கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்பவர்கள் சிவானந்தம்பெறுவதாகத் திருமூலர் என்ற சித்தர் சொல்கிறார் தற்காலத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஜபம் செய்பவர்களைப் பார்த்து என்ன சொல்வது? ஜபம் என்பது மனத்தை லயப்படுத்தி நிர்மலம் ஆக்குவது. இப்போதெல்லாம் அதை எப்படி செய்வது என்று பணம் கொடுத்துக் கற்றுக்கொள்கிறார்கள். நாம் இதை த்யான சுலோகம் சொல்லி அந்த தெய்வத்தின் உருவத்தை மனதில் த்யானித்து மந்திரம் மூலம் திரும்பத் திரும்பத் த்யாநிக்கிறோம். இந்த ஜபத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று செய்ய ஆரம்பிக்கிறோம்.
நாம் முதன்முதலில் உபதேசம் பெறுவது தகப்பனாரிடமிருந்து காயத்ரி மந்திரத்தையே.ஆகவே தகப்பனார் முதல் குரு ஆகிறார். எந்த ஒரு உபதேச மந்திரமும் கொஞ்ச நாள் மட்டும் பண்ணிவிட்டு விட்டுவிடுவதற்கு அல்ல. ஆயுள் முழுவதும் செய்ய வேண்டியது மந்திர ஜபம். தனது குமாரனுக்கும் தகப்பனரே காயத்ரியை உபதேசிக்கிறார். நாம் தினமும் செய்யத் தவறியதை குமாரனுக்கு உபதேசம் செய்ய என்ன யோக்யதை இருக்கிறது என்று சந்த்யா வந்தனம் செய்யாத ஒவ்வொரு தகப்பனும் எண்ணிப் பார்க்கவேண்டும். சந்த்யை செய்யவேண்டும் என்று புத்திரனைப் பார்த்து அவன் சொன்னால் நீங்கள் மட்டும் பண்ணாமல் இருக்கலாமா என்று பதில் வரும். உபநயனம் செய்து தரும் வாத்யாரும் பிரம்மோபதேசம் ஆனவுடன் தக்ஷினையை வாங்கிக்கொண்டு புறப்படுவதிலேயே கவனமாக இருக்கிறார்களே தவிர உபதேசம் பெற்ற வடுவுக்கு சந்த்யா மந்திரங்களை சொல்லிக்கொடுக்காமல் சென்று விடுகிறார். அந்தப் பையனின் நிலையோ பரிதாபம். சொல்லிக்கொடுப்பவரைத் தேடி அலைகிறான். வீட்டில் யாரும் சந்த்யாதி கர்மாக்களைப் பண்ணாவிட்டால் தானும் செய்யாமல் விட்டு விடுகிறான். நேரம் இல்லை என்ற சாக்கு வேறு. ரிடையர் ஆனவர்களுக்கே சந்த்யை செய்ய நேரம் இல்லாமல் இருக்கும் போது படிக்கும் குழந்தை சாக்கு சொல்வதில் ஆச்சர்யமில்லை. இதற்காகத்தான் பெரியவர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாக இருந்து காட்ட வேண்டியது முக்கியம் ஆகிறது.
ஆவணி அவிட்டம் காயத்ரி ஜபம் வந்தால் வேறு வழி இல்லையே என்று மனதில் திட்டிக்கொண்டு வேண்டா வெறுப்போடு பண்ணிவிட்டு ஆபீசுக்கு ஓடுகிறான். ஒரு சமயம் பார்த்தால் இப்படி வேஷம் போடுகிறார்களே என்று வேதனையாக இருக்கிறது.கண்டதுக்கு எல்லாம் லீவு போட முடிகிறது.உபாகர்மா அன்று மட்டும் லீவு போட மனம் இல்லை. வாத்தியார்களும் இந்த அவசரத்திற்கு உடந்தை.ஹோமம் செய்யாமல் பூணலை மாட்டி விட்டு ஆபீசுக்கு அனுப்பி விடுகிறார்கள்.எப்படியோ தக்ஷிணை வந்தால் சரி.
இதை எல்லாம் ஹாச்யத்துக்காக எழுதுவதாக நினைக்க வேண்டாம். பிராயச்சித்த கர்மாவை இப்படி வீணடித்து விட்டார்களே என்ற ஆதங்கத்தால் எழுத வேண்டி இருக்கிறது. இனிமேலும் பெரியவர்களை திருத்த முனைந்து நேரத்தை வீணடிக்காமல் அடுத்த வாரிசுகளுக்கு நல்ல வழியைக் காட்டுவோம். பெரியவர்கள் பிரதோஷ வேளையிலும் டிவி சீரியல்களைப் பார்த்துக்கொண்டு இருக்கட்டும். குழந்தைகளாவது விழித்துக்கொண்டு நம் தர்மத்தைக் காப்பாற்ற முன் வரும்படி வேத மாதா அனுக்ரகம் செய்ய வேண்டும்.
நாளைய தினம் காயத்ரி ஜபம் செய்யும்போது ஸ்ரீ பரமேச்வரனிடம் இந்த பிரார்த்தனையை எல்லோரும் செய்ய வேண்டும்.