சிவனடியாருக்கு அன்னம் பாலிப்பதைப் பிறவிப் பயனாக சொல்லும்போது, அச் சிவனடியார்கள் உழவாரத் தொண்டு செய்பவர்களாகவோ , புஷ்ப கைங்கர்யம் செய்பவர்களாகவோ , சன்னதியில் கீதம் பாடுபவர்களாகவோஆலயத் திருப்பணி செய்பவர்களாகவோ இருந்தால் இன்னும் சிறப்பு அல்லவா? இத்தகைய சிவத் தொண்டர்களுக்கு அன்னம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து தருவது நமது கடமை ஆகும்.
தர்ம சிந்தனை நாளுக்கு நாள் குறைந்து சுய நலம் மேலோங்குவதால் கலியின் வலிமை அதிகரித்து பிறவிப் பயன் கிடைக்கவொட்டாமல் ஆகி விடுகிறது. கிராமங்களிலும் குறுகிய மனப் பான்மை காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது. கிராமங்களில் உள்ள மரம் முளைத்துப்போயும் , பாழடைந்தும் போன கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வெளியூர் அன்பர்கள் பலர் முன்வருகிறார்கள். இவர்கள் பயணச் செலவையோ பிற செலவையோ பொருட்படுத்தாமல் உழவாரத் தொண்டு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல் படுகிறார்கள். பிரதி பலனாகக் கிராம மக்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
கிராம மக்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். அறநிலையத் துறையோ உள்ளூர் மக்களோ கவலைப்படாமல் கோயில்கள் சிறிது சிறிதாக அழிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் போது, சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிராமக் கோயில்களில் உழவாரத்தொண்டு செய்ய வரும் சிவனடியார்களுக்கு நாம் நன்றி செலுத்தும் முகமாக மதியம் ஒருவேளை உணவாவது உள்ளூர்மக்கள் அளிக்க முன்வர வேண்டாமா? அண்மையில் ஒரு கிராமத்தில் சிதிலமாயிருந்த ஆலயத்தில் உழவாரத் தொண்டு செய்ய முன்வந்த வெளியூர் அன்பர்களுக்கு அக் கிராம மக்கள் உணவளிக்க முன்வராததால் அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து அந்த ஐம்பது பேர் குழுவுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நிலச்சுவான்தார்கள் ஒருவருக்காவது தர்ம சிந்தனை ஏற்படாதது துர்பாக்கியமே.
கோயில்கள் புறக்கணிக்கப் படுவதைக் கண்டும் காணாததுபோல் இருக்கும் இக்காலத்தில் , மனம் பதைபதைத்துத் தொண்டாற்றுபவருக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, திருவாதிரையான் திருவருட் சபை , மாதம் தோறும் ரூ ஐநூறு , உழவாரத் தொண்டுக்காக அளிக்க முன்வந்துள்ளது. இத் தொகை , மதிய உணவுக்குப் பயன்படும் வகையில் அமையும். இனியாவது, ஆலையங்களில் உழைத்தவர்களுக்கு உணவு இல்லை என்ற நிலை ஏற்படாதிருக்க, ஸ்ரீ ஒதனவநேச்வரரையும் ஸ்ரீ அன்னபூரணி அம்பிகையையும் பிரார்த்திக்கிறோம்.