Sunday, November 25, 2018

வேண்டாம் இந்தத் துவேஷம்

ஞானத்தமிழ் தந்த ஞானசம்பந்தர் 
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிற்கும் இறைவனுக்கு உருவமும் உண்டு;அருவமும் உண்டு; அவ்விரண்டும் கலந்த அருவாருவமும் உண்டு. " நின் உருவம் ஏது " என்று கேட்கிறார் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் சமமாக நோக்கும் பக்குவம் எல்லோருக்கும் எளிதாக வந்து விடாது. அவரவர்க்குத் தங்களது பாதையே உயர்ந்தது என்ற எண்ணம் கண்டிப்பாக இருக்கும். இப்படி இறைவனைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாத நிலையில், தாம் படித்த நூல்களை அரைகுறையாகப் புரிந்து கொண்டு வாதமிடுவோரும், பிறரைப் பழிப்போரும் நிறைய இருக்கிறார்கள். தாங்கள் சார்ந்த சமயமோ தெய்வமோ உயர்ந்தது என்று மட்டும் இருக்காமல் பிற சமயத்தவரைக் குறை சொல்லியும்,ஏளனம் செய்தும் பிழைப்பு நடத்துவோரும் இருக்கிறார்கள். 

அண்மையில் அகச்சமயத்தைச் சார்ந்த ஒருவரது வீடியோ வெளியாகியிருந்தது. அவரது ஆச்சாரியார் ஒருவர் சீர்காழியில் திருஞானசம்பந்தரை சந்தித்ததாகவும், அவரது பாடல்கள் சம்பந்தரது பாடல்களை விட உயர்ந்ததால் ( ?? ) சம்பந்தர் அவருக்குத் தனது வேலைப் பரிசாகக் கொடுத்ததாகவும்  ஒரு கற்பனைக் கதையை அந்த வீடியோவில் வெளியிட்டிருந்தார். முதலில் அவ்விருவரும் சமகாலத்தவர்கள் அல்லர் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். கல்வெட்டுச் சான்றோ,பழைய இலக்கியச் சான்றோ, ஒலைசுவடிச் சான்றோ இல்லாத நிலையில் இப்படி ஒரு பொய்யுரை தேவைதானா? 

பாடலைத் தலைகீழாகப் படிக்கவும் முடியும் என்பதோடு பொருளும் , பண்ணும் சிறந்து விளங்கும் ஒரு   பதிகத்தையே ( 11 பாடல்கள்)  அருளினார் சம்பந்தர் . உதாரணத்திற்கு அப்பதிகத்தின் முதல் பாடல் இதோ:

"  யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா       
    
     காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா . " 

இது போல் பாடல் அவரிடம் உண்டா என்று நாம் வாதம் செய்யப்போவதில்லை. வேறு எவரது பாடலுக்கும் தாழ்ந்தது சம்பந்தர் பாடல் அல்ல என்று மட்டுமே இங்கு நிரூபிக்க விரும்புகிறோம்.

இப்பதிவை அவர் பார்க்க வேண்டும் என்றுகூட நாம் விரும்பவில்லை. தமிழ்த் தாயின் ஆபரணங்களுள் சிறந்த ஒன்றாகவாவது சம்பந்தப் பெருமான் அருளியதை ஏற்பதில் அவருக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. ஒருவேளை இதற்கு மூல காரணம் சிவ துவேஷம் என்று எடுத்துக் கொள்ளலாமா ? 

நாம் அவரிடம் மட்டுமல்ல, அகச் சமயத்தைச் சேர்ந்தவர்களிடமும், நமது சமயத்திலிருந்தே சமய நெறிகளுக்குப் புறம்பாகச் செயலாற்றுபவர்களிடமும்  பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.  இப்போதுள்ள சூழ்நிலையில் நமக்குள் வாதம் செய்து கொள்வதும், உட்பிரிவுகளிடையில் சண்டையிட்டுக் கொள்வதும் , புராணங்களைத் திரித்து மக்களிடையே பரப்புவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய செயல்கள். இதனால் மக்களிடையே துவேஷம் அதிகரிக்குமே தவிர வேறு ஒன்றும் ஆகப்போவதில்லை. இதனால் கடவுள் மறுப்பாளர்களும், பிற சமயத்தவர்களும் மேன் மேலும் நம்மை நோக்கிக் கற்களை வீசத் தொடங்குவார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். 

இத்தனை நாட்கள் சந்தித்த பிரிவுகள் போதும். அடுத்த சந்ததியர்க்கு ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொடுப்போம். நல்ல நெறிகளை எடுத்துரைப்போம். ஒருமாநிலத்தில் நாத்திகர்களும், பிற மதத்தவர்களும் போக, இறை நம்பிக்கை உடையவர்கள் வெறும் பத்து சதவீதமே என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. 

சமயச் சான்றோர்கள் அகச்சமயங்களின் வேறுபாடுகளைக் களைந்து இணங்கி வாழ வித்திடவேண்டும். அதைச்  செய்யத் தவறியவர்கள் தான் இதுபோல் வேலைக் கொடுத்தார், கோலைக் கொடுத்தார் என்றெல்லாம் வீணாகப் பேசி, பொய்யை மெய்யாக்கத் துடிக்கிறார்கள். இவர்கள் முதலில் செய்ய வேண்டியது தங்களிடம் உள்ள துவேஷ புத்தியைக் களைய வேண்டும் என்பதே. இதைச் செய்தாலே பெரும் புண்ணியமாகிவிடும். ஒற்றுமை மேலோங்கும். பிறரும் நம்மை ஏசுவதற்கு  அஞ்சுவர். நமது சமயத்திற்காக இதைக்கூடச் செய்யக் கூடாதா ?    

3 comments:

  1. செய்யத்தான் வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிற சனாதன தர்மமென்னும் மரத்தை, சனாதனிகளே வெட்டலாமா?அதன் நிழலைச் சார்ந்து வாழ்ந்துவரும் மக்கள் அவரவர்களின் பெரியோர் உணர்த்தியபடி பரம்பொருளை வெவ்வேறு திருவுருவங்களில் வழிபடும் பெரும் பேற்றைத் தங்களுக்குள்ளேயே சச்சர்வு, பூசல் இவற்றை உண்டாக்கப் பயன்படுத்தலாமா?

    ReplyDelete
  2. இவ்வகையான கருத்துகளுக்காகத்தான் எதிராளிகள் காத்து நிற்கிறார்கள். சந்தனம் என்று கருதி சேற்றில் கை வைப்பது போல உள்ளது.

    ReplyDelete
  3. நம் நாடே உயர்ந்தது; நம் மொழியே சிறந்தது; நம் தாயே சிறந்தவள் என்று எண்ணுவதில் தவறில்லை. ஆனால் அடுத்தவர்களைத் தாழ்த்தாமல் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடையே பிளவு ஏற்பட்டால் பிறர் நம் எல்லோரையும் ஏச ஆரம்பிப்பர். இது வாதப் பிரதி வாதத்திற்கு ஏற்ற காலம் அன்று. ஒவ்வொருவரும் இதனை உணர்ந்து ஒற்றுமையுடன் நமது சமய மரபுகளைக் காக்க வேண்டும் என்பதே எமது அவா. அவ்வாறு நடந்து கொண்டால் எதிராளிகள் எனப்படுவோரும் மனம் திருந்தி இணைய வாய்ப்பு உண்டு. சமயப்பற்று எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாட்டுப் பற்று. நாட்டின் ஒற்றுமையில் தான் எல்லாம் அடங்கி இருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய தருணம் இது. வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete