Tuesday, April 30, 2013

விஜய வருஷ காலண்டர்


பொதுவாகவே நமது பண்பாடு அதன் தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்துவருகிறது. வாய்ச் சொல்லில் வீரர்கள் மட்டும் நிறையவே இருக்கிறார்கள்! நமது பண்பாட்டின் காவலர்கள் என்று சொல்லிக்கொள்வதெல்லாம்  மக்களது கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்க்கத்தான்! தமிழ்ப் புத்தாண்டு சித்திரையிலா அல்லது தையிலா என்ற சர்ச்சை வேறு. தமிழ் ஆண்டுகள் அறுபதின் பெயர்களை எந்தப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. சுவாமிமலையிலுள்ள அறுபது படிக்கட்டுக்கள் மட்டும் அப்பெயர்களைத்  தாங்கிக் கொண்டு இருக்கின்றன. மற்றவர்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாவது தெரிந்துகொண்டால் சரி!

தமிழ்ப் புத்தாண்டு தினமும் ஏதோ சம்பிரதாயமாக வந்த வேப்பம்பூ பச்சடி,பானகம்,நீர்மோரோடு நின்றுவிடுகிறது. சிலர் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அதே சமயம், ஆங்கிலப் புத்தாண்டைப் பாருங்கள். கண் விழித்தாவது நடு ராத்திரி 12 மணிக்கு பட்டாசு வெடித்துவிட்டு sms அனுப்பி வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். சில கோயில்கள் இரவு பூராவும் திறந்து வைக்கப் படுகின்றன. இவர்கள்  எல்லாம் சிவராத்திரிக்குக் கண் விழிக்கிறார்களோ இல்லையோ, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடுவதில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்கள்! இதெல்லாம் ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட பிறகு ஏற்பட்ட விளைவுதானே! அப்படியானால் நமது பாரம்பர்யம்,கலாசாரம் ஆகியவை எங்கே போய் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை அதெல்லாம் பழைய பஞ்சாங்கம் என்று ஒதுக்குகிறார்களா என்று புரியவில்லை. பெண்மணிகளும் இம்மாயையில் சிக்கி, வீட்டு வாயிலில் போடும் கோலத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை ஆங்கிலத்தில் வரைகிறார்கள்.

இவ்வளவுக்கும் நடுவில் நமது பண்பாட்டில் அக்கறை உள்ளவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், இன்னும் இருக்கிறார்கள் என்பதே பெருமைப் பட வேண்டிய விஷயம். நகரங்களில் வேண்டுமானால் இப்போது நடக்கும் தமிழ் ஆண்டு,மாதம்,தேதி முதலியவை தெரியாதவர்கள்  ஏராளமாக இருந்தாலும், கிராமப்புறங்களில் இன்னமும் தமிழ் மாதங்களும்,தேதிகளுமே நடைமுறையில் இருக்கிறது.  வைகாசி 15 ம் தேதி கும்பாபிஷேகம் வைத்திருக்கிறது என்றுதான் சொல்கிறார்களே தவிர அதற்கான ஆங்கிலத்தேதியைக் கும்பாபிஷேகப் பத்திரிகையைப் பார்த்தே தெரிந்து கொள்ளவேண்டும் .

கிராமத்து மக்கள் இவ்வாறு தமிழ் மாதங்களை அனுசரித்து வந்தபோதிலும் ,அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ் மாதக் காலண்டர் யாரும் வெளியிடுவதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் குறை நீங்கும்படி, சதுரா பதிப்பகம் வெளியிட்டுள்ள விஜய வருஷ காலண்டரைப் பார்த்தால் மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பக்கமாக நல்ல தாளில் நேர்த்தியாக அச்சிட்டிருக்கிறார்கள்.தெய்வங்களின் அருமையான படங்கள் ஒவ்வொரு மாத முகப்பிலும் அலங்கரிக்கின்றன. தமிழ்த் தேதிக்கு அடியில் ஆங்கில தேதியும் குறிப்பிடப்பட்டுள்ளது.விசேஷ தினங்கள், பண்டிகைகள்,நாயன்மார்களின்  குருபூஜை தினங்கள்  ,சுப முகூர்த்த நாட்கள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மேலும் விவரம் வேண்டுவோர், சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம்,சோமங்கலம்,சென்னை என்ற முகவரியிலும், 9894190999 என்ற தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். பதிப்பகத்தார்க்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும்.