"தவறு பெரிது உடைத்தே தவறு பெரிது உடைத்தே " என்று, தான் இறைவனிடம் வாதாடிய குற்றத்திற்காக வருந்திய நக்கீரர் தவறு செய்த "மூர்க்க மாக்களைக்"கூற்றம் ஒறுக்காததும் தவறு எனப் பாடுவார். அன்றாட வேலைகளில் பிழைகள் ஏற்படுவது சகஜம் தான். இவற்றில் பெரும்பாலானவை அறியாமல் செய்தவைகளாகக் கூட இருக்கலாம். அதே சமயம்,அப்பிழைகளைப் பிறர் சுட்டிக்காட்டினால் அவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே நமக்கு வருவதில்லை.நாம் செய்வது அவ்வளவும் சரியே என்றும் இதைப் பிறர் திருத்துவதாவது என்ற கருத்தும் உடையவர்கள் இருக்கிறார்கள். திருத்த முனைபவர்களும் இதைக் கருத்தில் கொண்டு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. கம்பன் போன்ற புலவர்களும் "அவை அடக்கம்" பாடினார்கள். இப்போது அந்த அடக்கம் காணமல் போய்விட்டதோ என நினைக்க வேண்டியிருக்கிறது. பழைய புத்தகங்களின் இறுதியில் பிழை திருத்தம் வெளியிடுவதோடு , மேலும் பிழைகளைச் சுட்டிக்காட்டினால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள எதுவாக இருக்கும் என்று விண்ணப்பித்திருப்பார்கள். நூல்களில் பிழைகள் களையப்படவேண்டும் என்று எண்ணிய காலம் அது. ஆனால் , இப்போதோ, " சென்னியில் வைத்த" என்ற வார்த்தையைச் "சென்னையில் வைத்த" என்று தவறாக அச்சிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினாலும் மறுமொழியோ, மாற்றமோ கிடையாது. இதனால் சலிப்பு ஏற்பட்டு , நமக்கேன் என்று வாளா இருக்க வேண்டியிருக்கிறது.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் தானே கெட்டு விடுகிறான் என்றார் திருவள்ளுவர்.கல்வி கேள்விகளில் மேம்பட்ட மந்திரிகளை இக்காரணம் பற்றியே அரசவையில் வைத்திருந்தார்கள் அரசர்கள். தவறான உச்சரிப்பையே திருத்த முன்வராத இக்காலத்தில் பிற பிழைகளையா திருத்திக் கொள்வார்கள்? " ள" என்ற எழுத்து "ல" என்றும், "ண" என்ற எழுத்து "ன" என்றும் செய்தி வாசிப்பவர்களாலும் பிறராலும் உச்சரிக்கப்படுவதை யார் திருத்துகிறார்கள்?
நிலைமை இவ்வாறு இருக்க, கருத்துக் கணிப்பு என்ற நாடகமும் அவ்வப்போது நடைபெறுகிறது. ஊடகங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கேட்டால், வித்தியாசமாக எழுதினால் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பர். மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது மக்களுக்குத்தானே தெரியும்? மக்களின் எண்ணங்கள் எத்தனை முறை இவ்வூடகங்களில் பிரதிபலித்திருக்கின்றன? ஒவ்வொரு பத்திரிகையும், தொலைக்காட்சியும் தனக்கென்று விருப்பு வெறுப்புகளை வகுத்துக் கொண்டுள்ளதால் அந்த வரையறைக்கு உட்பட்டே பிறர் சுட்டிக் காட்ட முடியும்.
இதில், சமய உலகின் குறைகள் விமர்சிக்கப்படும் போது விமர்சகர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சமயத்தின் நிறைகள் எழுதப்படும் போது பிற சமயத்தவர்கள் மௌனிகளாக இருப்பினும், குறைகள் வெளிவரும்போது மிகுந்த விழிப்புடன் இருப்பர். எனவே, வேற்றுமைகள் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே விமர்சிக்கப் படவேண்டும். எங்கு தான் குறை இல்லை? சம்பந்தப்பட்டவர்களும் தாமும் தம்மைச் சார்ந்த சமயமும் பழிக்கு ஆளாகாத வண்ணம் செயல் படவேண்டும். கோயில்களுக்குள்ளும் , மடாலயங்களுக்குள்ளும் தவறு நடக்கக் கூடாது என்று மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானதும் நியாயமானதும் ஆகும். எனவேதான் ஆலய நிர்வாகிகளும் , மடாதிபதிகளும் தம்மைச் சார்ந்த ஆலயங்களுக்கும், பீடத்தின் பாரம்பர்யத்திற்கும் குந்தகம் ஏற்படாமல் இருக்கவேண்டியது அவசியமாகிறது. பிழை நேர்ந்தது தெரிய வரும்போது மக்கள் சுட்டிக்காட்டவே செய்வர். அவர்கள் மீது பொங்கி எழுவதை விடுத்து, குறையின் மூல காரணத்தை ஆராய்ந்து, அதை உடனே திருத்திக்கொள்ள முன்வருவதே சாலச் சிறந்தது.
நிர்வாகத்தில் குறை ஏற்பட்டால் அரசாங்கம் அந்த நிர்வாகத்தை எடுத்துக்கொள்வது தீர்வு ஆகாது. அரசுக்குச் சொந்தமான ஆலயங்களின் நிர்வாகத்தைத் தான் பார்க்கிறோமே! உண்மையிலேயே குறைபாடுகளைக் களைய விருப்பம் இருந்தால், தக்க சான்றோர்களைத் துனணயாகக்கொண்டு, நெறிமுறைகளை வகுக்க வேண்டும். ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க இது வகை செய்யும். தன்னிச்சையாகச் செயல் படுவதையும் இதனால் தடுக்க முடியும். மரபுகளும் காக்கப்பெறும். செயல் படுத்த முன்வருவார்களா?
விரைந்தேன் மற்று எம்பெருமான் வேண்டியது வேண்டாது
இகழ்ந்தேன் பிழைத்தேன் அடியேன் விரைந்து என்மேல்
சீற்றத்தைத் தீர்த்தருளு தேவாதிதேவனே
ஆற்றவு நீ செய்யும் அருள்.
----- நக்கீரர்.