதில்லை. ( இதற்கும் பிரபலம் ஆக வேண்டியது முக்கியம் போல் இருக்கிறது! ) பல சமயங்களில் கற்பனா சக்தி என்னும் குதிரையையும் தட்டி விடுகிறார்கள். ஒரு பிரபலத்தை விட்டுக் கேள்வி பதில் பகுதியில் புரட்சிகரமான விளக்கம் வேறு! சிறிது நாட்கள் கழித்து அது புத்தகமாக ஆக்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் ஜோதிடப் பகுதி இல்லாவிட்டால் எப்படி ? அதுவும் கூடவே தரப்படுகிறது.

 என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் பக்கத்தை நிரப்புவது என்ற நிலை மாத்திரம் வந்து விடக்கூடாது. ஒரு சிலர் மட்டுமே எழுத வேண்டும் என்பது வேண்டுமானால் அவர்களது பத்திரிகை தர்மமாக இருக்கலாம். அதே நேரத்தில், தவறான செய்திகள் மக்களுக்குப் போய்ச் சேரக்கூடாது என்ற உண்மையான பத்திரிகை  தர்மமும் கூடவே இருக்க வேண்டும் அல்லவா?  ஒருவேளை, தவறான செய்தி வெளியிடப்பட்டு, அதை வாசகர் யாராவது சுட்டிக்காட்டினால் அந்தத் திருத்தத்தை அடுத்த இதழிலேயே வெளியிடவேண்டும் என்ற பெருந்தன்மை எத்தனை பத்திரிகைகளுக்கு இருக்கின்றன?

தக்ஷிணாமூர்த்திக்கும் நவக்ரஹத்தில் ஒருவரான குருவுக்கும் வித்தியாசம் தெரியாமல் மஞ்சள் வஸ்திரமும் கொண்டைக் கடலை மாலையும் தக்ஷிணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளின் பரிந்துரை வேறே!

நவக்கிரகங்கள் வழிபட்ட நலம் தரும் கோயில்களைக் குறிப்பிடும்போது சனீஸ்வரன் கோயில், குரு ஸ்தலம் என்றெல்லாம் தலைப்புக் களைத் தந்து மக்களைக் குழப்புகிறது பத்திரிகை உலகம். சனைச்சரன் (மெல்ல  சஞ்சரிப்பவன்) என்ற பெயரை சனீஸ்வரன் ஆக்கி, ஈஸ்வர பட்டம் பெற்றதாகக் கதையும் எழுதி விடுகிறார்கள்.

பழைய விக்கிரகங்களில் புள்ளிகள் காணப்படுவது இயற்கையே. ஒரு ஊர்க் கோவிலில் இருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய விக்கிரகத்தில் இவ்வாறு இருந்ததை, அவர் அங்கு வந்தபோது அம்மை நோய் தாக்கியதால் ஏற்பட்ட வடுக்கள் என்று குருக்கள் சொன்னதாகத் திருத் தலங்களை யாத்திரை செய்த ஒருவர், வார பத்திரிகை ஒன்றில்  எழுதினர். அது தவறு என்று சுட்டிக்காட்டியும் திருத்திக் கொள்ள முன் வரவில்லை. மக்களுக்குத் தவறான தகவல் போனது போனதுதான்!

இதேபோல் மற்றொரு பத்திரிகையில் சிறுத்தொண்ட நாயனார்,  தான் செய்த செயற்கரிய செயலைப் பிறர் செய்ய முடியாது என்று அகம்பாவம் கொண்டதாகத் தான் கேள்விப்பட்ட தகவலை அப்படியே வெளியிட்டிருந்தார் பத்திரிகை ஆசிரியர். பெரிய புராண ஆதாரம் காட்டி அதை மறுத்து எழுதியும் பலன் இல்லை.

பிரதோஷ மகிமையைப் பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்டு எத்தனையோ பேர் அன்றைய தினம் சிவாலயங்களுக்குச் செல்கிறார்கள். ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்தி எல்லா உலகங்களையும் காப்பாற்றிய நாள் ஆதலால் , அன்று உபவாசம் இருந்து, சிவ பூஜை செய்வதும்  சிவாலய வழிபாடு செய்வதும்  முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருநாள் மாலை நேரமும் வரும் நித்திய பிரதோஷ வேளைகளிலும் சாப்பிடுவதைத் தவிர்ப்பது வழக்கம். இப்படி இருக்கும்போது, அந்த வேளையில் பல கோவில்களில் அன்ன தானம் செய்யப்பட்டு வருகிறது! பத்திரிகைகளும் இதற்குத் தூபம் போடுவதைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. கையில் பிரசாதம் கொடுப்பது , தொன்னையில் தருவது , அன்னதானம் செய்வது போன்றவற்றை உபவாச தினங்களில் செய்வதைத் தவிர்க்கலாமே!  அன்ன தானத்திற்கு ஈடு இணை இல்லைதான். அதையும் முறையாகச் செய்தால் உரிய பலன் கிடைக்கும் அல்லவா? " பிரதோஷ வைபவத்தின் போது அன்னதானமாக வழங்க வழங்க நம் வாழ்க்கை அர்த்தம் உள்ளதாகும்." என்று அர்த்தமற்ற முறையில் தவறாக விளக்கம் தரப்பட்டுள்ளது ஒரு ஆன்மீகப் பத்திரிகையில்! பத்திரிகை ஆசிரியர்  ஆன்மீகத்தில் தோய்ந்தவராக இருந்தால் இத்தகைய தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. எழுதத் தெரிந்து விட்டால் மட்டும் போதும் என்பது கதைகள் எழுதுபவருக்கு மட்டும்தான்.  காரணம் என்ன என்றால் , அதில் வரும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. ஆனால் ஆன்மீகக் கட்டுரை எழுதும்போது, தவறில்லாமல் தகவல் தரப்படுகிறதா என்று உறுதி செய்து கொள்வதே  சிறந்த பத்திரிகைக்கான  அடையாளம்.

Friday, August 2, 2013

தெய்வத் திருவுருவம்

தெய்வத்திருமேனிகளைத் தரிசிக்கும்போது  அவற்றை ஒரு கணம் அசையாதவண்ணம் இருந்தபடியே உற்று நோக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருவுருவம் நமது உள்ளத்தில் பதிந்து நீங்காது நிற்கும். மேலெழுந்தவாரியாக நோக்கினால் பல செய்திகள்  புலப்படாமல் போய்விடும். தூண்களில் காணப்படும் சிற்பங்களிலும் பல புராணச் செய்திகளும் நாம் இதுவரை  கேள்விப்படாத வரலாறுகளும் தெரிய வாய்ப்பு உண்டு.

உண்மையில் நாம் அவ்வாறு தரிசனம் செய்கிறோமா என்று பார்த்தால் நேரம் இல்லாதததைக் காரணம் காட்டி இல்லை என்றே பதில்சொல்கிறோம். நேரம் இருக்கும் போதாவது அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். மூர்த்தியின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில்  இன்ன மூர்த்தி என்று எல்லா மூர்த்திகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. யானை முகமாக இருந்தால் விநாயகர் என்றும் ஆறு முகத்தோடு இருந்தால் சண்முகர் என்றும் நான்கு முகத்தோடு இருந்தால் பிரமன் என்றும் எளிதாகக் கூற முடியும். ஆனால் ஒரு முகமும் நான்கு திருக் கரங்களும் கொண்ட மூர்த்தியைப் பார்த்தால் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதற்கு ஒரே வழி, அம்மூர்த்தியின் பின் இரண்டு கரங்களிலும் என்ன இருக்கிறது என்று உற்று நோக்க வேண்டும். சூலமும் வஜ்ரமும் இருந்தால் முருகன் என்றும், சங்கும் சக்கரமும் இருந்தால் திருமால் என்றும் மானும்  மழுவும் இருந்தால் சிவன் என்றும் சொல்கிறோம்.

சில சமயங்களில் பின் இரு கரங்களில் உள்ளவற்றைக்  கொண்டு ஊகித்தாலும், பிற அம்சங்களை நோக்கும் போது எந்த அவசரத்தில் இத திருக்கோலம் ஏற்பட்டது என்று புராண ரீதியில் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு நிலை சென்னைக்கு அருகிலுள்ள திருசூலத்தில் உள்ள திருசூல நாதர் ஆலயத்தில் தரிசிக்கும்போது  நேர்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் முக மண்டபத் தூண் ஒன்றில் உள்ள சிற்பம் தான் இவ்வாறு நம்மைக் கவர்ந்தது.

பின்னிரு கரங்களில்  மான் மழு ஏந்தி நிற்கின்றார் பெருமான். அவரது முன் இரு கரங்களில் நரசிம்மர்  துவண்டு கிடக்கிறார். அதைப்  பார்த்த மாத்திரத்தில் அம்மூர்த்தி சரபர் என்று சொல்லிவிடுவார்கள். ( ஆலய அர்ச்சகரும் அப்படித்தான் சொல்கிறார்.) இப்பொழுது சந்தேகத்துக்கு வருவோம். சரபருக்குப் பொதுவாக இறக்கைகளும் சிங்க முகமும் உண்டு அல்லவா? ஆனால் இச் சிற்பத்திலோ இறக்கைகளும் இல்லை. சிங்க முகமும் இல்லை. இரண்டு முகங்கள் இருக்கின்றன. இரு முகம் கொண்ட சரப நிலை தியானத்துடன் இருக்கிறதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் விளக்கினால் பலரும் பயன் பெறுவர்).

தூண் தானே என்று பாராமல் சென்றுவிட்டால் இது போன்ற புராண வரலாறுகள் தெரியாமல் போய் விடும். பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆலயத்தை வலம் வரும் போது இது போன்ற செய்திகள் திருவருளால் நமக்குப் புலப்படும். நந்தியாகட்டும்,துவார பாலகர்கள் ஆகட்டும், பூத கண வரிசை ஆகட்டும் , மகர தோரணங்கள் ஆகட்டும் -- இவை எல்லாம் எத்தனையோ தகவல்களை நமக்குச் சொல்லக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைத் தரிசிக்கும் பாக்கியம் இருக்க வேண்டும்.