இப்போது பார்த்தால், யார் வேண்டுமானாலும் அவரவர் இஷ்டப்படி தனக்குப் பிடித்த வகையில் கோயில் கட்டிக் கொள்வது வழக்கமாகி வருகிறது. எதை எடுத்தாலும் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள்!! பண பலம் இருந்துவிட்டால் தன்னிச்சையாகச் செயல் படும் தைரியம் வந்துவிடுகிறது. ஆகம அறிவு இல்லாத மக்களும் , பிரமாண்டமாகக் கட்டி இருக்கிறார்களே என்று அசந்து போவதோடு,ஆதரவும் தருகின்றனர். இதைப் பயன் படுத்திக்கொண்டு, ஆலயம் கட்டுபவர்களும் , நம் பக்கத்தில் தொன்றுதொட்டு வழிபாட்டில் இல்லாத மூர்த்திகளுக்குக் கோயில் கட்டுகிறார்கள். பரிவார மூர்த்திகளுக்குத் தனி ஆலயம் அமைக்கிறார்கள். ஒரே கல்லில் முப்பது அடிக்கு மேலாக மூர்த்தியை செதுக்கி அதற்குக் கோயில் எழுப்புகிறார்கள். இதற்குத் தேவையான பணம் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எப்படியோ வந்து விடுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இப்புதிய கோயில்கள் அமைக்கப் படும் ஊர்களிலும் , அதன் அருகாமையில் உள்ள ஊர்களிலும் உள்ள, மரம் முளைத்தும், இடிந்தும் பூஜை இல்லாமலும் இருக்கும் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் இவர்கள் கண்களில் படவில்லை போல் இருக்கிறது. கோடிக் கணக்கில் செலவழித்துப் புதுக் கோயில் கட்ட வரும் இவர்கள் பழைய கோயில்களின் பக்கம் திரும்பிப் பார்க்காதது என்? இன்னும் சொல்லப் போனால், இடிந்த கோயில்கள் ஏராளமாகக் கேட்பாரற்று இருக்கும்போது , இப் புதிய கோயில்கள் தேவைதானா? தயவுசெய்து சிந்திக்கவேண்டும். புதிதாகக் கட்டிப் பெயரும் புகழும் சம்பாதிக்கத் துடிக்கும் இவர்கள், பழைய கோயில்களைத் திருப்பணி செய்து நற்பெயர் பெறலாமே? பழைய கூடலூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மருத்துவக்குடி சிவாலயத்தைத் திருப்பணி செய்ததுபோல் , பொருள் வசதி படைத்தவர்கள் , புதுக் கோயில் கட்டுவதைக் காட்டிலும் புராதனமான ஆலயங்களை சீர்திருத்தி ஊர் மக்களை நல்வழிப் படுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கும் பல கிராமக் கோயில்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். இதே நிலை இப்புதுக் கோயில்களுக்கும் பிற்காலத்தில் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்?