ஆனித் திருமஞ்சனம் பற்றிய ஒரு வலைப்பதிவைக் காண நேரிட்டது. அதைப் படித்த பெண்மணி ஒருவர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வலைப்பதிவாளர் பதில் தந்தாரா என்று தெரியவில்லை. அதாவது, கேள்வி இதுதான். இறைவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய போது இடது திருவடியை உயரத் தூக்கி ஆடினான். பெண்என்பதால் அவ்வாறு ஆடக் கூடாது என்று , காளிதேவி வாளா இருந்துவிட்டதை எப்படி அவள் தோல்வி அடைந்ததாக ஒப்புக்கொள்ள முடியும் என்பதே அவரது வினா. சரிபாதி பெண்மைக்குத் தந்த ஒரே தெய்வம் சிவபெருமான் என்பதை இப் பெண்மணி மறந்துவிட்டார் போலும்! எமனைக் காலால் உதைத்ததை சக்தி உபாசகர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா? உதைத்தது இடது கால் என்பதால் அன்னைக்கே அந்தப் புகழ் உரியது என்பார்கள். ஆனந்த தாண்டவம் ஆடும்போதும் தூக்கிய திருவடி அன்னை பாகத்தைச் சேர்ந்தது அல்லவா என்பார்கள். அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மதுரையில் சோமசுந்தரப் பெருமான் செய்திருந்த போதிலும், அக்கோவிலை மீனாக்ஷி கோவில் என்றல்லவா மக்கள் சொல்கிறார்கள்! இதில் தெய்வ தம்பதிகளிடையில் வெற்றி - தோல்வி என்பதேது?
நாம் தாழ்ந்துவிட்டோம் என்று நினைப்பவர்களுக்கு ஒருவேளை இப்படியெல்லாம் தோன்றும் போலிருக்கிறது. உண்மையில் அவர்களே உயர்ந்துவிட்டவர்கள் என்பதை இன்னமும் உணரவில்லை. ஒரு வீட்டை எடுத்துக்கொண்டால், க்ரஹிணி என்று பெண்ணே எஜமானியாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஒரு வேதியருக்கு அக்னி ஹோத்திரம் செய்யும் உரிமை அவரது மனைவி கூட இருக்கும் வரையில்தான்.
காளி இறைவனுக்குப் போட்டியாக ஆடியது இருக்கட்டும். மனோன்மணியாகிய பராசக்தி, அப்பெருமானது பாகம் பிரியாத நாயகி தானே . அவள் ஆடியதாகச் சொல்லப்படுவதில்லை. "உமையவள் காண ஆடிய அழகா" என்றே திருமுறை பகர்கிறது. கும்பகோணம் நாகேச்வர ஸ்வாமி கோவிலில், நடராஜப் பெருமான் ஆடும்போது,அம்பிகை தாளம் போட்டுக் கொண்டு, தன் நாயகனின் ஜதி பிழையாத ஆடலைக் கண்டு மகிழ்வதைத் தரிசிக்கலாம்.
கணவன் ஈட்டும் புண்ணியத்தில் ஒரு பாதி மனைவியைச் சேரும் ; ஆனால் அவனது பாவத்தில் எள்ளளவும் மனைவியைச் சேராது. அதே நேரத்தில், மனைவியின் புண்ணியத்தில் ஒரு சிறிதும் கணவனை அடைவதில்லை. அவளது பாவத்தில் ஒரு பங்கு மட்டும் கணவனை அடைவதாகப் பெரியோர்கள் கூறுவர். பூஜை, ஜபம் ஆகியவற்றை செய்யாமலே, கணவன் செய்யும் பூஜைக்கு உதவினாலே போதும். இவளுக்குப் பூஜை செய்த பலன் கிடைத்திவிடுகிறது. "உன்னடியார் தாள் பணிவோம்; அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்" என்ற திருவெம்பாவை வரிகள் இங்கு சிந்திக்கற்பாலான. இப்படிச் சொல்வதால் மனைவிக்குத் தெய்வ பக்தியே வேண்டாம் என்று பொருள் கொள்ளக் கூடாது. பதி- பக்தியின் மேன்மையைச் சொல்லி அப்படிப்பட்ட பெண் "பெய்" என்றால் மழை பெய்யும் என்றார் திருவள்ளுவரும். உனக்குப் பணி செய்யும் அடியவர்களே எங்கள் கணவராகும் வரத்தைக்கொடுப்பாயாக என்று பெண்கள் மார்கழி நோன்பு நோற்பதைத் திருவெம்பாவையில், " உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம் உன் அடியார் தாள் பணிவோம் ;ஆங்கு அவர்க்கே பாங்காவோம்; அன்னவரே எம் கணவர் ஆவார்" என்று மாணிக்க வாசகப் பெருமான் அருளியுள்ளதைக் காண்க. கல்யாண நலங்குகளில் தம்பதிகள் தேங்காயை ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிடுங்குவது போல அமைத்திருந்தாலும் , அப்படிப் பிடுங்கி, வெற்றி-தோல்வி என்று ஆகி விடாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பான்மையை உண்டாக்குவதாக ஏற்படுத்தியிருக்கிறார்கள்.(சுற்றிலும் இருந்து வேடிக்கை பார்பவர்கள், "விடாதே, கையிலிருந்து பிடுங்கி விடு" என்று சொல்லாமல் இருந்தால் தம்பதிகளே ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கத் தொடங்கி விடுவர்.)
சக்தியின் அம்சமான காளி தேவி , பரமேச்வரனை வழிபட்ட தலங்களுள் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள காளி என்ற தலமும் ஒன்று. அவ்வாறு அவள் செய்த பூஜையின் பலனைப் பார்த்தீர்களா? ஊரின் பெயரே அவள் பெயரில் தான் இருக்கிறது. அதேபோல், பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள அம்பர் மாகாளம் என்ற தலத்தில், அம்பராசுரனை வதம் செய்த காளி, சிவபூஜை செய்ததால், ஊரின் பெயர் மாகாளம் ஆனதோடு, சுவாமியின் பெயரும் மாகாள நாதர் ஆயிற்று. இவ்வூரைப் பாடிய ஞானசம்பந்தக் குழந்தை, காளி வழிபட்டதைச் சொல்லும்போது, "நம் காளி " என்று மிக்க உரிமையோடு அம்பிகையைக் குறிக்கிறார்.
எனவே, ஆலங்காட்டில் காளியை வென்ற வெற்றிக்களிப்பில் இறைவன் ஆடவில்லை. அப்படி ஆடியிருந்தால் , காளி தோற்றதாகக் கொள்ளலாம். காளிக்கு அருள் அல்லவா செய்தான்! இப்படிச் சொல்கிறது திருவாசகம்:
" .. பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய
திருமுகத்து , அழகு உறு சிறுநகை இறைவன் ..."
இப்படியாகக் காளியும் , கயிலைமலை வல்லியும் மனமகிழத் தாண்டவம் நடைபெறும்போது, யார் வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியும்? தேவி மனமகிழ ஆடல் காட்டியதை அவனது திருவிளையாட்டாகக் கொண்டால் யாருக்கு வெற்றி என்ற வினாவே எழாது.