சித்தர் பூமியில் அன்றும் இன்றும் அதிசயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. வானில் சென்ற சித்தர் பெருமான் கீழே, மாடுமேயப்பவனான மூலன் என்பவன் இறந்ததால் அவனைச் சுற்றி நின்று கண்ணீர் வடிக்கும் பசுக்களைக் கண்டு இரங்கி, அவனது உடலுள் புகுந்து பசுக்களின் துயரம் தீர்த்தார்.அதனால் திருமூலர் என்ற பெயரும் பெற்றார். இது நடந்தது சாத்தனூர் என்ற ஊரில். மயிலாடுதுறைக்கும் கும்பகோணத்திற்கும் இடையிலுள்ள ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தச் சிறிய கிராமம். பழங்காலத்தில் மிகப் பெரிய கிராமமாகத் திகழ்ந்து வந்தது என்பதை இதன் எல்லைக்குட்பட்டதாகக் கொண்டு திருவாவடுதுறையைப் பாடியிருப்பதை திருவிசைப்பாவின் மூலம் அறிகிறோம். சாத்தனூர் என்பதைச் சுருக்கமாகச் சாந்தை என்று சேந்தனார் குறிப்பிட்டிருக்கிறார். எனவே, திருவாவடுதுறை தற்போது 3 கி. மீ. தொலைவில் இருந்தாலும், சாத்தனூரைச் சேர்ந்ததாக இருந்தது என்று அறிகிறோம். இங்கு தனிக் கோயில் கொண்டுள்ள சாஸ்தா, பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்குகிறார். சாத்தன் என்பது சாஸ்தாவைக் குறிக்கும்.அதுவே சாத்தனூர் என்று ஆயிற்று. இந்த எல்லையில் ஐந்து சிவாலயங்களும், ஒரு விஷ்ணு ஆலயமும், உண்டு. எனவே இதனைப் பஞ்ச லிங்க க்ஷேத்ரம் என்பார்கள்.
திருவாவடுதுறையிலுள்ள கோமுக்தீச்வர ஸ்வாமி ஆலயம் மூவர் தேவாரமும் திருவிசைப்பாவும் பெற்றது. நவகோடி சித்தபுரம் எனப்படுவது. இங்குள்ள அரச மரத்தின் அடியில் யோகத்தில் அமர்ந்து திருமந்திரம் என்ற ஒப்பற்ற நூலை அருளினார் திருமூலர். தனது தந்தை செய்யும் சிவ யாகத்திற்காகப் பொருள் வேண்டி, ஞானசம்பந்தரும் இறைவனிடம் பதிகம் பாடி ,ஆயிரம் பொன் பெற்றார். இந்த ஆலயம், திருவாவடுதுறை ஆதீனத்தால் திருப்பணிகள் அவ்வப்போது செய்யப்பெற்று, மிக நேர்த்தியாகப் பரிபாலிக்கப்படுகிறது.
சாத்தனூரில் உள்ள நான்கு சிவாலயங்களுள் முதலாவது, சித்தீச்வர ஸ்வாமி ஆலயமாகும். இங்கு திருமூலர் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அவரது திருவுருவமும் கோயிலில் இருக்கிறது. ஸ்வாமி நீண்ட பாணத்துடன்காட்சி அளிக்கிறார். அம்பிகை, ஆனந்த கௌரி என்ற பெயருடன் தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளாள். இக்கோயிலில் உள்ள விமான சுதை வேலைப்பாடு சிறப்பானது.
இதே ஊரின் மறு புறம், காசி விச்வநாத சுவாமி ஆலயம் இருக்கிறது. மிகவும் சிதிலம் அடைந்து இருந்த இக்கோயிலைச் சென்ற ஆண்டு புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள். விசாலாக்ஷி சன்னதி தென்முகம் நோக்கியது.
ஊரின் கோடியில் மிகப்பெரிதாக இருந்த ஐராவதீச்வரர் கோயில் ,பாழடைந்து, சுற்றிலும் மரங்களும் புதர்களுமாகக் காட்சி அளித்தது. சுற்றிலும் வயல்கள். சுவாமியின் மிகப்பெரிய பாணம் ஒன்றே எஞ்சிய நிலையில், அதனை ஒரு கொட்டகைக்குள் வைத்திருக்கிறார்கள். அருகிலிருந்த புதர்களை அகற்றி, ஸ்வாமி சன்னதி எழுப்பப் படுகிறது. இம்முயற்சி மிகவும் பாராட்டப் பட வேண்டியதொன்றாகும். அன்பர்கள் ஆதரவு இதற்கு மிகவும் தேவைப் படுகிறது.
ஊருக்குள் இருக்கும் மற்றொரு சிவாலயம், கைலாசநாதர் கோயில் எனப்படுகிறது. இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டபிறகே, பிற சிவாலயங்களின் திருப்பணிகள் ஒன்றன் பின் ஒன்றாகத் துவக்கப்பட்டன. இக்கோயிலுக்கும் , சித்தீச்வரர், விச்வநாதர் கோயில்களுக்கும் செய்யப்பட திருப்பணி மற்றும் கும்பாபிஷேகங்களில் நமது சபை முக்கிய பங்கு ஆற்றும் பாக்கியம் பெற்றது.
கைலாசநாதர் கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்ற பெயர் வந்த கதை சுவாரஸ்யமானது.மழை இல்லாமல் கஷ்டப்படும் காலத்தில், கோமுகத்தையும், முன் புறத்தையும் அடைத்து விட்டுப் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்வார்கள். பிள்ளையார் மூழ்கும் நேரத்தில் அடைப்பு உடைந்து நீர் வெளியேறிவிடும். மனம் தளராமல் மீண்டும் அடைத்துவிட்டு, அபிஷேகத்தைத் தொடருவார்கள். எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து மழை கொட்டித் தீர்த்து விடும். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்த காஞ்சி காமகோடி பெரியவர்கள், இந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுப் பரவசமடைந்தார்களாம். ஆலங்கட்டி மழை யாகப் பெய்ததால் பிள்ளையாருக்கு ஆலங்கட்டி விநாயகர் என்று பெயர் வைத்து விடும்படி சொன்னார்களாம். அதன்படியே இன்றும் அப்பெயராலேயே, விநாயகப் பெருமான் அழைக்கப் படுகிறார்.
இந்த வருஷம், ஆடி மாதம் முடிந்தும், காவிரி நீர், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப் படவில்லை. நெல் விதைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து இருக்கிறார்கள். இந்நிலையில் சாத்தனூர் வாசிகள் சிலர் மிகவும் கவலையுடன் , தென்னை மரங்களும் கடும் கோடையால் வாடுவதைத் தெரிவித்து, ஆலங்கட்டி விநாயகருக்கு அபிஷேகம் செய்ய அழைப்பு விடுத்தார்கள். இதற்கு நம்மாலான ஒத்துழைப்பை அளிப்பதற்காக , மற்றுமோர் அன்பருடன் சாத்தனூர் சென்றோம். வாய்க்கால் ,குளங்கள், கிணறுகள் எல்லாம் வறண்டு கிடந்த காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மழை வருவதற்கான அறிகுறியையே காணோம். வெயிலோ அனலாகக் காய்ந்து கொண்டிருந்தது. மறு நாள் காலையில் அபிஷேகம் செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஆகிவிட்டது. மனத்தில் மாத்திரம் கவலை-- மழை வர வேண்டுமே என்று. அதே நேரத்தில் , விநாயகர் அருள் இருந்தால் மேகங்கள் எப்படியும் வந்து விடும் என்ற திடமான நம்பிக்கையும் இருந்தது.
காலையில் வழக்கம் போல சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. 9 மணி அளவில் ஒருவர் வந்து, கைலாசநாதர் கோவில் அருகில் ஒரு பெரியவர் மரணமடைந்து விட்டதாகக் கூறினார்.விசாரித்ததில் அந்த இடம் கோயிலுக்கு மிகவும் தள்ளி இருந்தது. இன்னும் ஒருவர், பம்ப் செட் மூலம் ஒரு சில வயல்களில் அன்று காலை விதை விதைத்திருப்பதாகவும், மழை பெய்தால் அவ்வளவும் வீணாகி விடும் என்றும் சொன்னார். நாம் ஆசைப்பட்டபடி சன்னதியை அடைத்து, அபிஷேகம் செய்ய முடியாமல் இவ்வளவு தடைகள் ஏற்பட்டன. இருந்தாலும் பிள்ளையாருக்கு வழக்கமான அபிஷேகத்தையாவது செய்து, மழைக்காகப் பிரார்த்தித்துக் கொண்டு ஊருக்குத் திரும்புவது என்று முடிவு எடுத்தோம். கணபதி உபநிஷத், ருத்ரம் , திருமுறைப் பாராயணம் ஆகியவற்றோடு விநாயகருக்கு அபிஷேகங்கள் நடை பெற்றன. ஒரு சில மணி நேரத்துக்குப் பின் கரிய மேகங்கள் எங்கிருந்தோ வந்து சாத்தனூரைச் சூழ்ந்து கொண்டன. எங்களுக்கோ மாலையில் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மழையில் மாட்டிக கொள்வோமோ என்ற அச்சமும் இருந்தது. ரயிலடி போய்ச சேரும் வரையில் மழை பெய்யாமல் பிள்ளையார் காப்பாற்றி விட்டார். தூறல் மட்டும் பலமாக இருந்தது.
மறுநாள் காலை ஊருக்கு வந்துவிட்டு, மதியம் சாத்தனூருக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, அங்கு அடை மழை பெய்து வருவதாகவும், ஊரார் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்கள். இதை விட சந்தோஷம் தரும் செய்தி இருக்க முடியுமா? ஆலங்கட்டி விநாயக மூர்த்தியின் அழகிய திருவுருவம் கண் முன்னே நின்றது.