Wednesday, October 14, 2015

பெண்மையைப் போற்றுவோம்


கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில், பிரமச்சாரி பூஜை, கன்னியா பூஜை, தம்பதி பூஜை,சுமங்கலி பூஜை ஆகியவை  நடைபெறுவது வழக்கம். அதுபோலவே நவராத்திரியின் போதும் கன்னிப் பெண்களையும் சுமங்கலிகளையும் அம்பிகையாகவே பாவித்துப் பூஜிப்பது நடைபெறுகிறது. அம்பாளைப்  பத்து வயது உள்ள இளம் சிவப்பு நிறம் வாய்ந்த " கௌரி" என்றும், சதாசிவ பதிவ்ரதை என்றும் , சதாசிவ குடும்பினியாக லலிதா சஹஸ்ரநாமம் கூறுகிறது. இவ்வாறு பாலாயை என்றும், சுமங்கல்யை என்றும் சொல்லும் சஹஸ்ரநாமம், " சுவாசின்யர்ச்சன    ப்ரீதாயை"  என்று  பரமேசுவரி விளங்குவதாகக்  கூறுவதை ஒட்டி,  நாமும் பழங்காலம் தொட்டே பெண்களைப் பராசக்தியின் அம்சமாகப்  போற்றி வருகிறோம். நமது ஆலயங்களிலும் , அறம் வளர்க்கும் அன்னையாய் தர்ம   ஸம்வர்த்தனி என்றும் , மங்களத்தைத் தரும் மங்களாம்பிகையாகவும், அஞ்சேல் என்று அபயமளிக்கும் அபயாம்பிகையாகவும், கருவைக் காக்கும் கர்ப்ப ரக்ஷாம்பிகையாகவும் , ஞானம் அளிக்கும் ஞானாம்பிகையாகவும் பலப்பல நாமங்களோடு அம்பிகை காக்ஷி அளிக்கிறாள்.

இன்று ஆலய வழிபாடுகளில் அதிகமாகப் பங்கேற்பவர்கள் பெண்கள் என்பது உண்மை. பிரதோஷம்,வெள்ளிக் கிழமை ,பௌர்ணமி, நவராத்திரி போன்ற நாட்களில் பெண்கள் அதிக அளவில் ஆலய தரிசனத்திற்கு வருகிறார்கள். இந்த ஸ்திரீ தர்மத்தால் தான் ஓரளவாவது நமது கலாசாரம் பாதுகாக்கப் படுகிறது. சைவத்தைப் பாதுகாத்தவர்களில் மங்கையர்க்கரசியாரும், அப்பரது தமக்கையான திலகவதியாரும் ஆற்றிய தொண்டை நாம் நினைவு கூர  வேண்டும்.  காலக் கோளாறினால் பல பெண்கள் தொலைக் காட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டாலும் ஆலய வழிபாட்டிற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியைத் தரும் விஷயம். இந்த மகிழ்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டுமே என்ற கவலையும் கூடவே எழுந்து விடுகிறது.

பெண்கள் பெருவாரியாகப் பங்கேற்கும்  நவராத்திரி நாட்களில் வயதானவர்களே அதிகம் காணப்படுவதால் இம்மாற்றம் தற்காலக் கல்வி முறையால் ஏற்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் ஏற்படுகிறது. வீடுவீடாகச் சென்று தேவியின் மீது கொலுவின் முன் அமர்ந்து பாடிவிட்டுப் பெரியவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்த குழந்தைகள் இப்போது எங்கே? முன்கூட்டியே இத்தனை மணிக்கு வருகிறோம் என்று " அப்பாயின்ட் மென்ட் "  வாங்கிக்கொண்டல்லவா போக வேண்டி இருக்கிறது!  அப்படியே போனாலும் எல்லாமே செயற்கையாக , பக்தியில்லாத, வெளி -வேஷம் கொண்ட  படாடோபமாகவே எஞ்சுவதைப் பார்க்கிறோம்.

பெண்ணடிமை என்ற விலங்கை உடைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் பாதுகாப்பற்ற சுதந்திரத்தை அல்லவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறோம்! மேற்கத்திய கலாச்சாரமும், நவீனக் கல்வியும் இவ்வாறு புரட்டிப் போட்டிருப்பதைக் கண்டு  அஞ்ச வேண்டிய நாம் ,  ஆனந்தப் படும் பெற்றோர்களைத்தான்  பார்க்க வேண்டியிருக்கிறது.

தொலைக் காட்சியில் தொல்லைக் காட்சிகளே அதிகம்.   மனத்தைக் கெடுப்பதும் , குற்றங்கள் புரியத் தூண்டுவதும் இதனால் முன்பை விடத்  துரிதமாக்கப் படுகின்றன.வீட்டில் உள்ள பெண்களை உருப்படியான வேலை செய்ய விடாமல் மதியம் முதல் நள்ளிரவு வரை அடிமைப் படுத்தி விடுகிறார்கள்.  ஆம்! இதுவும் ஒருவகையில் அடிமைத்தனம் தான். பெண்ணடிமை பற்றிப் பேசுபவர்கள் இந்த அடிமை விலங்கை உடைக்கக் காணோமே! இதன் பாதிப்பு அவரவர்கள் வீடுகளில் நடக்கும்போதுதான் உணருவார்களோ என்னவோ! அப்படிப்பட்ட நிலையும் பல குடும்பங்களில் நடைபெறுவது ஆரம்பமாகி விட்டது.

முன்பெல்லாம் பள்ளிக்கூட அளவில் தவறுகள் அவ்வளவாக நடை பெறவில்லை. இப்போது அதுவும் சீரழிந்து வருவது பரிதாபம். ஒருவேளை ஆண்களும் பெண்களும் ஒரே பள்ளியில் படிப்பதால் இவ்வாறு நடக்கிறதா என்று தெரியவில்லை. தனித்தனியே பள்ளிகள் இருந்தது போக, மேலை நாட்டுக் கல்வியை இருபாலாரும் ஒரே பள்ளியில் கற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இது அதோடு நிற்காமல் சினிமா பாணியில் உடை அணிவதும் ஊர் சுற்றுவதும் பெற்றோரை அவமதிப்பதுமாக  அதிகரித்து வருவதை யாராவது மறுக்க முடியுமா ?  கோடியில் ஒரு பெண் குழந்தைக்குக் கூட இதுபோன்ற நிலை வர நாம் அனுமதிக்கலாமா?  இவற்றை நியாயப் படுத்துபவர்கள் இருப்பதால் தான் தவறுகள் ஊக்குவிக்கப் படுகின்றன.  அக்கிரமங்கள் நாளடைவில்  தொடர் கின்றன.  போலீஸ் ஸ்டேஷன்களில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. இவற்றைச் சுட்டிகாட்டுபவர்களைப் பத்தாம் பசலிகள் என்றும், அடிப்படைவாதிகள் என்றும் பெயர் சூட்டி விட்டுப்  , பெண்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகளைக் கண்டிப்பதாக அறிக்கை விட்டு விட்டுக் கண்களை மூடிக் கொண்டு இருப்பது இன்றைய அலங்கோலம்!

ராஜராஜனின் பெரியன்னை செம்பியன்மாதேவியார் போன்ற சிவபக்தியும் பதிபக்தியும் மிக்கவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் புண்ணிய பூமி இது. அது கறை  பட்டு விடக் கூடாது. சைவ மறு மலர்ச்சிக்காகத் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்த மங்கையர்க்கரசியார்  சேக்கிழார் பெருமானால் " குல தெய்வம்" என்று போற்றப்படுகிறார். அத்தனை பெருமை மிக்க நமது பாரம்பர்யம் வீணாகாமல் தடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்கும் பெற்றோர்களாகப் பெற்றோர்கள் முதலில் தங்களைத் திருத்திக் கொண்டு தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகள் அவ்வழியையே பின்பற்றுவார்கள். நமது பாரம்பரியமும் காப்பாற்றப் பட்டுவிடும். ஈசனைப் பிரியா நாயகியான அம்பிகையின் அருள் முன் நிற்பதாக.

No comments:

Post a Comment