Monday, November 9, 2015

கொட்டும் மழையில் திருவாரூர் கும்பாபிஷேகம்

தமது வாழ்நாளில் ஒருமுறையாவது கும்பாபிஷேக தரிசனம் செய்ய வேண்டும் என்று பக்தர்கள் ஏங்கும்  கோயில்களில் திருவாரூரும் ஒன்று.  தியாகேசனின்  ஆழித்தேர்  பவனியைக் காண  ஆயிரமாயிரம் பேர் கூடும் போது கும்பாபிஷேகத்தைக் காண  வருவோரது எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியும்? மூலாதாரத் தலமான திருவாரூரில் நடக்கும் இவ்வைபவத்தைக் காண வேண்டும் என்று தொலைவிலுள்ள ஊர்களிலிருந்து வருகை தருவோர் ஏராளம்.

பூங்கோயில் எனப்படும் தியாகப் பெருமானது திருக்கோயில் மிகப் பெரியது என்பதால் திருப்பணிகள் ஏறத்தாழ ஓராண்டுக்கு முன்பே துவக்கப்படுகின்றன. முதலில்  ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள் கும்பாபிஷேகத் தேதி அறிவிக்கப்பட்டவுடன் வேகமாக நடைபெறுவது எல்லா ஊர்களிலும்  நடைபெறுவது தான். ஆனால் இங்கோ ஆழித்தேர் திருப்பணியும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவடைந்ததும் வெள்ளோட்டம் விடப்பட்டது. ( ஆனால்  லட்சக் கணக்கில் செலவழித்துத் தயாரிக்கப்பட்ட தேர், வெளி வீதியில் மழையிலும் வெய்யிலிலும் வீணாவது ஏன் என்பது விளங்கவில்லை)

திருவாரூர் கோயிலில்  உபயதார்களது முயற்சியாலும்,ஆதரவாலும் எல்லா சன்னதிகளிலும் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோபுரங்களும், விமானங்களும் செப்பனிடப்பெற்று வண்ணப்பூச்சு பூசப்பெற்றுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட யாக குண்டங்கள் அமைக்கப்பெற்று யாக சாலை தயாரானது.

திருவாரூர் நகர மக்களும் வெளியூர் அன்பர்களும் கும்பாபிஷேக தினத்தை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்த வேளையில், 8.11.2015 ஞாயிற்றுக் கிழமை குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. பொதுவாகக் கும்பாபிஷேகம்  உத்தராயணத்தில்( தை மாதம்  முதல்  ஆனி மாதம் வரை )  செய்வதை சிவாகமங்கள் உத்தமமாகப் பரிந்துரைக்கின்றன. அதிலும் சுக்ல பக்ஷத்தில் ( வளர் பிறையில்) செய்வது உத்தமம் என்கின்றன. ஆனால் இப்போது நடைபெற்றதோ  தட்சிணாயணத்தில் ,கிருஷ்ண பக்ஷத்தில் . இதற்கு ஆயிரம் சமாதானங்களும் விளக்கங்களும் இருக்கலாம்.

கொட்டும் மழையில் கும்பாபிஷேக தரிசனம் 
நடைமுறையில் இப்படித் தேதி நிர்ணயிப்பதால் ஏற்படும்   அசௌகர்யங்களைப் பற்றிச் சற்று சிந்திப்பது நல்லது. ஐப்பசியில் அடை மழை பெய்யும் என்பது எல்லோரும் அறிந்தது தான். அதிலும் இந்தத் தேதியை ஒட்டி தீபாவளிப் பண்டிகை வரும்போது, வெளியூர்மக்கள் எப்படி வர முடியும்? கும்பாபிஷேகம் முடிந்த மறுநாளே தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பதால் கிடைத்த பேருந்துகளில் வழி நெடுகிலும் மாறி மாறிச் செல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் ஏற்கனவே தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் ஊர்களிலும் பேருந்து நிலையங்களிலும் நிரம்பி வழியும் போது மேலும் சங்கடம் நேர்வது தவிர்க்க முடியாததாகிறது. பேருந்து  நிலையத்தை ஒட்டியுள்ள உணவுக் கூடங்களிலும்  ஏராளமான மக்கள் கூட்டம்.
எல்லாவற்றுக்கும் மேலாக மழையினால் சேதமடைந்த சாலைகளில் தேங்கிக் கிடக்கும் நீரில் நடக்க வேண்டியுள்ளது. சாலை ஓர அசுத்தங்கள், கழிவுகள் இந்நீரில் கலந்து வருவதை நகராட்சி ஆண்டுதோறும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே சுகாதாரக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை ஓரங்கள் பொதுக் கழிப்பிடங்களாக மக்களால் சீரழிக்கப்படுகின்றன. எங்கும் நாற்றம், எதிலும் துர்நாற்றம் என்ற நிலை!! இப்படிப்பட்ட சுகாதாரமற்ற நிலையில் ,  கொட்டும் மழைக் காலத்தைத் தவிர்த்துத் தை மாத வளர்பிறையில் கும்பாபிஷேகத்தை வைத்துக்  கொண்டிருக்கலாம் அல்லவா? தை மாதத்திற்கு இன்னமும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் அப்படி என்ன  அவசரம்?

கும்பாபிஷேகத் தேதியை நிர்ணயிப்பது சிவாகமத்தை ஒட்டியே நடை பெற வேண்டும். ஆகம விற்பன்னர்கள் கூறும் பரிந்துரையை கும்பாபிஷேகக் குழுவினரும்,அரசாங்கமும் முழுவதுமாக ஏற்க வேண்டும். இதில் பிற தலையீடுகள் இருக்கலாகாது. திருப்பணிகளை உபயதாரர்களே செய்யும்போது அறநிலையத்துறையும் ஒத்துழைப்புத் தருவதே நல்லது. கும்பாபிஷேக தேதியை விருப்பம்போல மாற்றுவது ஆகம விரோதமானது மட்டுமல்ல. மக்களுக்கும் பல இன்னல்களை விளைவிப்பதாக முடிந்து விடுகிறது.

கோபுரங்களிலும் விமானங்களிலும்  யாக சாலையிலிருந்து தலையில் கடங்களைச் சுமந்தவாறு சாரத்தில் ஏறி உச்சிக்குச் செல்லும் சிவாச்சாரியப் பெருமக்களில் பெரும்பாலோர் வயது முதிர்ந்தவர்கள். கொட்டும் மழையில் சாரப் படிகளில் சறுக்கி விழாமல் மிகுந்த எச்சரிக்கையாக ஏற வேண்டும். அடை மழையால் சாரப் படிகளைக் கட்டியுள்ள கயிறுகள் தளர்ந்து விட்டாலும் ஆபத்துத் தான்.    அத்தனை உயரத்திலிருந்து ...... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

லட்சக் கணக்கானோர் கண்டு ஆனந்திக்க வேண்டிய வைபவம் கொட்டும் மழையாலும், தீபாவளி தொடர்வதாலும் சில ஆயிரம் அன்பர்கள் மட்டும் தரிசிப்பதாகி ஏனையோருக்கு ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. இனியேனும் சம்பந்தப் பட்டவர்கள் யோசிப்பார்களா?
  

1 comment: