Saturday, October 19, 2019

நல்லனவும் தீயனவும்


உலகத்தில் எல்லோரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்லவர்களாகவோ அல்லது தீயவர்களாகவோ வாழ்கிறார்கள். இதில் வீட்டில் இளமைக்கால வளர்ப்பு மிகவும் முக்கியமானது என்றாலும் தீயவர் சேர்க்கை அந்த நற்பண்புகளை முழுவதும் அழித்து விடுகிறது. அவ்வாறு சேராதபடி இளமையில் பெற்றோர்களின் வளர்ப்பும் ஆசிரியர்களின் கவனமும் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் மீறித் தீய நண்பர்களது பொல்லாத நட்பால் பாதிக்கப்படுபவர் பலர். எனவே “ நல்லார் இணக்கம் “ மிகவும் முக்கியம் என்றார்கள் பெரியோர்கள். நல்லவர்களோடு இணைந்தால் அவர்களது நற்பண்புகள் நமக்கும் வந்துவிடும். அதனால் தீய செயல்களைச் செய்ய மனம் வராது. தீயோரைக் கண்டால் தூர விலகும் பக்குவமும் ஏற்பட்டுவிடும்.

பிறர் மீது இரக்கம் ஏற்படுவதற்கும் பெற்றோர், ஆசிரியர் ஆகியோரது பங்களிப்பு தேவைப்படுகிறது. அதுவே நாளடைவில் ஆறறிவற்ற விலங்குகளிடத்தும், பறவைகளிடத்தும் அன்பு செலுத்த ஏதுவாகிறது. அப்படிப்பட்டவர்கள் தாவரங்களுக்கோ அல்லது விலங்கு, மற்றும் பறவை இனங்களுக்கோ ஒரு தீங்கு நேர்ந்தால் பதைத்து விடுவார்கள். எஜமான விசுவாசம் என்பதன் இலக்கணத்தையே நாய் மூலம் நன்கு கற்றுக் கொள்ள முடியும். தன் உயிரையே பணயம் வைத்துத் தன் எஜமானரது குடும்பத்தைக் காப்பாற்றிய நாய் இனத்தைப் பற்றி நாம் நன்கு அறிவோம்.

அண்மையில் வட இந்தியாவில் ஒரித்தில்  இரண்டு பசுக்கள் சாலையில் இறந்து கிடப்பதைக் கண்ட ஒருவன் ( அவன் மேய்ப்பவனோ அல்லது உரிமையாளனோ என்பதை நாம் அறியோம்) அவற்றின் உடல்கள் மீது விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுததைச்  சமூக வலைத்தளத்தில் பார்த்தபோது நெஞ்சைப் பிழிந்தது. சொந்த பந்தங்களை இழந்தவனைப் போல அப்பசுக்களது இறந்து கிடந்த உடல்களைப் பார்த்து அவன் கதறியது, கல்நெஞ்சத்தையும் கலங்கச் செய்யும்.

சமீபத்திய மற்றோர் நிகழ்ச்சி:  மும்பை புறநகர்ப்பகுதியில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக அங்கிருந்த மரங்களை அதிகாரிகள் வெட்ட முற்பட்டபோது மக்கள் எதிர்ப்புக் குரல் தந்தனர். அதிலும் சில தாவர  ஆர்வலர்களோ , அவை வெட்டப்பட்டுக் கிடந்த போது அந்த வெட்டுண்ட மரங்களின் மீது கதறி அழுததைப் புகைப்படங்களில் கண்டபோது மனித நேயம் என்பது மனிதர்களுக்குள் மட்டும் அல்ல. அதற்கு அப்பாலும் இருக்கும் என்பதை உணர முடிகிறது.  

நல்ல பண்போடு வாழ எது தேவைப்படுகிறது என்பதை விளக்க வந்த திருவள்ளுவர்,

“ அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு “   என்று அருளினார்.

பிறரிடத்து அன்பு செலுத்துவதும், நல்லகுடியில் பிறத்தலும் ஒருவனை நல்வழிப்படுத்தும் சாதனங்களாக்கிவிடுகின்றன என்பது தெய்வப்புலவரின் கருத்தாவதைக் காண்க.

அஷ்டாவக்கிர முனிவர் தன்  தாயின் வயிற்றில் இருந்தபோதே, தந்தையானவர் மாணாக்கர்களுக்கு வேதம் கற்றுக் கொடுப்பதைக் கேட்டே முழுதும் கற்றுணர்ந்தார் என்று அறிகிறோம். அதுபோன்ற சூழ்நிலைகளைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சிறு தோத்திரங்களைக் கற்றுக் கொடுப்பது, ஆலய வழிபாட்டிற்கு அழைத்துச் செல்வது போன்றவற்றை குழந்தையின் இரண்டு அல்லது மூன்று வயதிலிருந்தே மேற்கொள்ளலாம்.

 மூன்றே வயது பாலகனான ஞானசம்பந்தக்குழந்தை தந்தையாருடன் சீர்காழிக் கோயிலுக்குச் சென்றபோது ஞானம் பெற்றதைப் பெரிய புராணம் அறிவிக்கிறது. அத்தெய்வக் குழந்தையைத் தோளில் வைத்தபடி தந்தையார் சிவத்தல யாத்திரை சென்றார் என்றும் சேக்கிழார் காட்டுகிறார். 

குழந்தைக்கு ஐந்தாண்டு முடிவதற்குள் அதற்கு நல்வழிகாட்டுவதைப் பெற்றோர்கள்  இன்றியமையாததாகக் கருத வேண்டும். காலம் கடந்தால் அதற்குப் பிறகு செய்யப்படும் முயற்சிகள் அத்தனையும் வீணாகி விடும்.

சமீபத்தில் ஓரிடத்திற்குப் பயணம் செய்யும்போது அருகிலிருந்த நான்கு வயதுக் குழந்தை அழகாகப் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து ஆம்புலன்ஸ் அலறும் ஓசை கேட்டது. பயணிகள் அனைவரும் சலனம் இல்லாமல் இருந்தபோது, சற்றும் எதிர்பாராதபடி அந்தக் குழந்தை, “ அம்மாச்சி, காப்பாத்து “ என்றது. அப்போதுதான் தோன்றியது, அந்தக் குழந்தைக்கு இருக்கும் இரக்க சுபாவம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று. அதே சமயத்தில் அந்தக் குணத்தை அக்குழந்தைக்குப் பதிய வைத்த அதன் பெற்றோரை மனதாரப் பாராட்டினோம். உயிருக்கு ஊசலாடும் நிலையில் யாராவது இருந்தாலும் இரக்கப்படாத காலம் இது. அதற்கு முக்கியமான காரணம் தவறான வளர்ப்பும் வழிகாட்டுதலுமே.

ஒருவரை ஒருவர் இகழ்வதையும், பொறாமைப்படுவதையும், பஞ்சமா பாதகங்களையும் செய்யத் தயங்காத மிருகங்கள் ஆகப் பலர் மாறி  விடுவதையும் அறியும்போது நமது நற் பண்புகள் எல்லாவற்றையும்  கடந்த ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளில் இழந்து விட்டோமோ என்று தோன்றுகிறது. கள்ளம் கபடம் அதிகம் இல்லாமல் இருந்த நாடு குட்டிச்சுவராகப் போய் விட்டதே ! பணம் ஈட்டுவது என்பது போய் பணம் சுருட்டுவது என்று ஆகி விட்ட பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது?  ஏதும் அறியாப்பருவத்தில்- கள்ளம் ,கபடம் என்றால் என்னவென்றே அறியாத இருந்த பிஞ்சு நெஞ்சங்கள் நாளடைவில் நஞ்சு வார்க்கப்பட்டு நாசமாவதைக் காணும்போது இந்த மனித உடலின் வளர்ச்சி இதற்காகவா என்று தோன்றுகிறது. இதைக் கண்டு சகிக்காத கவிஞர் ஒருவர் அந்தக் காலத்திலேயே பாடினார்,

“ பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு துன்பமடா .” என்று. அது நூற்றுக்கு நூறு சரி தானே !  

2 comments:

  1. தீவிரமாக உணர்ந்து திருந்த, திருத்த வேண்டிய தருணம். ஆம்புலன்ஸ் ஒலியைக்கேட்டு இறைவனை இறைஞ்சிய குழந்தையும் பெற்றோரும் அதிசயம், வணக்கத்துக்கு உரியவர்கள்.

    ReplyDelete
  2. Truly a multi gem studded garland! Bless your 0comp0assionate heart, dear friend!

    ReplyDelete