நவக் கிரக தேவதைகளை பரமேச்வரன் நியமித்து நமது பாவ-புண்ணியங்களுக்கு ஏற்ற படி இன்ப-துன்பங்களை வழங்குகிறார். எல்லா தேவர்களும் ஸ்தலங்கள் தோறும் அவரை பூசிப்பது போலவே நவக் கிரகங்களும் அவரை ஒன்பது ஸ்தலங்களில் வழிபட்டதோடுஅங்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் துன்பங்களின் தாக்கம் சற்றுக் குறையுமாறு அருளுகிறார்கள். சிவனடியார்களுக்கு நவக் கிரகங்களும் நல்லதே செய்யும் என்று சம்பந்தரின் கோளறு பதிகம் குறிப்பிடுகிறது. எனவே, நாமும் அதனைப் பாராயணம் செய்தும் நவக் கிரகங்களால் வழிபடப்பெற்ற சிவாலயங்களைத் தரிசித்தும் பாவ வினைகள் நீங்கப் பெறலாம்.
நடைமுறையில் நாம் பார்ப்பது என்ன தெரியுமா? திருநள்ளாறு தர்பாரன்யச்வாமி கோவிலை சனீஸ்வரன் கோயில் என்று சொல்வதும் ,ஆலங்குடியை குரு ஸ்தலம் என்பதும், நாகேஸ்வர சுவாமி கோவிலை ராகு ஸ்தலம் என்பதும் , கீழப் பெரும்பள்ளத்தைக் கேது ஸ்தலம் என்பதும் வழக்கமாகிவிட்டது. உண்மையில் இவை எல்லாவற்றையும் சிவஸ்தலம் என்று தான் குறிப்பிட வேண்டும். கிரகங்களால் மூர்த்திக்குப் பெருமை இல்லை. மூர்த்தியால் தான் கிரகங்களுக்குப் பெருமை. இப்படிச் சொல்வதால் கிரக வழிபாடு வேண்டாம் என்று சொல்வதாக நினைக்கக் கூடாது. எந்த மூர்த்திக்குப் ப்ராதான்யம் (முக்கியத்துவம்) கொடுக்க வேண்டுமோ அதைக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் நவக்ரகங்களை மட்டும் சுற்றிவிட்டு மூலவரைத் தரிசிக்காமல் வருபவர்களுக்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்னொரு முக்கியமான விஷயம்: வியாழக்கிழமை அன்று தக்ஷிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரமும் கொண்டைகடலை மாலை போடுவதுமான தவறான பழக்கம் பல ஊர்களில் காணப் படுகிறது. இவற்றை எல்லாம் நவக் கிரகங்களுள் ஒருவரான குருவுக்கு (பிரஹச்பதிக்கு) அணிவிக்க வேண்டும். ஆதி குருவான பரமேச்வரனுக்குப் போடக் கூடாது. இதை எல்லாம் அந்த ஆலயங்களில் உள்ள சிவாச்சார்யார்களே சொல்லி மக்களைத் திருத்த வேண்டும். செய்வதை தவறு இல்லாமல் செய்ய வேண்டும் அல்லவா?