நன்றாக யோசித்துப் பார்த்தால் நமது பிரபலமான கோயில்களில் சான்னித்தியம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும். கோயில்களில் உள்ள மூர்த்திகள் , தேவர்களாலோ முனிவர்களாலோ மிகச் சிறந்த பக்தர்களாலோ அல்லது பறவை விலங்குகள் ஆகியவற்றாலோ வழிபடப் பட்டவை. தெய்வங்களை பய பக்தியோடு அணுக வேண்டியது போய்ஏதோ காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் ஆகிவிட்டது துரதிருஷ்டமே. எதில் தான் வியாபார நோக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. ஆலயங்களை படப்பிடிப்பு குழுக்கள் விலைக்கு வாங்கி விடாத குறையாக ஆக்கிரமிக்கின்றனர். வழிபாட்டு இடங்களில் இவர்களை அனுமதிப்பதால் ஏதாவது வருமானம் வராதா என்ற எண்ணம் இதற்கு வழி விடுகிறது.
கோயில்களுக்கு வருபவர்களின் செய்கைகளோ சொல்லும்படி இல்லை. என்ன வேண்டுமானாலும் உடுக்கலாம்,பேசலாம் என்று ஆகிவிட்டது. இடைத் தரகர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லோருக்கும் முன்னால் சென்று சீக்கிரம் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற சுய நலம் வேறு. சில இடங்களில் ஆலய சிப்பந்திகளும் இதற்கு உடந்தையாக இருப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. சுய விளம்பரத்திற்காக தங்க கதவுகளையும் மேல் கூரைகளையும் சிலர் செய்து கொடுக்கிறார்கள். இதனால் கவனம் பூராவும் பணத்தின் மேலேயே போய் விடுகிறது. முக்கியப் புள்ளிகள் வந்தால் ஆலய சட்ட திட்டங்கள் காற்றில் விடப் படுகின்றன.
அரசாங்கமும் முதல் வேலையாக உண்டியல் வைப்பதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் வரும் பணமோ பல வழிகளிலும் செலவழிக்கப் படுகிறது. கோயில்களின் பூஜைகள் திருவிழாக்கள் திருப்பணிகள் ஆகியவை வருமானம் இல்லாத ஊர்களில் கேள்விக் குறியாகவே ஆகிவிட்டது. இதற்காகக் கவலைப் படுவோர் மிகச் சிலரே!
இதையெல்லாம் உத்தேசித்துதான் பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருமுறை திருப்பணி,கும்பாபிஷேகம் ஆகியவற்றை செய்து சாந்தித்யம் நிலைக்கும்படி செய்தார்கள். தவறுகளைத் திருத்துபவர்களைக் காணோம். பல கும்பாபிஷேகம் நடந்த கிராமத்துக் கோயில்களில் தொடர்ந்து பூஜை நடத்த வழி வகைகள் செய்யப் படுவதில்லை. வறுமையால் வாடும் ஆலய சிப்பந்திகள் வேறு ஊர்களை நாடிச் செல்கிறார்கள். இவர்களுக்காக வருத்தப் படுபவர்கள் எத்தனை பேர்? புரட்சி ,மறுமலர்ச்சி என்றெல்லாம் பேசுபவர்கள் ஆலய மறுமலர்ச்சிக்காக ஏதும் பெரிய அளவில் செய்வதில்லை.
இதற்கெல்லாம் ஒரே வழி ,மக்கள் திருந்தவேண்டும். தானாகத் திருந்தவேண்டிய கட்டாயத்தில் மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.சிவமே அவர்களது சிந்தையைத் திருத்தவேண்டும். கோயில்களின் சாந்தித்யம் கூட வேண்டும். இறைவனது உறைவிடமாகத் திகழவேண்டும். அப்பொழுதுதான் தேசம் நன்மை அடையும். கலங்காமல் காத்த கணபதியையும் , திருபுவனத்தில் உள்ள நடுக்கம் தீர்த்த நாதரையும் ,சரப மூர்த்தியையும் பிரார்த்திப்போமாக.