நம்மில் பலருக்குக் கோயில்களில் பல மூர்த்திகளைப் பற்றித் தெரிவதில்லை. தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வமும் காட்டுவதில்லை. அம்மூர்த்திகளுள் சண்டிகேஸ்வரரும் ஒருவர்.அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அவரைப்பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் அவரிடம் கையைத் தட்டிவிட்டு வர மட்டும் நமக்குத் தெரியும். காரணம் தெரியாமலே கையைத் தட்டுகிறோம். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டில் சண்டிகேஸ்வரரும் ஒரு மூர்த்தியாக சுவாமியுடன் தீர்த்தவாரிக்கு வருகிறார். அவருக்கு அந்தப்பதம் எப்படிக் கிடைத்தது என்று தெரிந்து கொள்ளவேண்டாமா?
திருப்பனந்தாளுக்குப் பக்கத்தில் திருச் சேய்ஞலூர் என்ற ஊர் இருக்கிறது. இங்கு முருகன் சிவபூஜை செய்ததாக ஸ்காந்த புராணம் சொல்கிறது. இவ்வூரில் காச்யப கோத்திரத்தில் வேதியர் வம்சத்தில் எச்சதத்தன் என்பவனுக்கு உலகம் உய்யும் பொருட்டு விசாரசர்மன் என்ற குழந்தை பிறந்தது. ஏழு வயதில் உபநயனம் ஆனவுடன் வேதம் முறையாகப் பயின்று வரும் நாளில் ஊரிலுள்ள பசு மாடுகளை மண்ணி ஆற்றங்கரை அருகில் மேய்த்து ஆற்று மணலால் சிவலிங்கம் செய்து அதை பசும் பாலால் அபிஷேகம் செய்து வந்தான் அச்சிறுவன் .ஊரார் புகார் செய்ததால் தந்தை எச்சதத்தன் மரத்தின் பின் நின்று இதைப் பார்த்துக் கோபம் கொண்டு சிவபூஜைக்காக அங்கு வைத்திருந்த பால் குடத்தைக் காலால் உதைத்தான். சிவத்தியானம் நீங்கிக் கண் விழித்த பாலகன், சிவாபராதம் செய்தது தந்தை என்றாலும் தண்டிக்கப்படவேண்டியவர் என்று தீர்மானித்து அருகில் இருந்த மாடு மேய்க்கும் கோலை கையில் எடுத்தவுடன் அது மழுவாக மாற , அதைக் கொண்டு தகப்பனாரின் உதைத்த காலை வெட்டி வீழ்த்தினார். அடுத்த கணமே சிவபூஜையைத் தொடர ஆரம்பித்தார்.
பால் உகந்த நாதனாகிய பரமேச்வரன் உமா தேவியோடு வ்ருஷப வாகனத்தில் அக்குழந்தைக்குமுன் காட்சிஅளித்தார். ரிஷிகள் வேத கோஷம் செய்யவும் பூத கணங்கள் அருகில் நிற்கவும் பரம கருணையுடன் வெளிப் பட்ட புண்ணிய மூர்த்தியைக் கண்டு ஆனந்தத்தின் எல்லைக்கே சென்ற அப்பாலகன் சுவாமியின் பாத மலர்களை நமஸ்கரித்தான்.
அக்குழந்தையை எடுத்த ஈச்வரன் ,"என்னிடம் வைத்த பக்தியால் தகப்பனாரின் காலை வெட்டின உனக்கு அடுத்த தந்தை இனி நானே " என்று சொல்லி அப்பாலனைத் தழுவி கருணையோடு தடவி உச்சி மோந்து ,
"உனக்கு சண்டேசப் பதம் தந்தோம். இனி நாம் உண்பதும் உடுப்பதும் சூடுவதும் உன்னிடமே வந்து சேரும் " என்று சொல்லித் தனது சிரத்தில் இருந்த கொன்றை மாலையை எடுத்து அக்குழந்தைக்குச் சூட்டினார்.
எனவேதான் கோயில்களில் சிவ நிர்மால்யம் வரும் கோமுகத்தின் அருகில் (வடக்குப் பிராகாரத்தில்) தெற்கு நோக்கியவாறு சண்டிகேஸ்வரர் சன்னதி இருக்கிறது. இவரை தரிசித்தால்தான் சிவ தரிசனம் செய்த பலன் கிடைக்கும். சதா சிவத்யானத்தில் இருக்கும் இவருக்கு அஞ்சலி செய்ய கையை லேசாகத் தட்டி அவரிடம் சிவாலய தரிசன பலனைப் பெறுகிறோம்.