Wednesday, November 15, 2017

குரு பீடங்களும் மக்களின் எதிர்பார்ப்பும்

                          Image result for kanchi sankaracharya
அண்மையில் அன்பர் ஒருவர் சொன்னார் , " குருபீடங்களில் பெரும்பாலானவை சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டவை. அதற்கு முன்னதாக, மக்கள் வேத- சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்களையே அணுகியிருக்கக் கூடும்." என்றார். ஒரே மடாதிபதி அனைத்துப் பகுதி மக்களையும் இணைப்பது மிகவும் கடினமான செயல். ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒரு மடம் நிறுவுவது என்பது ஆதி சங்கரர் காலத்திலிருந்தே இருந்து வந்தது. அப்படி இருந்தும், கால் நடையாச் சென்று மூலை முடுக்கிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து அங்கே சில நாட்கள் தங்கிப் பூஜைகள் செய்தும்,மக்களை நல்வழிப்படுத்தியும் வந்தவர்கள் சிலரே.

நாளடைவில் அந்நியர்களது படையெடுப்பால் கலாசார மாற்றங்கள் நிகழ இருந்தபோது மடங்கள் தோன்றி தர்மப் பிரச்சாரம் செய்யலாயின.நாகரீகத் தாக்கமும் மக்களைப் பாதித்தபடியால் மடாதிபதிகளின் யாத்திரைகள் அத்தியாவசியமாயிற்று.கால் நடையாகவே நாட்டின் பெரும்பகுதிகளுக்குச் சென்று வந்த காஞ்சி பெரியவர்களது கருணை இங்குக் குறிப்பிடத்தக்கது. 

மடங்களுக்குப் பாரம்பர்யமாக வரும் பூஜை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மக்களை நல்வழிப் படுத்துவது. மடங்களில் பெரும்பாலானவை கிராமங்களில் அமைந்திருப்பதால் மடாதிபதிகள் தங்களுக்கு அண்மையில் உள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களுக்கு அருளாசி வழங்குவது சாத்தியமாகிறது. தங்களைச் சார்ந்தவர்களையும், மடத்துச் சிப்பந்திகளையும் இவ்வாறு கிராமங்களுக்கு அனுப்ப முடியும். 

என்ன காரணத்தாலோ மடாதிபதிகளின் கிராம விஜயங்கள் அவ்வூர்க் கோயில்களின் கும்பாபிஷேகம் மற்றும் சில வைபவங்களுக்குப் போவதோடு நின்று விடுகிறது. தங்கள் மடங்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோயில்களுக்கும் எப்போதாவது தான் விஜயம் செய்கிறார்கள் . அந்தக் கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு எழுபது ஆண்டுகள் ஆகி , விமானங்களில் மரம் முளைத்து, மேற்கூரை ஒழுகினாலும் திருப்பணிகளை மேற்கொள்ளாதது ஏன் என்று புரியவில்லை. உள்ளூர் மக்களுக்குக் கோயில்களுக்குத்  தினமும் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்களது விஜயத்தால் ஏற்படலாம் அல்லவா? 

கிராமங்களுக்கு மடாதிபதிகள் அடிக்கடி வராததால் மக்களில் சிலர் வேறு திசையை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்களைப் பிறரும் பின்பற்றுகிறார்கள். கோயில்கள் கைவிடப்படும் நிலை உருவாகிறது. சிப்பந்திகளைத் திரும்பிப் பார்க்கவும் நாதி இல்லை. இதனால் சமயத்திற்கே பேராபத்து ஏற்படுகிறது என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். நகரங்களுக்கு மட்டும் வாகனத்தில் வந்து பார்த்து விட்டுப் போவதால் கிராமங்கள் மெல்ல மெல்ல அவற்றின் பாரம்பரியத்தை இழக்கின்றன. 

கிராமங்களில் அழைத்து ஆதரிப்பவர்கள் குறைந்து விட்டது என்பதை ஏற்க முடியாது. அப்பாவி கிராமவாசிகள் தங்களது ஊருக்கு நல்லது செய்ய யாராவது வெளியூரிலிருந்து வந்தால் அவர்களைத் தலை மேல் தாங்குகிறார்கள். நாம் அவர்களை அலட்சியப்படுத்தினால் அவர்கள்  நம்மிடம் இருந்து நிரந்தரமாக விலகுவார்கள்.வருமானத்திற்குத் தவிக்கும் அவர்களை ஆசை காட்டி மயங்கச் செய்பவர்கள் இருக்கும்போது, அவர்களுக்குத் தேவை அரவணைப்பு ஒன்றே. 

இப்படிச் சொல்வதால் மடாலயங்களைக் குறை கூறுவதாக எண்ணக் கூடாது. எத்தனையோ சமயப் பணிகள் ஆற்றி வரும்போது இதனைச் சற்று கூடுதலாகக் கவனிக்க வேண்டும் என்ற விண்ணப்பமே இது.காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் இதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . காலம் தாழ்த்தினால் கை விட்டுப் போகும் நிலை வருவதன் முன் இன்றே இதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று தாழ்மையாக விண்ணப்பிக்கிறோம்.எல்லாம் சிவன் செயல் என்றாலும் அப்பெருமானே நமது பணியையும் ஒரு பொருட்டாக  உவந்து ஏற்பான் அல்லவா?            

Tuesday, November 14, 2017

ஆலயமும் ஆஸ்பத்திரியும்

                  
நாளடைவில் மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரிமாறப்படுவது அதிகரித்து வருகிறது. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசவோ எழுதவோ துணிந்து விட்டார்கள். தனிமனிதனது நம்பிக்கைக்கு இந்த நாடு அனுமதி அளிக்கும் அதே வேளையில் அதை துஷ்பிரயோகம் செய்வது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. நமது கொள்கையை பிறர் மேல் திணிப்பது எந்த வகையில் நியாயம்? அவரவர்கள் விருப்பப்படி நடந்து கொள்வதைக் குறை கூறி அவர்களைப் புண் படுத்துவது இப்போது கை வந்த கலை ஆகிவிட்டது.

தெய்வ நம்பிக்கையும் அப்படித்தான். நம்பிக்கை இல்லாதவர் ஒதுங்கிப் போகட்டுமே! இன்ன தினத்தில் கோவிலுக்கு அனைவரும் வந்து ஆஜர் கொடுக்கவேண்டும் என்றா வற்புறுத்துகிறார்கள்? இத்தனை சுதந்திரம் கொடுக்கப்பட்டும் மண்ணை வாரித் தூற்றுவது எதனால்? நம்பிக்கையே இல்லாதவன், பழக்க வழக்கங்களைக் குறை கூறுகிறான். மரபுகளை மாற்றி அமைக்கத் துடிக்கிறான். இதை வைத்தே பிழைப்பும் நடத்துகிறான். கண்டனம் தெரிவிப்போர் இல்லாததை சாதகமாக்கிக் கொள்கிறான்.

சினிமா,நாடகம்,தொலைக் காட்சி, செய்தித் தாள்கள் ஆகியவை இரட்டை வேடம் போடுகின்றன. ஒரு நேரத்தில் ஆன்மீகச் செய்திகளைச் சேர்த்துக் கொள்ளும் இவர்கள் மறு நேரத்தில் அதற்கு நேர் மாறாக நம்பிக்கை உள்ளவர்கள் மனதை நோக அடிக்கிறார்கள். இவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் சம்பாதிப்பது ஒன்று தான். மற்றபடி சமுதாய நலன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் வெறும் வெளி வேஷமே.

பெரிய சீர்திருத்த வாதம் செய்வதாக நினைத்துக் கொண்டு ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி கட்டலாம் என்று அபத்தமாக உளறுகிறார்கள். கேட்டால் மக்கள் சேவையே மகாதேவன் சேவை என்று பொன் (புண் ? ) மொழி உதிர்க்கிறார்கள். கோயில்கள் மக்கள் நலனுக்காகவே ஏற்பட்டவை என்பதை அறியாத மூடர்கள் பின் எப்படிச் சொல்ல முடியும்? சமூக சேவை வேண்டாம் என்று எந்த மதமாவது சொல்கிறதா? மக்கள் சேவையும் மாதேவன் சேவையும்  இரு கண்கள் என்ற மரபைத்தானே நாம் பின்பற்றி வருகிறோம்!

ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் மருத்துவத்தால் நிரந்தரத் தீர்வு காண முடிவதில்லை என்பதை ஏன் நினைப்பதில்லை? இவர்கள் கொடுக்கும் மருந்தும் மாத்திரையும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்தும் தெருவுக்குத் தெரு மருத்துவ மனைகள் ஏற்படுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டுமா? ஏழைகளாக இருந்தாலும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் குறைந்த பட்சம் ஐநூறு ரூபாயாவது இல்லாமல் செல்ல முடியுமா? அரசு மருத்துவ மனைகளின் தரத்தையும் சேவையையும் மேம்படுத்தி,அனைவரும் பயனுறச் செய்யலாமே? மத்திய அரசு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு ஈடாக தமிழகத்தில் கட்டித்தர முன்வந்தும் ஏன் இன்னும் செயல் படுத்த முடியவில்லை?

சிவபெருமானை “ ப்ரதமோ தைவ்யோ பிஷக்” என்கிறது ருத்ரம். எல்லா வைத்தியர்களுக்கும் மேலான, முதன்மையான வைத்தியன் என்பது கருத்து. வைதீஸ்வரன் கோயிலில் சுவாமிக்கு வைத்திய நாதன் என்று பெயர். உலகிலுள்ள நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நோய்களைத் தீர்ப்தற்காக இத்தலத்தில் எழுந்தருளினான் என்பது தல புராணம். இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் மூழ்கி நோய் நீங்கப்பெற்றோர் அநேகர் உளர். “ தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னை“ என்று இத்தலத் தேவாரமும் பெருமானைப் பரவுகிறது.

உலகில் பிறந்துவிட்டால் கூடவே வருவன நோயும்,அவலமும் தான். இன்பம் வருவது சிறிது அளவே தான். இதனை உணர்ந்த முன்னோர்கள் இனி ஒரு பிறவி வேண்டாம் என்று வேண்டினார்கள். அனாயசமான மரணம் இறுதிக் காலத்தில் ஏற்படவேண்டும் என்று சிவ பூஜையில் ஒவ்வொரு நாளும் பரமேசுவரனை பிரார்த்திக்கிறோம். ஆஸ்பத்திரியில் முதிய வயதில் வாயிலும் மூக்கிலும் குழாய்களைச் செலுத்தியும், துளித் துளியாக ஆகாரத்தைச் செலுத்தியும் காப்பாற்ற முடியாது போகம் நிலையில், மருத்துவர்களே, “ இனி செய்வதற்கு ஒன்றுமில்லை, கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் “ என்னும்போது கைதர வல்லவன் யார் என்று சற்று யோசிக்க வேண்டும். இறைவன் நோயை அகற்றும் மருத்துவன் மட்டுமல்ல. பிறவியாகிய நோயையே அகற்றுபவன். அதனால்தான் அவனை பவரோக ஔஷதீசுவரன் என்கிறோம்.


இனியாகிலும் ஆலயத்திற்குப் பதிலாக ஆஸ்பத்திரி வேண்டும் என்பவர்கள் தமது  அறியாமை நீங்கி மக்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல முன்வர வேண்டும்.  அதற்குத் தயாராக  இல்லாவிட்டால் இதுபோன்று  உளறாது தன வேலை உண்டு தான் உண்டு என்று இருந்தால் அவர்களுக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.          

Thursday, October 26, 2017

தீர்த்தம் என்பதும் இறை வடிவமே

இராமேசுவரம் ஆலய தீர்த்தங்கள் சில - இணையதளப் படம் 
" சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று பாடி அருளினார் அப்பர் ஸ்வாமிகள். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு. உலகம் யாவையும் படைத்த பெருமான் தீர்த்தங்களையும் படைத்தான் என்பது அதில் அடங்குவது தானே என்று நினைக்கலாம். ஏழண்டத்திற்கும் அப்பால் நின்ற பரம்பொருள் எல்லாவற்றிலும் நிறைந்து இருக்கிறான் அல்லவா? அப்படி இருக்கும்போது தீர்த்தத்தைத் தனியாகக் குறிப்பிடுவானேன் என்று தோன்றும். மறுபடியும் மேலேசொன்ன அவரது வாக்கைப் படித்தால் அதற்கு  விளக்கம் கிடைக்கும். தீர்த்தங்கள் படைத்தார் என்று குறிப்பிடாமல், " ஆனார் "   என்று அல்லவா   சொல்லியிருக்கிறார்!  அதேபோல , " வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் " என்பதால் வேதமும் தமிழும் இறைவனது வடிவங்களே என்று தெரிகிறது. 

 தீர்த்தம் வேறு,  சிவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. காரணம் , ஈசுவரன் எப்படிப் புண்ணிய மூர்த்தியோ அதேபோல தீர்த்தமும் புண்ணிய தீர்த்தம் எனப்படுகிறது. எல்லா நீர் நிலைகளையும் நாம் புண்ணிய தீர்த்தமாகவா கருதுகிறோம்? புண்ணிய தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்களையும் , கிணறுகளையும்,ஆறுகளையும் மட்டுமே அந்தந்த ஊர்த் தல புராணங்கள் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. தீர்த்தப் படலம் என்றும்,தீர்த்தச் சிறப்பு என்றும் தலங்கள் மீது அமைந்துள்ள  புராணங்களில் பாடப்பெற்றிருப்பதைக் காணலாம்.  " தீர்த்தனை, சிவனை சிவலோகனை " என்று அப்பர் பாடுவதை, கங்கை என்னும் தீர்த்தத்தை முடி மேல் கொண்டவன் என்று மட்டும் பொருள் கொள்ளாமல், எல்லா தீர்த்தங்களையும் தன் வடிவாகவே கொண்டவன் என்று பொருள் உரைப்பது இன்னும் சிறப்பாக அமையும். 

தீர்த்த யாத்திரை என்ற சொல்லை நோக்கும்போது, தீர்த்தங்களில் நீராடுவதன் பொருட்டு யாத்திரை மேற்கொள்ளுதல் என்ற விளக்கத்தைப் பெற முடிகிறது. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றுமே யாத்திரை செய்பவர்களுக்குக் கிடைத்து  விடுவதால் அன்னோர்க்கு சற்குருவும் கிடைத்து விடுவார் என்கிறார் தாயுமானவர். திருவிழாக்களிலும் தீர்த்தவாரி முக்கிய நிகழ்ச்சியாக இன்றும் கருதப்படுகிறது. அப்போது, திருக்கோயிலில் இருந்து எழுந்தருளும் அஸ்திர தேவருக்கும் அப்புண்ணிய தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

காசியில் கங்கா நதி ஒன்றிலேயே பல கட்டங்கள் இருப்பதால், யாத்ரீகர்கள் அங்கெல்லாம் சென்று நீராடி நற்பலனைப் பெற்று வருகிறார்கள். ஒரே நீர்தானே எல்லாக் கட்டங்களிலும் வருகிறது என்றும் ஒரு துறையில் நீராடினால் போதாதா என்றும் குறுக்குக் கேள்விகள் கேட்பதில்லை. அதேபோல இராமேசுவரம் ஆலயத்திற்குள் உள்ள எல்லாக் கிணறுகளிலும் மக்கள் நீராடி யாத்திரையின் பயனைப் பெறுகிறார்கள். சில தீர்த்தங்கள் . அருகருகே இருந்தாலும் சுவை , நிறம் ஆகியவை வேறுபடுவதை அங்கு சென்றவர்கள் கவனித்து இருக்கலாம். 

விழாக் காலங்களில் கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக வடக்கு ப்ராகாரத்திலுள்ள ஆறு தீர்த்தங்களைக் கோயிலுக்குள் இடமாற்றம் செய்ய இருப்பதாகச்  செய்தி வந்துள்ளது. இது துரதிருஷ்டமான முடிவு என்றே கூறலாம். கிணறு வேண்டுமானால் மனிதன் தோண்டலாம். அப்படித் தோண்டப்பட்டவற்றைத்  தீர்த்தம் என்று நாம் அழைப்பதில்லை. தோண்டிய கிணற்றிலிருந்து கங்கையை வரவழைக்க நாம் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் அளவிற்குத் தவம் செய்யவில்லை. நமது ஊனக் கண்களுக்கு எல்லாமே சமமான நீர் நிலைகளாகவே தெரிவதால் ஏற்பட்டுள்ள விபரீதம் இது. அந்த புண்ணிய தீர்த்தங்களை மூடி விட்டு அதேபெயரில் கோயிலுக்குள் வேறு இடத்தில் கிணறு தோண்டி விடுவதால் எவ்வாறு அவை பழையபடி தீர்த்தங்கள் ஆக முடியும் என்று தெரியவில்லை. ஆன்மீகப் பெரியவர்கள் சிலரும் இதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டனர் என்ற செய்தி  உண்மையாக இருந்தால் அதை என்னென்று சொல்வது? மக்களது நம்பிக்கையைப்  பயன் படுத்திக்கொள்ளும் செயலாக இது அமைந்து விடக்கூடாது. ஆன்மீகப் பெரியவர்களாகட்டும், அற  நிலையத் துறையாகட்டும், இது பற்றிய விரிவான அறிக்கையை மக்கள் நலனுக்காக வெளியிடுவார்கள் என்று நம்புவோமாக. 

Wednesday, October 18, 2017

தவ வலிமை

காஞ்சி காமகோடி பெரியவர்கள் 
                     ஒரு காலத்தில் விருத்திராசுரனால் தேவர்கள் அனைவரும்  துன்புறுத்தப்பட்டபோது அவனைப்  போரிட்டு வெல்ல முடியாமல் போன தேவேந்திரன், திருமாலின் அறிவுரைப்படி ததீசி முனிவரை அணுகினான் . பாற்கடலைக் கடைந்த காலத்தில் தேவாசுரர்களின் ஆயுதங்கள்  ததீசி முனிவரிடம் சேர்ப்பிக்கப்பட்டன. பின்னர் அவற்றை எவரும் திரும்பக் கேளாது போகவே, ததீசி முனிவர் அவ்வாயுதங்களை விழுங்கி விட்டார். அவை யாவும் ஒன்று சேர்ந்து அவரது வஜ்ஜிரமான முதுகுத் தண்டாக ஆயின. அந்த வஜ்ஜிரப்படையை முனிவரிடம் பெற்றுப் போரிட்டால் அசுரனை அழிக்கலாம் என்று திருமால் கூறியிருந்தபடியால் அதனை முனிவரிடம் தேவர்கள் யாசித்தனர். 

ததீசி முனிவர் தேவர்களிடம் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம்: "  இந்த உடல் அழியும் தன்மையை உடையது. அவ்வாறு அழிந்தபின், அதை நாய்கள் தமக்குச் சொந்தம் என்கின்றன. .இயமனோ அது என்னுடையது என்று கைப்பற்றுகிறான். காட்டிலுள்ள பேய்களோ தமக்கே உரிய இரையாகக் கருதிக் குதூகலிக்கின்றன. ஆனால் அத்தருணம் வரையில் நாம் இவ்வுடல் நம்முடையது என்று நினைக்கிறோம்.இப்புழுக் கூட்டை நம்முடையது என்றும்  எல்லாம் நமக்கே சொந்தமானது என்றும்  கருதி , பிறருக்கு இம்மி அளவும் தானம் செய்யாமலும் உதவாமலும் கல் நெஞ்சர்களாக இருக்கிறோம். நீங்கள் அசுரர்களால் துன்பம் அனுபவிக்கும் இந்நேரத்தில் இவ்வுடம்பால் உங்களுக்குத்  தீமை விலகி  நன்மை ஏற்படப்போகிறது என்றால் அதை விட இவ்வுடல் எடுத்ததன் பலன்  எனக்கு வேறு என்ன இருக்கப் போகிறது " என்று கூறி சமாதியில் அமர்ந்து,  கபாலம் திறக்கப்பெற்று,விமானமேறி, சிவலோகம் அடைந்தார். அவரது பூதவுடலிலிருந்து எடுக்கப்பெற்ற வச்சிராயுதம் மூலம்  இந்திரன் விருத்திராசுரனைப் போரிட்டு வென்றான். இதை வள்ளுவரும் " என்பும் உரியர் பிறர்க்கு " என்று சிறப்பிக்கிறார். 

நான்கு ஆசிரமங்களுள் சந்நியாச ஆசிரமம் பிறர்க்கெனவே தன்னை அர்ப்பணிப்பதாக அமைவது. இதையே வேறு விதமாகச் சொல்லப்போனால், பிறர் செய்வதற்கு  அரிய தருமத்தை இராப் பகலாகச் செய்வதற்காகவே ஏற்பட்டதாகக் கூடக் கொள்ளலாம். ஆகவேதான் அதனைப் புனிதமானது என்கிறோம்.சராசரி மனிதன் செய்வதையே தானும் செய்தால் அவர் எப்படி சந்நியாசி ஆக முடியும்? பிறர் ஆனந்தமாக வாழ்வதற்குத் தவம் செய்பவரே  தவசி. நம் நாட்டில் இத்தனை கஷ்டங்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் கேட்டபோது அதற்கு அவர், " நான் செய்யும் தவம் போதவில்லை என்றே நினைக்கிறேன். ஆகவே நான் மேன்மேலும் கடும் தவத்தை மேற்கொள்ள வேண்டும். உலக நன்மைக்காக பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும் " என்றார்களாம். 

தவம் சிறக்க வேண்டும் என்றால் நாட்டின் மூலை  முடுக்கிலுள்ள ஊர்களுக்கெல்லாம் சென்று தவமும் பூஜையும் செய்து அங்கு சில நாட்கள் தங்கி ,மக்களை ஆட்படுத்த வேண்டும். காஞ்சிப் புராணம் அப்பர் பெருமானைக் குறிப்பிடுகையில் " நடை அறாப் பெருந்துறவு "அவர் பூண்டு ஒழுகியதாகக் கூறுகிறது. இங்கு நடை என்பது காலால் நடந்து வருவது என்பதை விட ஒழுக்கம், தவம் என்றெல்லாம் பொருள் கொள்வதே சிறப்பு. இதைத்தான் காஞ்சிப் பெரியவர் அனுசரித்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் நம்மைப் போல் பண்டிகை கொண்டாடுவதில் நமக்கு நிகராக இருக்க மாட்டார்கள். நம்மைப் போல் வாணங்கள் கொளுத்திக் கொண்டு இருக்க மாட்டார்கள். தீப ஒளியில் இறைவனைக் கண்டு நமக்கும் காட்டும்  கருணை பாலிப்பவர்களாகவே இருப்பார்கள். 

நாட்டில் மழை பொய்க்கிறது. ஆறுகள் வற்றிப் போகின்றன. குளங்களும்,நீர் நிலைகளும் வறண்டு விட்டன. இப்படி இருந்தும், நா வற்றும் அளவுக்கு சிலர்  நாத்திகம் பேசி மக்களைக்  கெடுக்கின்றனர். ஒற்றுமை இன்மையின் உச்ச கட்டத்தைப் பார்க்கிறோம். தீயவற்றைச் செய்வதில்  பயம் போய் விட்டது. அக்கிரமங்கள் தலை விரித்து ஆடுகின்றன. துறவறம் மேற்கொள்வோரும் வாய்ப் பேச்சோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தவ வலிமையால் மக்களின் துயர் தீர்க்க முன் வருவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால் அவர்கள் மக்களது நம்பிக்கையை விரைவில் இழக்கக் கூடும். இப்போதாவது அவர்கள் தவத்திற்கும் பூஜைக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்களா?   

Sunday, October 1, 2017

பண்டிகைகள் வியாபாரிகளின் பிடியிலா?

நவராத்திரி ஒன்பது நாளும் உபவாசத்துடன் அம்பிகையை வழிபடுவோர் பலர் . வீடுகளிலும்,கோயில்களிலும் இப்பண்டிகை  ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களின் ஆர்வத்தையும், நம்பிக்கையையும்,பக்தியையும்  தங்களுக்குச்  சாதகமாக்கிக் கொள்ளும் வியாபாரிகளைக் காணும் போது வருத்தமும்  ஏமாற்றமும் ஏற்படுகிறது.  வேறு எந்தப் பண்டிகை வந்தாலும் இதே நிலை தொடர்கிறது.    பூஜை செய்வதற்குப் பூவும் நீரும் இருந்தாலே அதனை செய்து விடலாம். அவ்வளவு எளிதாக நமக்குப் புண்ணியம் கிடைக்க விடுவார்களா நமது வியாபாரிகள்? நாளைக்கு ஒரு பண்டிகை வருகிறது என்றால் அதைக் காரணமாகக் கொண்டு விலையைக் கடுமையாக உயர்த்தி விடுகிறார்கள். பூ வரத்து குறைந்து விட்டதாம். இவர்களுக்கு மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் வானளவு லாபம் வந்தே தீர வேண்டும். அமோக விளைச்சலால் விலை சரிந்து விட்டால் விவசாயிகள் வேதனை என்றுதானே செய்தி வெளியிடுகிறார்கள்! பாமரர்கள் வேதனைப் படுவதற்கு யார் கவலைப் படப் போகிறார்கள்? 

நவராத்திரி கொலு பொம்மை விஷயத்திற்கு வருவோம். இந்த ஆண்டு பொம்மை வாங்கப்போனவர்களுக்குத் தெரியும், எத்தனை கடுமையாக விலையை ஏற்றி விற்கிறார்கள் என்பது. ஒரு சாண் அளவு கூட இல்லாத பொம்மைகளை சுமார் எண்ணூறு ரூபாய்க்கு விற்கிறார்கள். ஏன் இப்படி விற்கிறீர்கள் என்று கேட்டால் ஜீ.எஸ்.டி வரியை அபத்தமாகக் காரணம் காட்டுகிறார்கள். எப்படியும் நம் வழிக்கு வந்து பொம்மைகளை வாங்கத்தானே வேண்டும் என்ற தைரியத்தால் இவ்வாறு விற்கப்படுகிறது.


இங்கு நீங்கள் காணும் இரண்டடி உயர பொம்மையின் விலையைக் கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள். முதலில் அது என்ன பொம்மை என்று பலருக்குப் புரியாத நிலையில், கையில் வீணை இல்லாத சரஸ்வதி தேவியின் பொம்மை அது என்றார் ஒருவர். விலையைக் கேட்டால் மயக்கமே வந்து விடும். பதினெட்டாயிரமாம்! என்னதான் வேலைப்பாடாக இருந்தாலும்  ஊரை உலையில் போட்டுப் பணம் சம்பாதிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால் ஒரு ஏழையோ, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவரோ வாங்க முடியாதபடி பொம்மையின் விலை எட்டாக் கனி ஆக்கப் பட்டிருக்கிறது. 

ஆயுத பூஜை என்றால் நெருங்க முடியாத அளவுக்குப் பழங்களின் விலையும்,பூக்களின் விலையும்  ஏறி விடுகின்றன. பாவம் மக்கள்! ஆண்டுக்கு ஒரு முறை தானே என்று இந்த விலை உயர்வை சகித்துக் கொண்டு வாங்குகிறார்கள். முதலில் ஆயுதங்களுக்குப் பூஜை என்று ஆரம்பித்து, சைக்கிள், பைக்,கார் என்று எல்லாவற்றிற்கும் வாழை ,தோரணம்,பூ ஆகியவற்றைக் கட்ட ஆரம்பித்து விட்டதால், வியாபாரிகளுக்குக் கொண்டாட்டம் தானே! 

உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிக்கிறது என்று சொல்லிக்கொண்டு,இப்படி ஏற்றிக்கொண்டே போனால் ஒரு நாள் தாங்கவே முடியாத நிலை வந்து, இந்த பூஜைகளுக்குக் குந்தகம் வராது என்பது என்ன நிச்சயம்? மக்களும் இன்று பூத்து நாளை வாடும் மலருக்கு சேர் ஆயிரம் என்று கொடுத்து வாங்குவதை முடிந்த வரை தவிர்த்து, விலை குறைவான பிறவற்றை வாங்கினால் இவர்களின் கொட்டம் கொஞ்சமாவது அடங்கும். இல்லாவிட்டால், தெரு ஓரம் முளைத்துக் கிடக்கும் அருகம் புல்லையும், எருக்கம் பூவையும் பறித்துக் கொண்டு வந்து விட்டு, சிறிய ஒரு கூறையும் பத்து ரூபாய்க்கு விற்றாலும் அதனை  வாங்கும் நிலை தொடரும். பூஜை செய்யும் அன்பர்கள் சிந்திப்பார்களா? இப்பொழுதாவது வீட்டில்,காய்கறி, பூ ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்பத் தொட்டிகளில் பயிரிடலாம். அதை விட்டுவிட்டு, அரசாங்கத்தையும், வியாபாரிகளையும் நம்புவதோ,குறைகூறுவதோ எந்தப் பலனையும் தரப்போவதில்லை.

Friday, September 22, 2017

படித்ததில் பிடிக்காதவை

காவிரிக்கு ஹாரத்தி 
படித்ததில் பிடித்தது என்று பலர் எழுதுவதை நாம் பலமுறை   பார்த்திருக்கிறோம். படித்ததில் பிடிக்காதது என்று எழுதினால் என்ன என்று தோன்றுகிறது. உலகம் உள்ளவரையில் நல்லது    கெட்டது இருக்கத்தான் செய்யும். " நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய் " என்பது அப்பர் தேவாரம். நம் எல்லோருக்கும் மனதில் நம்மைப் பற்றிய ஓர் எண்ணம் இருக்கிறது.  அப்பழுக்கற்றவன் என்று தன்னை நினைத்துக் கொண்டு அடுத்தவர்களிடம் குறை காண்பதே அது. இப்படி  நினைத்துக் கொண்டு தனது மனதோடு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை.  வெளியில் யாருக்கும் தெரியப்போவதில்லை. கருத்து வேற்றுமை வந்து விட்டால் அழுத்தமான உறவுகள் கூட விரிசல் காண்கின்றன. அப்பொழுதுதான் நம்மைப் பற்றி அடுத்தவர்கள் இதுவரையில் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது முழுவதுமாக வெளிப்படுகிறது. மனம் திறந்து பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு, மனத்தில் உள்ள வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள். மற்றவர்களைத் திருத்துவதாக நினைத்து, வாய்க்கு வந்தபடி பேசுபவர்களையும் பார்க்கிறோம். போதாக் குறைக்கு இந்த வக்கிரங்கள் சமூக வலைத் தளங்களில் அரங்கேற்றப்படுகின்றன. ஆகவே, படித்ததில் பிடித்தது என்று பாராட்டும் வகையில் உள்ளவற்றைவிடப்  பிடிக்காதவை  என்ற வகைக்  குப்பைகளே அவற்றில் அதிகரித்து வருகின்றன. 

மயிலாடுதுறையில் நடைபெறும் காவேரி புஷ்கரம் பற்றித்தான் எத்தனை எத்தனை கருத்துக்கள் ! ஆழ் துளைக் குழாய் மூலம் எடுக்கப்படும் நீரில் புஷ்கரம் கொண்டாடுவதா என்று ஒரு மடாதிபதியே கேட்டதாக வெளியிடப்பட்ட செய்தியைப் படித்து மிகவும் வருந்தினோம். வறண்டு கிடக்கும் ஆலயத் திருக்குளத்திலும் இவ்வாறு  எடுக்கப்படும் நீரிலேயே  தீர்த்தவாரி செய்யப்படுவது குறித்து இவர் என்ன கருத்து தெரிவிப்பார் என்று தெரியவில்லை. மக்களது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும் வரையில் இவ்வித ஆராய்ச்சிகள் எடுபட மாட்டா என்பதை அறிய வேண்டும். சாயப் பட்டறைக்  கழிவுகளும், சாக்கடை நீரும் ஆற்றிலேயே விடப்படுகின்றன என்பது என்னவோ உண்மை தான். அந்த நீரில் மட்டும் குளிக்கத்தயார் என்கிறாரா இவர்? கங்கையைத் தூய்மைப் படுத்த முயலுவதில் தவறில்லை. அதைப் புனிதப் படுத்துவதாக மட்டும் எண்ண வேண்டாம். ஏன் என்றால், கங்கை என்று சொல்வதே புனிதம் என்று நம்பும் பாரம்பர்யத்தில் வந்தவர்கள் அல்லவா நாம்?  " புண்ணியா புனிதா " என்று திருமுறைகள் ஒலமிட்டு யாரைத் துதிக்கின்றனவோ அந்த பரமேசுவனிடத்திலிருந்து வரும்போது அது புனிதமாகி விடுகிறது. 

இதுபோன்ற மிகப் பெரிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைப்பது எவ்வளவு சிரமானது என்பதை மிகச் சிலரே உணருவார்கள். மற்றவர்களது கண்களுக்குக் குறைகள் மாத்திரமே தெரிய வரும். குறைகள் எங்கே தான் இல்லை? குறை சொல்வதற்கு மற்றோர் காரணமும் உண்டு. பொறாமை என்பதே அது. அடுத்தவர் பெயரும் , புகழும் பெறுவதை சகிக்காத நிலைதான் அது. நம்மால் செய்ய முடியாததை/செய்யத் தயங்குவதை  மற்றவர்கள் செய்கிறார்களே என்று எண்ணத்தில்  மனம் வெதும்புவர்களுக்கு என்ன சொல்வது? 

144 ஆண்டுகளுக்கு மகா புஷ்கரம் நடப்பதற்கான ஆதாரம் இல்லை என்று எழுதுகிறார் ஒருவர். இவருக்கு ஒன்று மட்டும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். ஆதாரம் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், இந்த நிகழ்ச்சி பலதரப் பட்ட மக்கள் ஒருங்கிணைய வழி வகுத்தது என்பதை இவரால் மறுக்க முடியுமா? கிராமக் கோயில்கள் சிலவற்றில் (மடத்துக் கோயில்கள் உட்பட ) நடைபெறும் தீர்த்த வாரிகளில் நீராட வருவோர் சிலரே! ஆதீனத் தம்பிரான்கள்  கூட வராத ஆலயங்கள் உண்டு. இப்படி இருக்கும்போது இவர்கள் மக்களை ஒருங்கிணைக்கத் தவறி விட்டார்கள் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா?  சில நூறு நபர்களே துலா உற்சவத்தின் போது நீராடும் அதே படித்துறைகளில் லக்ஷக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளைக் களைந்து நீராடியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 

எழுத்து சுதந்திரம் என்ற போர்வையில் எது  வேண்டுமானாலும் எழுதுவது என்பது வாடிக்கை ஆகி விட்டது. மற்றவர் செய்கை பிடிக்காவிட்டால் மௌனியாக இருந்து விடலாம். கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றால் யார் வற்புறுத்தப் போகிறார்கள்? இப்படி அறிக்கை விடுவதால் யாருக்கு லாபம்? நாத்திக வாதிகளுக்கும், மற்ற   சமயத்தவர்களுக்கும் தூற்றுவதற்கு வசதி செய்து கொடுக்காமல் ஒதுங்கி இருப்பது நாட்டுக்கும் சமயத்திற்கும் இவர்கள் செய்யும் பேருபகாரமாக இருக்கும்.

Sunday, August 13, 2017

தரைமட்டம் ஆக்கப்பட்ட மானம்பாடி சிவாலயம்

மானம்பாடி ஆலயம் - பழைய படம் 
கும்பகோணத்திலிருந்து திருப்பனந்தாள் செல்லும் பெருவழியில் சாலை ஓரமாகவே இருப்பது மானம்பாடி என்ற ஊரில் உள்ள ( இருந்த ?? ) சிவாலயம். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தேசீய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய வேண்டி இக்கோயிலின் மதிலை இடித்து விட்டுப்  பிராகாரத்தின் ஒரு பகுதியையும் சாலையோடு இணைக்க முன்வந்தார்கள் நெடுஞ்சாலைத் துறையினர். மிகக் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட இக்கிராமத்தில் இதனைத் தட்டி கேட்க முடியாது போகவே, வெளியூர் அன்பர்களின் பெரு  முயற்சியால் கோயில் காப்பாற்றப்பட்டது. 

பழைய முன்புறத் தோற்றம் 
அந்த நாட்களில் கோயில் பல இடங்களில் சிதிலமாகியும், விமானங்கள் வேரோடியதால் முன் மண்டபம் பிளவு ஏற்பட்டும் மேற்புறம் புதர்களோடு காணப்பட்டது. ஒரு கால பூஜையே நடந்து வந்த நிலையில் யாரும் திருப்பணி செய்ய முன்வரவில்லை. வரலாறு மற்றும் கல்வெட்டு ஆர்வலர்கள் இக்கோயில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது என்று கட்டுரை எழுதினார்களே ஒழிய, திருப்பணிக்கான முயற்சியை எவரும் மேற்கொள்ளவில்லை. 

பழுதடைந்த விமானம் 
ஒரு வழியாகத்  திருப்பணியானது சுமார் ஓராண்டு முன் நடை பெறத் தொடங்கியது.  அந்த சமயத்தில் கோயிலுக்குச் சென்ற போது , ஆலய நிர்மாணக் கற்களை எண்களிட்டு ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து இடைவெளியில் ஊடுருவியிருந்த வேர்களை அகற்றியபின், உரிய எண்ணின் படி, கற்களை அதே இடங்களில் அமைத்துக் கட்டப்போவதாகத் தெரிவித்தனர். 

சில மாதங்கள் முன்பு அந்த வழியில் போகும் போது பார்த்தால், அங்கே கோயில் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது தெரிய வந்தது. கோஷ்டத்தில்  இருந்த  மூர்த்திகளும், மூல மூர்த்திகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய செய்தியும் பத்திரிகைகளில் வந்ததாகத் தெரியவில்லை. அண்மையில் தமிழ் நாட்டிலுள்ள புராதனக் கோயில்களின் தற்போதய நிலை பற்றி யுநெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கோயில் தரை மட்டமாக ஆக்கப்பட்டதைப் பற்றிக்  குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கு இந்து அறநிலையத் துறையும், தொல்பொருள் துறையும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். சாலை விரிவாக்கத்தின்போது தான் மௌனிகளாக இருந்தார்கள். இப்போதாவது வாயைத் திறக்கக் கூடாதா? தமிழர் பண்பாடு, கலை,  நாகரீகம், வரலாறு, கல்வெட்டு என்றெல்லாம் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்பவர்கள் எதற்காகக் கவலைப் படப் போகிறார்கள் ?  இராஜேந்திரனின் ஆயிரமாண்டைக் கொண்டாடுவதாகக் கூறிக் கொண்டு பலனை அனுபவித்தவர்கள் ஆயிற்றே ! ஆகவே சிவனடியார்களது மனம் மட்டுமே வேதனைப் படுகிறது. 

தரை மட்டமாக இடித்தவர்கள் மீண்டும் அதே இடத்தில் அதே கற்களைக் கொண்டு பழமை மாறாமல் கட்டுவார்களா? அப்படியானால் வேலை எப்பொழுது துவங்கி எப்பொழுது நிறைவு பெற்றுக் கும்பாபிஷேகம் நடைபெறும்? அதிகாரிகள் யாராவது பதில் சொல்ல முன் வருவார்களா? 
    

Thursday, August 3, 2017

ஆலயத் திருட்டுக்கு அதிகாரிகள் பொறுப்பு ஏற்பரா ?

ஆலயங்களில் திருட்டுக்கள்  தொடர்ந்து நடைபெற்றும், தேவையான தடுப்பு நடவடிக்கை  எடுக்க அரசாங்கம் முனைவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் உற்சவ மூர்த்திகளை ஒரு பெரிய கோவிலில் வைத்து ஆண்டுக்கணக்கில் புழுதி பட வைத்துப் , பூஜைகள் இல்லாமல் பூட்டி வைப்பது ஒன்றுதான். கிராமக் கோயில்களில் உள்ள  மூர்த்திகளுக்குத்தான் இந்த நிலை என்பதில்லை. நகரத்தில் உள்ள பெரிய கோயில் ஒன்றிலும் இதே நிலை என்பதை அண்மையில் அறிந்து மனம் குமுறியது. இவ்வளவுக்கும் நிர்வாக அதிகாரியின் அலுவலகம் இயங்கும் கோயில் அது. காணாமல் போனால் நாம் அல்லவா பதில் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தால் அனைத்தையும் ஒரே அறையில் பாது காப்பு என்ற பெயரில்  வைத்து ப் பூட்டி  விடுகிறார்கள். அந்நாளில் மூர்த்திகளை இதற்காகவா கோயில்களுக்கு வடிவமைத்துக் கொடுத்தார்கள்? அப்படியானால், கோயில் நிலங்களையும், நிலங்களையும், நகைகளையும்,கட்டிடங்களையும் பாதுகாக்காமல் எதற்காக அறநிலையத்துறை அதிகாரிகள் என்ற பெயரில் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே கேள்வி. தாங்கள் அமர்ந்திருக்கும் ஆலயங்களுக்குள் நடைபெறுவதையே மேற்பார்வை இடாதபோது தேரடியில் உள்ள தேர்சிற்பங்கள் களவாடப் படுவதற்காகவா  கவலைப் படப் போகிறார்கள் ? 

சென்ற வாரம் கும்பகோணம் கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ப்ராகாரத்தில் இருந்த லிங்க பாணம் காணாமல் போய் விட்டது என்ற பத்திரிக்கை செய்தி பக்தர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் யாராவது குரல் கொடுத்தார்களா என்றால் இல்லை என்ற பதிலே வரும். உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் வருகை தரும் இந்தக் கோயிலிலேயே  பாதுகாப்பு இல்லை என்றால் கிராமக் கோயில்களைப் பற்றிச் சொல்வானேன்?  பாதுகாப்புக்காக இரும்புக் கதவு அமைத்துக் கொடுத்தால் அதை மூடிப் பூட்டி வைப்பதில்லை. நிர்வாகம் செய்ய வேண்டிய அதிகாரி இதுபோன்ற குறைபாடுகளை அவ்வப்போது நேரில் கண்டறிந்து திருத்தியிருந்தால் இப்படி நடந்திருக்குமா? தமது சவுகரியப்பட்ட நேரத்துக்கு வருகை தந்துவிட்டுக் கோயிலுக்குள் செல்லாமல், அலுவலகத்தோடு திரும்பிவிடும் அதிகாரிகளைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். 

தெய்வத்திற்கு அஞ்சி இதுபோன்ற பாவச் செயல்கள் செய்யாமல் இருந்த காலம் போய், விதி முறைகள் மீறுவது என்பது வாடிக்கை ஆகி விட்டது. கோபுர வாசல் வழியாக அனைத்து வாகனங்களும் கொடி மரம் வரையில் வருகின்றன. கண் காணிப்பு கேமரா பொருத்துவதோடு சரி. யார் வருகிறார்கள் என்று கண் காணிக்கப்படுவதில்லை. பிறகு ஏன் இப்படித் தெண்டச் செலவு செய்கிறார்கள்? அர்த்தமண்டபம் வரையில் அனைவரும் செல்ல அனுமதிக்கும்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். 

இவ்வாறு புலம்பிப் ,போஸ்ட் மார்டம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் தீர்வு ஏதாவது உண்டா என்று பார்ப்போம். முதலாவதாக இந்தப் பிரச்னைக்கு மூல காரணம் போதிய பாதுகாப்பு இல்லாததும், மேற்பார்வை செய்யப் படாததும், பொறுப்பு வழங்கப்படாததும் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். இந்த மூன்றிலும், பொறுப்பு அளிக்கப்பட்டால் மீதி இரண்டும் தற்காப்புக்காகவாவது நடத்திக் கொள்ளப் பட்டுவிடும்.  

ஒவ்வொரு அதிகாரிக்கும் ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் வழங்கப்படும்போது அவர்களைப் பொறுப்பு உடையவர்களாக ஆக்க வேண்டும். ஆலய சொத்து காணாமல் போனால் நிர்வாக அதிகாரியே அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அந்தப்பகுதி துணை/இணை கமிஷனர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். அறநிலையத்துறை அமைச்சரோ , கமிஷனரோ (ஆணையரோ) பொறுப்பு ஏற்காத நிலையில் இவர்களாவது பொறுப்பு ஏற்கட்டுமே! துறையைத் தலைமை வகிப்பவர் ராஜினாமா செய்வதற்கு அவர்  லால்பகதூர் சாஸ்திரியா என்ன? குறைந்த பட்சம் அவர்கள் களவாடப்பட்ட கோயில்களுக்கு வருகை தந்து ஆய்வு மேற்கொள்கிறார்களா பார்ப்போம் . 

இனியாகிலும் ஓர் விதி செய்வோம். கோயிலில் திருட்டு நடந்தால் நிர்வாக அதிகாரி,துணை மற்றும் இணை கமிஷனர்கள் மறுநாளே தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுப் பின்னர் இட மாற்றம் செய்யப் படவேண்டும். இவ்வாறு பொறுப்பு வந்தவுடன் அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட வழி ஏற்படுகிறது. இப்போது நடைபெறுவதுபோலப்  போலீசிடம் புகார் அளித்துவிட்டு,சம்பந்தப்படாதவர்களைப் போலக்  காற்றாடியின் கீழ் அமர்ந்துகொண்டு சொந்த வேலையைப் பார்க்க முடியாது அல்லவா? தற்போதைய நிலை என்னவென்றால் இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் சிப்பந்திகளே பலி கடாக்களாக ஆக்கப் படுகின்றனர். நாம் நமது புராதனப் பொக்கிஷங்கள் ஒவ்வொன்றாக இழந்து வரும்போதும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் அறநிலையத்துறை என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்படும். அரசாங்கத்தின் காதுகளில் விழும் வரை இந்த ஆராய்ச்சி மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். 

Sunday, June 11, 2017

வழிபடுவோர் உரிமை

திருவாரூர்த் தேர் 
தனி மனிதர் உரிமை என்ற பெயரில் சமீப காலமாக என்னவெல்லாமோ நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். நாடு நமக்குக் கொடுத்த அடிப்படை உரிமைகள் இருக்கும்போது புதியதாகப் பல மாற்றங்களை உரிமை என்ற பெயரில் செய்கிறார்கள். இதன் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவைப்படாதவர்களே இப்படிச் செய்யத் துடிக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் மக்கள் மத்தியில் செல்வாக்கு மட்டுமே. செல்வாக்கு இருந்தால் செல்வம் பல வழிகளில் கூடவே வந்து விடுகிறது. அதுவும் மித மிஞ்சிப் போகும்போது நீதி மன்றங்கள் பத்து பதினைந்து ஆண்டுகள் வழக்கை நடத்தி விட்டுப் பிறகு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியவுடன் அவர்கள் மீண்டும் துளிர் விடுகின்றனர். அதைக் காணும் பிறரும் அது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர். இவ்வளவுக்கும் மூல காரணம் ஒழுக்கமின்மையே.

ஒருவன் என் உணவை தீர்மானிக்க எனக்கு சுதந்திரம் உண்டு என்று வாதிடுவான். மற்றொருவன் கடவுளே இல்லை என்று பிரசாரம் செய்வான். வேறொருவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சரமாரியாக வசை பாடுவான். இத்தனையையும் விரிவாக அலச ஊடகங்கள் காத்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக நாகரீகம் உச்ச கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. கேவலமான எண்ணங்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுகின்றன. புனிதமாகக் கருதப்படும் திருமணச் சடங்கு கேலிக் கூத்தாக மாறுகிறது. தாலி எதற்கு என்று கூவுவோர் அதைப் பெண்கள் வாயிலாகவே சொல்லச் செய்கின்றனர். திரைப்படத்தில் காசைப் பார்த்த நடிகை ஒருத்தி, திருமணத்திற்கு முன்பே பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறாள். நாத்திகம் பொறிக்கப்பட்ட கொடிக்கம்பம்  மடாதிபதி முன்னிலையில் திறந்து வைக்கப்படுகிறது.இதெல்லாம் எதைக் காட்டுகிறது?  மக்கள் ஒழுங்கான பாதையிலிருந்து விலகித் தறி கேட்டு ஓடுவதைத்தான் என்பதில் ஐயமில்லை. இப்படிப்பட்ட உரிமை நமக்குத் தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

வழிபாடு செய்வதிலும் ஆகமம் நமக்கு எத்தனையோ தலைமுறைகளாக வழி காட்டி வந்துள்ளது. அதெல்லாம் எதற்கு என்றும்,எனக்குப் பிடித்த வகையிலே நான் வழிபடுவதில் என்ன தவறு என்றும் கேள்விகளை எழுப்புகிறார்கள். கோயில்களும் நவீன மயமாக்கப் படுகின்றன. ஒலி  பெருக்கிகளில் எந்தப் பாடலையும் அலற விடுவார்கள். பேருந்துகளில் பயணம் செய்யும்போது பாடல்கள் அலறுவதை ஆட்சேபிக்காத மக்கள் , கோயில்களில் மட்டும் ஆட்சேபிக்காததில் வியப்பு ஒன்றும் இல்லை. நாம் அந்த வகையில் வளர்க்கப் படுகிறோம். அடுத்தவருக்குத் துன்பம் தருகிறோம் என்று சற்றும் நினைத்துப் பார்ப்பதில்லை. தாங்களே மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்வார்கள். நந்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு காதில் முணுமுணுப்பார்கள். வரிசையில் நிற்காமல் இடித்துக் கொண்டு போவார்கள்.

திருவாரூர் தேர் தமிழகத்திலுள்ள தேர்களில் மிக உயரமானது. அத்தேர் வரும் வழிகளில் இரு புறங்களிலும் வீடுகளை நீட்டிஇருப்பதால் தேர்ச் சீலைகள் அடிபட்டு விழுந்து விடுகின்றன. போதாக் குறைக்கு மின்சாரக் கம்பங்கள் வேறு . அகலமான அந்த வீதியில் அவற்றைத் தள்ளி நடுவதில் மின் வாரியத்திற்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. தேரின் முன்புறம் நான்கு குதிரைபொம்மைகள் பாய்ந்து வரும் நிலையில் இணைக்கப் பட்டிருக்கும். அவற்றின் நீண்ட கால்கள் தேரைத் திருப்பும்போது ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் கட்டிடங்களில் இடி படும் என்று தெரிந்தும் நகராட்சி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். மாறாக அக்குதிரைகளின் நீட்டிய கால்களை மடித்து ( சீம்பிப் போன வடிவில்) மாற்றி அமைத்து வழக்கமான அழகைக்  கெடுத்து விட்டார்கள். இப்படிப்பட்ட ஒப்பந்தத்தால் இன்னும் வரும் ஆண்டுகளில் தேரின் உயர- அகலங்களையே குறைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. அப்படிச் செய்ய எனக்கு உரிமை உண்டு என்று வாதத்திற்கு வருவார்கள். கோர்ட் தீர்ப்பு வரும் வரையில் ஆண்டுக் கணக்காகத்  தேரை ஓட்டாமல் இருக்க முடியாது. ஆகவேதான் இதுபோன்ற மீறல்களைத் தட்டிக் கேட்க முடியாமல் போகிறது. இதனால் வீதியின் அகலம் குறுகுவதோடு , திருப்பங்களில் ஜன நெரிசல் அதிகமாகிறது. அப்போது தேரில் யாராவது சிக்கினால் என்ன செய்ய முடியும் ? தீ அணைப்புத் துறை வாகனம் கூடவே வந்தாலும், தேர் சக்கரம் ஏறிவிட்டால் பிழைப்பது துர்லபம்.

விதி மீறல்களுக்கும் , வாக்கு மீறல்களுக்கும் மனித உரிமை துணை போகக் கூடாது. ஜனநாயகம் என்ற அருமையான வாழ்வியல் முறை பாதிக்கப் படுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் நெறி முறையும், கண்டிப்பும்  அவசியம் தேவை என்பதை மக்கள் உணர வேண்டும். அந்த நெறிமுறையைப் பின்பற்றத் தூண்டுவதே ஆலய வழிபாடு. அதற்கும் கட்டுப் பட மாட்டேன் என்று அடம் பிடிப்பவர்களைத் தக்க வகையில் திருத்த வேண்டியது ஆளும் அரசின் இன்றியமையாத கடமை ஆகும் . வழிபடுவோரது உரிமை (Worshippers' right) பற்றிக் கவலைப் படுவோர் யாராவது இருக்கிறார்களா என்ன? 

Friday, May 19, 2017

உண்டியல் முறைகேடு

நந்தியே சாட்சி 
கோயில்களுக்குக் காலம் காலமாக விவசாய நிலங்களும், மனைக் கட்டுக்களுமே வருமானம் தந்து கொண்டிருந்த நிலையில், உண்டியல் ஒன்றை  எப்பொழுது அமைக்க ஆரம்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாளடைவில் பிரார்த்தனை செலுத்துவதற்காகவும் பக்தர்களால் அது ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. உண்டியலில் செலுத்தப்படும் தொகை எந்த வகையில் கோயிலுக்குப் பயன் படுத்தப் படுகிறது என்று எவரும் கவலைப் படுவதில்லை. அதற்கான கணக்குகளை மக்கள் முன் வைக்கவேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக அதிகாரிகளும் உணர்வதில்லை . வேண்டுமானால் சில விடாக் கண்டர்கள் தகவல் அறியும் சட்டம் மூலம் விவரம் அறிய முற்பட்டாலும், முழுத் தகவல் பெற முடியாததோடு அது வெறும் கண் துடைப்பகவே ஆகி விடுகிறது. 

இதற்கிடையில், உண்டியல் வருமானத்தைக்  கோயில்களுக்குச் செலவிடுவதோடு, அரசின் பிற செலவுகளுக்கும்  பயன் படுத்தப் படுகிறது என்ற புகார் எழுகிறது. இதனால் தணிக்கை என்ற ஒன்று ஆண்டுதோறும் முறையாக நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. 

பல கோயில்களில் உண்டியல் நிரம்பி வழியும்போதும் திறந்து எண்ணுவதற்கு அதிகாரிகள் வருவதில்லை என்று மக்கள் தரப்பில் குறை கூறப்படுகிறது. உண்டியலில் கால் வாசியோ அல்லது அரைவாசியோ காணிக்கை வந்தவுடன்  திறந்து எண்ணுவதால் பல நன்மைகள் உண்டு. மொத்தமாகப் பெரிய தொகை களவாடப்படுவது தவிர்க்கப்படுகிறது. எண்ணுவதற்கான நேரமும் குறையும். எண்ணும்  நபர்களும் அதிகம் தேவைப் படாததால் முறைகேடு நடப்பது குறைக்கப்படும். எண்ணுவதற்காகவாவது அதிகாரிகள் கோயிலுக்கு வருவார்கள் அல்லவா? 

பிரபல தொலைக் காட்சி ஒன்றில் கோயில் உண்டியல் எண்ணப்படும்போது ,அதிகாரி ஒருவர்  நோட்டுக் கட்டுக்களைத் தனது பான்ட் பாக்கெட்டில் பதுக்கிக் கொண்டதை (வீ டியோ காமிராவில் பதிவானதைக்)காட்டினார்கள். அப்படிக் களவாடப்பட்ட தொகை இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இதை விடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?  ஆதாரத்துடன் வெளியாகிய தகவலுக்குத் தண்டனை பெற வேண்டிய அந்த அதிகாரியை மற்றொரு பிரபலமான கோயிலுக்கு மாற்றியதோடு பதவி உயர்வும் கொடுத்திருக்கிறார்களாம்!  அங்கு போயும் உண்டியல் பணத்தில் கை வைக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? எந்த தண்டனையும் வழங்கப்படாததற்கு எதற்காக மூலைக்கு மூலை  காமிரா அமைத்துத் தண்டச் செலவு செய்கிறார்கள்? திருடன் உள்ளே இருந்தால் ஒரு நீதி. வெளியிலிருந்து வந்தால் வேறு நீதியா? 

டியூப் லைட்டில் கூடப் பெயர் போட்டுக் கொள்கிறார்கள் என்று கிண்டல் பேசுபவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும். அவ்வாறு போடாவிட்டால், நிர்வாகம் வாங்கிப் போட்டதாக அதிகாரி பொய்க் கணக்கு எழுதிவிட்டு, அதோடு பொய் ரசீதையும் இணைத்து விடுவார் என்ற ஐயமே காரணம். இந்த அதிகாரிகள் ஒன்றும் குறைவாக சம்பளம் வாங்குவதில்லை. அரசாங்க வேலை மற்றும் சலுகைகளை  அனுபவித்துக் கொண்டே உண்டியல், கட்டிட ஒப்பந்தக்காரர்கள், கோயில் மனைகள் மூலமும் நிலங்கள் மூலமும்,பெற வேண்டிய வருமானங்களைக் கேட்காமல் காலம் தாழ்த்தியும்  ஆதாயம் அடைகிறார்கள். இவர்களுள் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கலாம். எனினும் சில புல்லுருவிகளின் செயலால் மொத்தத் துறையே தலை குனிந்து நிற்கிறது. இப்படி இருந்தும், அரசாங்கம் அறநிலையத் துறையை விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பானேன் என்று கேட்கலாம். ஏனென்றால் அது பொன் முட்டை இடும் வாத்து. 

Monday, May 15, 2017

கை விடப்படும் தேர்கள்

திருவிடைமருதூர் 
பெரிய ஆலயங்களில் நடைபெறும் பிரமோற்சவ விழாக்களில் ஒரு நாள் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பிரபலமானதும், வருமானம் உள்ளதுமான கோயில்களின் தேர்கள் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும்,அவற்றை ஆண்டு முழுதும் வெய்யிலிலும்,  மழையிலும் பாதிக்காதபடி நிறுத்தி வைப்பதற்குத்  தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. தேர் நிலைகளின் தரமோ சொல்லும் படி இல்லை. சில இடங்களில் மரம் முளைத்துப் போய் முற்றிலுமாகக் கை விடப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஆலயத் திருப்பணி செய்பவர்களுக்குக் கூட ஏற்படாதது பரிதாபம்! 


திருவிடைமருதூர் தேரழகு 
தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பேருதவியோடு திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியின் தேர் புதிதாகச் செய்யப்பட்டபோது தேர் நிலையும் பழுதுபார்க்கப்பட்டு, வண்ணம் பூசப்பட்டது. ஐந்து தேர்கள் பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஓடியதைக்  கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர். 
வேதாரண்யத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேரடியில் ,எஞ்சிய பாகங்களுடன் பரிதாபமாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தேரைக் கண்டவுடன் நெஞ்சம் கலங்கியது.இப்படி அக்கறையின்றி நமது புராதனத் தேர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழக்கிறோமே என்று பதறிப் போனோம். தேரடியில் தகரக் கொட்டகைக்குள் தேரை நிறுத்தியிருந்தால் இந்நிலை வந்திருக்குமா?  ஏனைய ஊர்களில் உள்ளவர்களும் இந்நிலையைக் கண்ட பிறகும் பாடம் கற்கவில்லை. புதிய தேர் செய்து விடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சில ஊர்களில் முன் வருகின்றனர். ஆனால் , அவ்வாறு செய்யப்படும் தேர்களில் பழைய தேர்களில் இருந்தது போல அற்புதமான மரச் சிற்பங்களை அமைக்காமல் பெயருக்குச் சிலவற்றையே அமைக்கிறார்கள். 
புதிய தேர் - திருவாரூர்

பழைய தேர்- திருவாரூர் 
                                             
பிரமாண்டமான தேர் என்றால் திருவாரூர் தியாகப்பெருமானது தேரே நினைவுக்கு வரும். இதனை " ஆழித் தேர்" என்று தேவாரம் குறிப்பிடுகிறது. அப்பழைய தேரைப்  பழுது பார்த்து இயக்க முடியாத நிலையில் ( ?) புதிய தேரை வடிவமைக்கிறார்கள். இருந்தாலும் பழமைக்கு ஈடாகாது என்பதை இங்குள்ள படங்களால் அறியலாம்.
திருப்பயத்தங்குடி-கொட்டகைக்குள்  ரதம் 

திருச்செங்காட்டங்குடிக்குச் சென்றாலோ தேரடியில் பழைய தேரின் சில மரக் கட்டைகளே எஞ்சி நிற்கக் காணும்படி ஆகி விட்டது!. இதெல்லாம் அலட்சியத்தால் ஏற்பட்ட நிலையா? கோயில் நிர்வாகிகளும் உள்ளூர் வாசிகளுமே பதில் சொல்ல முடியும்.   
வேதாரண்யத் தேர் 

திருமீயச்சூரிலும் கைவிடப்பட்ட தேரினைக் கண்டோம். என்னதான் புதிய தேருக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதானாலும் பழைய தேரினைத்  தெருக்கோடியில் மழையிலும் வெய்யிலிலும் நிற்க வைத்ததன் விளைவுதானே இது? புதிய ஒன்றைப் பெரும் பொருட் செலவில் செய்தாலும் பழைய தேர் ஆகுமா? 

மக்கள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாததால் இந்நிலை நீடிக்கிறது. தொலைக் காட்சிகளும், மயிலாப்பூர், மதுரை,ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பிரபலமான ஊர் ஆலயத் தேரோட்டங்களைக் காட்டுவதோடு , பராமரிப்பு அறவே இல்லாத தேர்களின் பரிதாப நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திருப்பணி செய்பவர்கள் தேர்த் திருப்பணியைப்  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவதால் பழைய தேர்கள் மீண்டும் பழுது பார்க்க இயலாத நிலைக்கு வந்து விடுவதோடு, புதிய தேர் செய்யப்  பெரிய தொகை தேவைப்படுகிறது. அவ்வாறு செய்தாலும், மீண்டும் அவற்றைத்   தகரக் கொட்டகைக்குள் மூடி வைக்காமல் திறந்த வெளியில் வைப்பவர்களுக்கு என்ன சொல்வது? சமூக விரோதிகள் தேரடியில் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. மரச் சிற்பங்களும் பாதுகாப்பின்று கைவிடப்படுகின்றன. கலை, வரலாறு என்று மார் தட்டுபவர்கள் கூடக் குரல் எழுப்பக் காணோமே!   

Friday, April 14, 2017

சிவ நாமம்

ஒவ்வொரு ஆண்டும் புது வருஷம் பிறந்ததும் அதை எப்படிக் கொண்டாடுவது என்ற சிந்தனை வருகிறது. இப்பொழுதெல்லாம் சனி-ஞாயிறோடு சேர்ந்து வந்து விட்டால் ஊரை விட்டே புறப்பட்டுச்  சுற்றுலாவுக்குச் செல்வது என்று ஆகி விட்டது. அன்றைய தினம் வீடு பூட்டிக் கிடக்கும். வாசலில் பண்டிகை தினமான அன்று கோலம் கூடப் போடுவாரின்றி  அலங்கோலமாகக் கிடக்கும். சுவாமி அறை என்று ஒன்று இருந்தால் அங்கு யார் விளக்கேற்றப் போகிறார்கள்?  இப்படி இருக்கும்போது, வேப்பம்பூ   பச்சடியாவது, ஆமை வடையாவது, பானக நீர்மோராவது, பாயசமாவது? இதை எல்லாம் கஷ்டப்பட்டு அடுப்படியில் வெய்யில் காலத்தில் பண்ணுவதாவது?  இதெல்லாம் எதிர்காலத்தில் நம்மை விட்டு விடை பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

புது ஆடை உடுத்திக் கொண்டு கோவில்களுக்குப் போவதும், அர்ச்சனை செய்து விட்டு வருவதும்  ஓரளவு நடைபெற்று வந்தாலும், நாகரீகப் போர்வையில் இந்த பழக்கங்கள் நிலைத்து நீடிக்க வேண்டும் அல்லவா?  பெரியோர்களைச் சென்று பார்ப்பதும் அவர்களது ஆசி பெறுவதும் நடப்பது  கேள்விக் குறி ஆகி வருகிறது. அவரவர்கள் தங்களுக்குள் குறுகிய வளையம் ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களைப் பார்ப்பது வீண் என்று இருக்கிறார்கள். நாம் பத்து முறை அவர்களைச் சென்று பார்த்து விட்டு வந்தால் ஒரு தடவையாவது அவர்கள் நம்மைப் பார்க்க வர வேண்டும் என்று ஆசைப் படுவது தவறா? ஆகவே, உற்றார் உறவினர் என்பது நல்லது கெட்டது நடக்கும் சமயத்தில் ஆஜர் காட்டி விட்டு வந்து விடுவது என்று ஆகி விட்டது. 

வீட்டில் அடைந்து கிடக்கும் ஜன்மங்களும் ( இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும்), வாயால் கொறித்துக் கொண்டே தொலைக் காட்சியில் பட்டிமன்றத்தையும்,படங்களையும் பார்ப்பதோடு, நட்சத்திரங்கள் கூத்தடிப்பதையும் எதற்கும் உதவாத பேட்டி கொடுப்பதையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பஞ்சாங்கத்தை வைத்துப் பூஜை செய்வதும், புது வருஷ பலன் கேட்பதும் அரியதாகி வருகிறது.

இவற்றை எல்லாம் சொல்ல வேண்டியவர்கள் யார்? பெரியோர்களும், குருமார்களும் தான். அவர்களும் குறுகிய வட்டத்தில் சஞ்சரிப்பதால் பெரும்பாலான மக்கள் திசை மாறிப் போகின்றனர். இதற்கு முழுப் பொறுப்பையும் அவர்களே ஏற்க வேண்டும். 

திசை தெரியாமல் வாழ்க்கைப் பயணம் செய்யும் போது தெரிந்தும் தெரியாமலும் பாவ மூட்டையை சம்பாதிக்க வேண்டி இருக்கிறது. இதற்குப் பிராயச்சித்தமே கிடையாதா என்று நினைக்கத் தோன்றும். சிவ நாமாவைச் சொல்வதும், அதனை நினைப்பதும், கையால் எழுதுவதும்  சித்தத்தைச் சுத்தப் படுத்தும். அதன் மகிமையை பார்வதி தேவியே சொல்வதாகப் பாகவத புராணம் குறிப்பிடுகின்றது. ஆகவே, வீட்டில் இருந்து வீண் பொழுது போக்குபவர்கள் தினமும் ஒரு பக்கமாவது சிவ சிவ என்று ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதலாமே! 

வாயால் சொல்லிக்கொண்டே  எழுதினால்  கண்  வேறு எங்கும் அலை பாயாமல் நோட்டுப்  புத்தகத்தில்  லயித்திருக்கும்.  வினைகளை மாள்விப்பதும் , சொல்பவர்களைத் தேவர்களாக்கிச் சிவகதியைத்தருவதும் அந்த நாமம் என்று திருமூலர் அருள் உபதேசம் செய்கிறார். இதைக் கூட செய்ய மாட்டேன் என்னும் மனப்பாறைகளுக்கு எதைச் சொல்லி ஆட்படுத்துவது?   

Wednesday, March 29, 2017

சம்பிரதாயத்தை மீறுவது சரியா?

ஆப்த சிநேகிதர் ஒருவருடன் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திருநள்ளாற்றுக்குச்  சென்றிருந்தபோது ஒரு தம்பிரான் சுவாமிகளை சந்திக்க நேர்ந்தது. சிநேகிதர் அந்த சுவாமிகளுக்கு முன்னரே அறிமுகம் ஆனவர். ஆகவே, அவரே நமது நண்பருடன் , ஒவ்வொரு சன்னதியாகக்  கூடவே வந்து தரிசிக்க உதவினார். ஒரு சன்னதியில் சிவாசார்யரின்  மகன் கற்பூர தீபாராதனை செய்வித்தான். அவனுக்கு வயது ஏறத்தாழ பதினைந்து இருக்கலாம் என்று ஞாபகம். அந்தச் சிறுவன் சன்னதிக்கு வெளியில் வந்து விபூதி பிரசாதம் கொடுத்தபோது தம்பிரான் அவனிடம்," ஏன் ருத்திராக்ஷம் அணியவில்லை" என்று கேட்டார். அதற்கு அவன் தன்னிடம் சிறிய மணிகள் கொண்ட மாலைதான் இருக்கிறது என்றான். சுவாமிகள் விடுவதாக இல்லை. " சின்னதோ பெரிசோ ருத்ராக்ஷம் ருத்ராக்ஷம் தானே? அதை அணியாமல் பூஜை செய்வதும்,விபூதி வழங்குவதும் தவறு அல்லவா? நமது முன்னோர்கள் வகுத்த பாதையிலிருந்து மாறுவது ஆகி விடுமே" என்றார். அவருக்கு நமது மரபின் மீதிருந்த அசையாத பிடிப்பே அப்படிப் பேச வைத்தது. அவர் அத்துடன் நிறுத்தவில்லை. மேலும் தொடர்ந்தார்: " நீங்கள் அணிவதைப் பார்க்கும் சேவார்த்திகள்,தாங்களும் விபூதி-ருத்ராக்ஷம் அணிய வேண்டும் என்று ஆசைப் படலாம் அல்லவா? அதனால் தான் அப்படிக் கூறினேன்." என்றார்.  மகனைத் திருத்தும் தந்தையின் கண்டிப்பையே அங்கு கண்டோம். 

அறுபத்து மூவரில் மூர்த்தி நாயனார் என்பவர்  ருத்ராக்ஷம் அணிவதில் எத்தனை சிரத்தையுடன் இருந்தார் என்பதைப் பெரிய புராணம் காட்டுகிறது. சிவ புராணங்கள் விபூதி ருத்ராக்ஷம் அணிவதன் மகிமையை விவரமாகக் கூறுகின்றன. பல ஊர்க் கோயில்களில் மூலவர் சன்னதியில் ருத்ராக்ஷப் பந்தல் அமைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

வேத பாடசாலைகளிலும்,தேவார பாட சாலைகளிலும் பயில்வோர், கழுத்தில் ஒரு ருத்ராக்ஷ மணி அணிந்திருப்பதைப் பார்க்கலாம். அது எப்போதும் கழுத்தோடு இருப்பதால் கண்ட ருத்ராக்ஷம் எனப்படுகிறது. பூஜா காலங்களில் ருத்ராக்ஷங்களால் ஆன மாலையை அணிந்தே சிவ பூஜை செய்வார்கள். இப்படிப் பயபக்தியுடன் பூஜைக்கும் ஜபத்திற்கும் உகந்த மாலையை ஒரு போதும் உதாசீனப்படுத்தக் கூடாது.  

காங்கேயத்திற்கு அருகில் உள்ள சிவன் மலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்க இருக்கும் நிகழ்ச்சி சூசகமாக வெளிப்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு ருத்ராக்ஷம் வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பொருள் தெரியவில்லை என்றாலும் நன்மையே நடைபெறும் என ஜபமாலை தந்த சற்குருநாதனான வேலவனை வேண்டுவோம். 

ருத்ராக்ஷ மகிமையை அறிந்தவர்களில் சிலர் அதனை அணியாமல் வெறும் கழுத்தோடு வெளியில் வருவதைப் பார்க்கும்போது, உலகிற்கு வழி காட்ட வேண்டியவர்களே இப்படி மாறிவிட்டார்களே என்று மனம் வேதனைப் படுகிறது. இவர்களது குருநாதர்களோ,பிற மகான்களோ செய்யாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இது தொடர்ந்தால் எவரும் இவர்கள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்காத நிலை ஏற்பட்டுவிடும். நமது தர்மத்தையும் பண்பாட்டையும் பேசுபவர்கள் தாங்களே அவற்றைச் செய்து காட்டினால் தான் பிறர் அவற்றைப் பின்பற்றுவர். காலக்  கோளாறு எல்லோரையும் மாற்றிவிடக் கூடாது. 

சிலவற்றை சிலர் சொன்னால் தான் மக்கள் மத்தியில் எடுபடும். பிரபலங்கள் மூலம் பலவகைப் பிரசாரங்கள் நடைபெறுவதைப் போலத்தான் இதுவும்! அப்படிச் சொல்ல வேண்டிய கடமை மேற்கொண்டவர்கள் பாதையிலிருந்து மாறலாமா? பூஜா காலங்களில் மட்டும் ருத்திராக்ஷம் அணிந்தால் இல்லறத்தார்களுக்கும் துறவிகளுக்கும், என்ன வித்தியாசம்?அவர்களை ஒன்றுக்கும் பற்றாத நாம் குறை கூறக் கூடாதுதான். இருந்தாலும் காலம் இவர்களையும் விட்டு வைக்கவில்லையே என்ற ஏக்கமும் மனக் குமுறலுமே இவ்வாறு சிந்திக்க வைக்கிறது. 

திருநெல்வேலிப்  பகுதியில் பல  சைவக் குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் விபூதி -ருத்திராக்ஷம் துலங்கக் காட்சி அளிப்பதைக் காணும் போது நமது மரபு இன்னமும் காக்கப் படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது.   ஆகவே பாதை மாறியவர்கள் தாங்களாகவே முன்வந்து பழையபடி சம்பிரதாயத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் மக்கள் அவர்களைப் புறக்கணிப்பர். ஏனென்றால் இவர்களது வழி காட்டுதல் இல்லாமலேயே, ஆன்மிகம் தழைக்க ஆரம்பித்திருப்பதை அனைவரும் அறிவார்கள். 

Saturday, February 11, 2017

இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்


வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் ஏதோ கதை படிப்பவர்களைப்போல அவற்றைப் படிக்கிறார்களோ என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. மிகச் சிலரே தங்களது ஈடுபாட்டைக் காட்டுகின்றனர். பெரும்பாலானோர் படிப்பதே இல்லை என்று கூடத் தோன்றுகிறது. "இவருக்குத் தான் வேலை இல்லை, ஏதாவது எழுதிவிட்டுப் போகட்டும், நமக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது " என்று இருந்து விடுகிறார்கள். படித்தீர்களா என்று நாம் கேட்டால்,     " ஹி ஹி , படிக்கணும் தான். ஆனால் படிக்கத்தான் நேரமில்லை. நேரம் கிடைத்தால் படிக்கலாம் என்று போல்டரில் போட்டு வைத்திருக்கிறேன் என்கிறார்கள். ஆகையால், இவ்வாறு எழுதுவதால் எந்தப்பலனும் இல்லை என்று ஆகி விட்டது.  நிறுத்திவிடலாம் என்றால், ஆர்வத்துடன் படிக்கும் சிலர் அப்படிச் செய்யக் கூடாது என்று அன்போடு தடுத்துவிடுகின்றனர். 

நமது சமயத்திற்கு இழிவு ஏற்படுத்தும் வகையில் சிலர் செய்யும் கோமாளித்தனமான செய்கைகளைக் கண்டித்து எழுதினால், கூட இருந்து குரல் கொடுப்பவர்களைக் காணோம்! நமக்கு ஏன் வம்பு என்று இருப்பதால் , கேட்ப்பாரில்லாத நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் விஷமிகள் பெருகி வருகின்றனர். 
இப்படிப்பட்ட நிலை எல்லாவற்றிலும் இல்லை. முகநூல் மற்றும் பல சமூகத் தளங்களுக்குச் செல்பவர்களுக்குத் தெரியும். அரசியலும், சினிமாவும் அதில் எவ்வளவு தூரம் ஆக்கிரமிக்கின்றன என்று. சமயம் பற்றிய பதிவுகளைப் படிக்க நேரம் இல்லை என்று சொல்பவர்கள், சினிமா பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிக்கத் தயங்குவதில்லை. யார் எப்படிப் போனால் என்ன என்று அங்கு மட்டும் என் சொல்வதில்லை? 

அயல் நாட்டு நிறுவனங்கள் நமது கடவுளர்களின் படங்களைத்  தாறுமாறாகப் பயன்படுத்தி அவமதிக்கும்போது கூட மிகச் சிலரே பொங்கி எழுகின்றனர். ஆனால் சினிமாவில் வாய்க்கு வந்தபடி கடவுளைக் கிண்டல் செய்பவர்களைக்  கொண்டாடி மகிழ்வதைக் காண்கிறோம்.  அதேபோல அரசியல் வாதியும் என்ன வேண்டுமானாலும் நம் சமயக் கடவுளை ஏசலாம். அப்படிப்பட்டவர்களைத் தான்  நாம் மீண்டும் தேர்ந்து எடுப்போம். 

https://www.youtube.com/watch?v=kd9ia2Bj2nc&authuser=0
https://www.youtube.com/watch?v=kd9ia2Bj2nc

அண்மையில் ஒரு அன்பர் ஒரு திரைப்படப்பாடலில் " ஹர ஹர மகாதேவா " என்ற ஒப்பற்ற நாமம் எப்படிக் கேவலமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த வீடியோவை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். மேற்கண்ட லிங்க் மூலம்  அதைக் காணலாம்.

தனிப்பட்ட   மனிதரை அவமதித்தால் நீதி மன்றம் செல்லத்  தயாராக இருப்பவர்கள் இதற்கு மட்டும் செல்லத் தயங்குவதேன்? இப்படி மௌனிகளாக இருப்பதால் இதுபோன்ற கீழ்த்தரமான பாடல்கள் வெளிவர மக்கள் அங்கீகாரம் கொடுப்பது போல இல்லையா? 

கடவுளுக்குப் பால் அபிஷேகம்  செய்வதற்குப் பதிலாக ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என்றான் ஒரு நடிகன். அவனுக்குக் கண்டனம் தெரிவித்தோர் சிலர் இருந்தாலும் அவனுக்கு மேலும் மேலும் வெற்றிகளை மக்கள் தானே கொடுத்து வருகின்றனர்! அவனது படங்களைப் பார்க்கமாட்டோம் என்று சொல்லத்  திராணி இல்லாத ஜன்மங்கள் ஆகி விட்டோம் நாம்.  கோடி கோடியாகப்  பணம் சம்பாதித்தும் ஏழைகளுக்குக் கொடுக்காதவர்கள் தங்கள் சாமர்த்தியத்தை இப்படிக் காட்டிக் கொண்டு பிரபலம் அடையப் பார்க்கிறார்கள்.

இந்த நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலம் காலமாகத் தொடரும் சாபக் கேடு இது. மதம் , சமயம்,மொழி என்பவற்றில் பற்றில்லாதவர்களாக இருந்து வருவதால் நம்மைப் பிறர் எளிதாக நகையாடுகிறார்கள். சூடு சொரணை அற்ற நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். இறைவன் ஒருவனே, ஊன் புகுந்து கருத்திருத்திக் கருணையினால் ஆட்கொள்ளவேண்டும். பிறந்த நாள் முதலாகவே, அரன் கழல் நினையாத உணர்சியற்றவர்களாகிய  வாழும் நம்மைக்  கருகாவூர் எம்பிரான் காத்தருளுவானாக. 

Thursday, February 9, 2017

சிவ சொத்து

சிவ சொத்தை அபகரித்தால் குலம் நாசமாகி விடும் என்பதால்,   " சிவ சொத்து குல நாசம் ' என்றார்கள் நமது முன்னோர். அவ்வாறு நாசமாவதைப் பல இடங்களில் கண்டும், சிவாலய சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும், அபகரிக்கப்படுவதும் , ஆலயத்திற்குச் செலுத்தவேண்டிய தொகை ஏமாற்றப்படுவதும் தொடர்கின்றன. இவ்வாறு சிவாபராதம் செய்வோர்களை மன்னர்கள் ஆட்சியில் தண்டித்ததாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மக்களாட்சி என்ற பெயரில் ஆட்சியைப் பிடிப்பதிலேயே குறியாக இருப்பவர்கள் தவறு செய்வோரைத் தண்டிக்கத் தவறி விடுகின்றனர். அவர்கள் மூலம் அடையவேண்டிய ஆதாயத்தைக் கணக்கில் கொண்டு, காணாதது போலிருந்து விடுகின்றனர். அறநிலையத் துறை அதிகாரிகள் இப்படிப் பாராமுகமாய் இருந்தால் ஏமாற்றுபவர்களைத் தட்டிக் கேட்பதோ, தண்டிப்பதோ யாரால் முடியும்? 

ஓரிரு இடங்களில் கோயில் சொத்துக்கள் மீட்கப்படுவதாகச்  செய்திகள் வந்தும், வர வேண்டிய பாக்கியைப் பார்க்கும்போது மீட்கப்பட்டவை துரும்பு அளவே எனலாம். அதிக பட்சமாகச் சில இடங்களில் கோயில்களுக்குள் குத்தகை மற்றும் வாடகை தர  வேண்டியவர்களின் பெயர்களையும் அவர்கள் தர வேண்டிய தொகையையும் பற்றிய விவரங்களை எழுதி வைத்து விடுகின்றனர். மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதில்லை. தங்களது பெயர்கள் எல்லோரும் அறியும்படி வெளியானதைப்பற்றிக்  கொஞ்சமும் கவலைப் படாத ஜன்மங்கள் இருப்பதால் தானே கோயில் சொத்துக்கள் பறிபோகின்றன? மீட்கமுடியாத நிலையில் வங்கிகள் கடன் தொகையை வாராக் கடன் என்று சொல்வதைப்போல இதையும் தாரை வார்த்து விடுவார்களோ என்னவோ?

கோயில் சொத்துக்கள் ஒழுங்காகப்பராமரிக்கப்பட்டு வந்தால் உண்டியல்களுக்கோ, உபயதாரர்களுக்கோ, அவசியம் இல்லை. அந்தந்தக் கோயில்கள் தங்கள் வருமானத்திலிருந்தே தேவையான அத்தனை செலவுகளையும் சமாளிக்க முடியும். அந்த நிலைமை வந்தால் தங்களது வருமானம் பறிபோய் விடும் என்ற பயத்தினாலோ என்னவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். ஆலயங்களை ஆட்சி செய்வது மட்டுமே இவர்களுக்கு இலக்காக இருக்கக் கூடாது. அறங்களுக்குப் பாதுகாப்புத் தருவதே குறிக்கோளாக இருக்க வேண்டும். முடியாத பட்சத்தில் கடமையைச்  செய்யத்தவறும் இலாக்கா எதற்காக அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

லட்சக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் குத்தகைக் காரர்களிடம் இருந்தும் அதில் எத்தனை பேர் குத்தகைப் பாக்கியைத் தருகின்றனர்? அப்படி முறையாகச் செலுத்துவோரை அறநிலையத்துறை பாராட்டலாமே. அதனால் மேலும் சிலராவது திருந்த வாய்ப்பு உண்டு அல்லவா?  இந்த நிலை தொடர வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்குமோ என்ற பலமான சந்தேகமே மக்கள் மனதில் ஏற்படுகிறது. 

ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மொத்த குத்தகை பாக்கியையும் வசூலித்துத் தரும் அரசாங்கம் இருந்தால் மட்டுமே கோயில்கள் முன்போல் பொலிவு பெற முடியும். மாறாக, முறைகேடு செய்யும் மையங்களாக அவற்றை ஆக்கி ஆதாயம் தேடினால் ஆலயம் சீரழிவதோடு, திருமூலர் சொன்னதுபோல், மழை பெய்யத் தவறும்; ஆட்சிக்கு ஆபத்து வரும், திருட்டுக்கள் அதிகமாகும். இந்த எச்சரிக்கையை இது வரை நம்பாதவர்கள், நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தாவது நம்புவார்களா? 

Saturday, January 21, 2017

மகேசனுக்காக மக்கள் குரல் ஒலிக்குமா ?


ஜனநாயக முறை எனப்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அம்மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லாது போகும் பட்சத்தில், மக்கள்  தாங்களாகவே முன்வந்து ஒரே குரலாக ஒலித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகின்றனர். பல கால கட்டங்களில் இவ்விதம் குரல்கள் எழுப்பப்பட்டு இருந்தாலும் ஆன்மீக உலகில் மட்டும் இன்னமும் ஒலிக்காதது வியப்பாக உள்ளது. 

எண்ணிக்கையில் பார்த்தால் நாத்திக வாதிகளை விட ஆன்மீகவாதிகள் பல மடங்கு அதிகமாக இருந்தும், நாத்திக வாதம் ஒலிக்கும்போது ஆன்மீக வாதிகள் மௌனிகளாகி விடுகின்றனர். சமயக் கடவுளர்களை இழித்தும் பழித்தும் பேசுபவர்களை எவரும்  கண்டிக்கக் கூட முன்வராததும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நாத்திகர்கள் உரிமைக்குரல் எழுப்புவதும் வியப்புக்குரியதே!

ஆலயங்களுக்குச் செல்வோர் கூட்டம் விசேஷ நாட்களில் அதிகரித்து வந்தபோதிலும், எத்தனையோ ஆலயங்கள் இடிந்தும், மரம் முளைத்தும், இருப்பதைக் கண்ட  ஆன்மீகவாதிகள், " ஐயோ பாவம் " என்று மட்டுமே குரல் எழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார்கள். வருமானம் உள்ள கோயில்களில் அறநிலையத்துறை தொட்டதற்கெல்லாம் கட்டணம் வசூலித்தும் , நாம் வாய் திறக்காமல் அதைச் செலுத்துவதோடு உண்டியலையும் நிரப்பிவிட்டே வருகிறோம். 

சமூக வலைத்தளத்தில் வெளியான கும்பகோணம் கும்பேஸ்வர சுவாமி ஆலயக் கட்டணப் பட்டியலே இங்கு நீங்கள் காண்பது: 

இதை விடப்  பிரபலமானதும் மக்கள் அதிகமாக வருகை தருவதுமான ஆலயங்களில் வசூலாகும் கட்டணங்கள் எவ்வளவு இருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். 

அபிஷேகக் கட்டணம் என்று வசூலிக்கிறார்கள். சுவாமி மலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி கோயிலில் வசூலிக்கப்படும் அபிஷேகக் கட்டணத்தை இங்கு எடுத்துக் காட்டாகத் தரலாம். அபிஷேகம் செய்யாதவர்கள் பொது தரிசனத்தில் நிற்பவர்களுக்கு சுமார் பத்து பதினைந்து அடி முன்பாக நின்று தரிசிப்பதற்கு சிறப்புக் கட்டணமாக முப்பது ரூபாய்  வசூலிக்கப்படுகிறது. 750 ரூபாயாக இருந்த அபிஷேகக் கட்டணம் தற்போது 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பேர் அபிஷேகத்திற்குப் பணம் செலுத்தியிருந்தால் சற்றுக் கூடுதலாகப் பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வளவே! ஒரு பாத்திரத்தில் நைவைத்தியப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கு இவ்வளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டுமா ?

திருப்பணி செய்ய வேண்டுமா? உபயதாரரைப் பிடியுங்கள். நித்திய அன்னதானமா, உபயதாரரைப் பிடியுங்கள். திருவிழா நடைபெற வேண்டுமா? அதற்கும் உபயதாரர்! இப்படி எல்லாவற்றுக்குமே உபயதாரர் வேண்டுமென்றால் ஆலய நிர்வாகத்தையும் தக்கவர்களிடம் கொடுத்து விடலாமே என்ற கோரிக்கை எழுகிறது. மேலும் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கைகள் வேறு திசையில் திருப்பி விடப்படுவதாகப்  புகார்கள் எழுகின்றன. கோயில் நிலங்களும்,கட்டிடம் போன்ற சொத்துக்களும் சூறையாடப்பட்டு விட்டன. நூற்றுக்கணக்கான ஏக்கர் நில புலங்களைக் கொண்ட ஆலயங்களும் உபயதாரரை நம்பியே இருக்கின்றன. விளக்கு ஏற்ற எண்ணெய்  இல்லை என்கிறார்கள். இந்த நிலையில் சிப்பந்திகளுக்குக் கொடுக்கப்படும் சில நூறுகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாரிகள் மட்டும் எதையும் விட்டு வைக்காமல் கம்பீரமாக வலம் வருகின்றனர்.  

இதுபற்றியெல்லாம் ஒருமித்த குரலாக  ஆத்திக அன்பர்கள் செயல் படாதது ஏன் என்று புரியவில்லை.அரசை நம்புவதால்  முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய் விட்டது. முன்பெல்லாம் மடாதிபதிகள் ஊர் ஊராகக் கால் நடையாகவும் பல்லக்கிலும் சென்று அங்கு தங்கி மக்களை நல்வழிப்படுத்தியதோடு அவ்வூர் ஆலயங்களின் புனரமைப்புக்கும் பராமரிப்புக்கும் ஆவன செய்தார்கள் என்று அறிகிறோம். ஆனால் இப்போது ஏன் அவர்கள் வருகை தருவதில்லை என்று மக்கள் ஏங்குகிறார்கள். ஆன்மிகம் தழைக்க வேண்டும் என்று வாயளவில் சொல்லிக்கொண்டு இருக்கும் அன்பர்களும்  முன்வந்து பணியாற்ற வேண்டிய வேளை  இப்போது வந்து விட்டது. 

தமிழ் வேறு சிவம் வேறு அல்ல. " தமிழன் கண்டாய்" என்று இறைவனைப் போற்றுகிறது தேவாரம். இடைக்காடர் என்ற தமிழ்ப்புலவரைப்  பாண்டியன் மதியாமலிருந்தான்  என்பதற்காக மதுரைக் கோயிலை விட்டே நீங்கி இறைவனும் இறைவியும்  வைகை ஆற்றங்கரைக்குச் சென்று வட திருவாலவாய் என்ற இடத்தில் தங்கியபோது  பாண்டியன் தனது தவறுக்கு வருந்தி மன்னித்தருளுமாறு வேண்டிய பின்னரே திரும்பவும் இருவரும் ஆலவாய்க்குத் திரும்பியதாகத்  திருவிளையாடல் புராணம் காட்டும். இறைவனே சங்கப்புலவராக எழுந்தருளித் தலைமை தாங்கியதையும் அப்புராணம் விரிவாகக் கூறுகிறது. அதேபோல் , காஞ்சியில்  தனது பக்தரான தமிழ்ப் புலவர் தன்னை மதிக்காத இடத்தில் தானும்  பெருமாளும், இருக்கக்கூடாது எனக் கருதி, பெருமாளையும் பாம்பணையைச் சுருட்டிக்கொண்டு தன்னோடு வருமாறு ஒரு பாடல் பாடியதும் அவ்வண்ணமே பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு பெருமாளும் களி கண்ணனோடு சென்றதால் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் எனப்படுகிறார். 

தெய்வத்தை மறந்து விட்டுத் தமிழ் வாழ வேண்டும் என்று எப்படிச்  சொல்ல முடிகிறது?  இரண்டும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதன என்பது புரியாதது போலப் பாசாங்கு செய்கிறார்களா, அல்லது வேறு உள் நோக்கம் உண்டா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். 

இனியாவது ஆன்மீக அன்பர்கள் தெளிவு பெறவேண்டும். எத்தனை எத்தனையோ இழந்து விட்டோம் . இனியும் எதையும் இழக்கக் கூடாது. நமது முன்னோர்களது சாபமும் அடுத்த தலைமுறையினரின் சாபமும் நம்மைச்  சும்மா விடாது.