Wednesday, April 20, 2011

கோயில்களில் பசுமடங்கள்



திருவொற்றியூர்,திருவலிதாயம்(பாடி) ஆகிய சிவஸ்தலங்களில் கோசாலைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதேபோல் பல ஸ்தலங்களிலும் பசுமடங்கள் இருக்கக் காணலாம். எந்த ஊர்களில் காமதேனு பூஜித்ததாகத் தல வரலாறு கூறுகிறதோ, எந்தத் தலத்தில்பால் உகந்த நாதராக இறைவன் வீற்றிருக்கிராரோ அங்கெல்லாம் கண்டிப்பாக பசுக்கள் வளர்க்கப்பட வேண்டும். இடையன் மரணமுற்றபோது அவன் மேய்த்தபசுக்கள் சாத்தனூரில் கண்ணீர்விட்டுக் கதறியபோது, அவற்றின் துன்பம் தீர்பதற்காக ஆகாய வீதியில் போய்க்கொண்டு இருந்த சித்தர் பெருமான் அந்த இடையனின் உடலுக்குள் புகுந்து, திருமூலர் ஆன வரலாற்றை நாம் அறிவோம். அந்த ஊரில் பசு மடம்இன்னமும் ஏற்படுத்தப் படவில்லை. அதேபோல், பசு உருவில் அம்பிகை பூஜித்த ஊர்களான அசிக்காடு, தேரழந்தூர், கோமல், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோயில்களில் ஓரிரு பசுக்களாவது வளர்க்கப்படவேண்டும்.

சண்டிகேஸ்வரர் பிறந்த திருச்செய்ஞலூரிலும் , அவர் மண்ணியாற்றங்கரையில் சிவலிங்கம் அமைத்து , பசுக்களை மேய்த்து அவற்றின் பாலால் அபிஷேகம் செய்த திருவாப்பாடியிலும் பசு மடம் இல்லாததோடு, பால் அபிஷேகமே விசேஷ நாட்களில் மட்டுமே நடைபெறுகிறது. பசுவை வாங்கித் தரலாம் என்றால் "யார் பராமரிப்பார்கள்?" என்று கேட்கிறார்கள். சிவாசாரியாரின் வீட்டில் பசுவை வைத்துக்கொண்டால் கோவிலுக்கு உபயோகப்படுத்தியதுபோக அவர் வீட்டிற்கும் சிறிது பயன்படும். தயிர், வெண்ணை முதலியவை கிடைப்பதோடு, சுத்தமான விபூதியும் தயாரிக்கலாம். சாணத்தை எருவாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பயன் படுத்தலாம். கோபார் வாயுவும் தயாரிக்கலாம். கொஞ்சமும் சிரமப்படாமலேயே, பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் தற்போது தலை தூக்கி நிற்கிறது.


பசுமடம் வைப்பவர்கள் பெரும்பாலோர் கோயில்களில் அமைக்காமல் தனியாக ஒரு இடத்தை வாங்கி அங்கு பசுக்களைப் பராமரிக்கிறார்கள். சில கோசாலைகளில் நூற்றுக்கணக்கான மாடுகள் பராமரிக்கப் படுகின்றன. இவ்வளவு வசதியும் பணப்புழக்கமும் படைத்தவர்கள் மேற்கண்ட ஊர்களில் தங்களது கோசாலைகள் தனியாகவோ கோயில்களுக்கு உள்ளோ இருக்கும்படி அமைக்கலாமே! புகழ் கிடைக்கிறதோ இல்லையோ, புண்ணியம் கண்டிப்பாகக் கிடைக்கும். தனியார் வங்கிகளும் கிராம முன்னேற்றத்திற்காகக் கால்நடைச் செல்வத்தைப் பெருக்கலாம்.


கும்ப கோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் பாபுராஜபுரம் என்ற சிறு கிராமம் இருக்கிறது. இங்குள்ள மழுவேந்திஅப்பர் கோயில் புராதனமானது. கருங்கல் திருப்பணி. செட்டியார் தம்பதிகளுக்கு இறைவன் அருளியதாக வரலாறு. இத்தம்பதியரின் உருவச்சிலைகள் மகாமண்டபத்தில் இருக்கின்றன. சுவாமி அம்பாளுக்கு வஸ்த்திரம் நேர்த்தியாக அணிவிக்கப் பட்டு இருக்கிறது. இக்கோயிலின் சிவாச்சாரியாருக்கு எழுபத்தெட்டு வயது ஆகிறது. தனியாக வீட்டில் இருந்துகொண்டு கைங்கர்யம் செய்கிறார். வீட்டுக் கொட்டகையில் பசு மாடுகளை வளர்க்கிறார். மாலை ஆனதும் மாட்டை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுகிறார். இதில் ஆச்சர்யம் என்ன என்றால் மாடு நிற்கும் இடத்தில் சிறிய மின்சாரக் காற்றாடியை அமைத்து இருக்கிறார். இது அவரது சக்திக்கு அப்பாற்பட்ட செயல். எவ்வளவு பாராட்டினாலும் தகும். வசதியுள்ள பசுமடங்களில் மின் காற்றாடி காணப்படுவதில் பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை. உண்மையில் பெயரையும் புகழையும் கருதாமல் இக்குக் கிராமத்தில் இவர் செய்யும் சிவதர்மத்திற்கு ஈடு சொல்ல முடியுமா?