Monday, January 25, 2010

தெய்வ சோதனை

நமக்கு அடிக்கடி வரும் சந்தேகங்களில் ஒன்று , பக்தர்களை சுவாமி ஏன் சோதிககிறார் என்பது. இதற்கு பதில் கேள்வியிலேயே இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். உண்மையான பக்தர்களையே சுவாமி சோதிக்கும் போது , எண்ணியது எல்லாம் நிறைவேற வேண்டும் என்று எதிர்பார்த்து சுவாமியை வழிபடும் நமக்கெல்லாம் ஏன் சோதனை வரக்கூடாது?


திருமுருகன் பூண்டி என்ற சிவஸ்தலம் திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கிறது. ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிவ பூஜை செய்ததால் மூலவருக்கு முருக நாதர் என்று பெயர். தன்னுடைய ஆப்த நண்பரான சேரமான் பெருமாள் நாயனார் தந்த காணிக்கைகளை எடுத்துக்கொண்டு ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகள் இந்த ஊர் வழியாகப் போகும்போது நடந்த சம்பவம், நமக்கு உணர்த்துவதற்காக நடந்ததாகக் கொள்ளவேண்டும். நம்முடைய சொத்து சுகம் எல்லாம் சுவாமி தந்தது என்றா நினைக்கிறோம்? நாம் சம்பாதித்தது என்று தானே நினைக்கிறோம்? சுந்தரர் மூலம் நமக்காகவே ஒரு பாடம் உணர்த்தப்படுகிறது. சிவபூதங்கள் வேடர்கள் உருவத்தில் போய் சுந்தரரை மிரட்டி அவரிடம் இருந்த பொருள்களைப் பறித்துக்கொண்டு போய் விடுகின்றன. சுந்தரருக்கு வருத்தம் தாங்கமுடியவில்லை. நேராகத் திருமுருகன்பூண்டிக் கோவிலுக்குப் போய் சுவாமி மீது தேவாரப் பதிகம் பாடுகிறார்.(சுவாமியும் இதைக் கேட்க வேண்டும் என்ற ஆசையால் தானே இப்படி நாடகம் நடத்தினார்!) வழிப்பறித் திருடர்கள் இருக்கும் இந்த ஊரில் அந்த பயத்திலிருந்து பக்தர்களைக் காப்பாற்றாமல் நீயும் அம்பிகையும் எதற்காக இங்கு இருக்கிறீர்கள் என்று நிந்திப் பதைப் போலப் பாடியவுடன் சுவாமி அத்தனை பொருள்களையும் பூத கணங்கள் மூலம் சுந்தரரிடம் திரும்ப சேரும்படி செய்தார். இப்பொழுது சுவாமி கொடுத்த பொருள் என்று சொல்வதுதானே நியாயம்!

நம்மிடம் உள்ள ஐச்வர்யம் மற்றவர்களுக்கு உதவி செய்யவே ஈச்வரனால் கொடுக்கப் பட்டது என்பதை அறிய வேண்டும். அப்படிக் கொடுக்காத உலோபிகளுக்குக் கடுமையான நரகங்களை சுவாமி வைத்துள்ளதாக அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறார்.

இன்னொரு விஷயம். தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களை கேட்டுக் கொள்ளலாம். இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்காமல் கண்ணீர் மல்க என்றைக்கு சுவாமி சன்னதியில் நிற்கிறோம்? சோதனை வந்தால் சுவாமியிடம் கோபிக்க மட்டும் தவறுவதில்லை. என்ன பூஜை பண்ணி என்ன பிரயோஜனம்? சுவாமி கண் திறக்கவில்லையே என்று அலுத்துக் கொள்பவர்கள் பலர். எது நடந்தாலும் நடக்கட்டும். ஈச்வர சங்கல்பப் படியே நடக்கும் என்று திடமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்கள் சோதனைகளைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். அவர்கள் சோதனைகளை வென்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பட்ட பக்தி நமக்கு உண்டாகும்படி ஸ்ரீ பரமேச்வரன் அருள வேண்டும்.