Friday, June 19, 2015

நகரத்தார் சிவத்தொண்டு தொடரட்டும்

திருக்காறாயில் சிவாலயம் 
சிவாலயத் திருப்பணி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர்கள் சோழ மன்னர்கள். அதற்கு அடுத்தபடியாக நாம் மறவாது நினைவு கூற வேண்டியது, நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் செய்த மாபெரும் சிவாலயத் திருப்பணிகள். அதிலும்,கருங்கல்லே கிடைக்காத சோழ நாட்டில் உள்ள ஆலயங்களைத் திருப்பணி செய்யக் கருங்கற்களை நெடுந்தூரத்திலிருந்து மாட்டு வண்டிகளில் எடுத்து வந்து, ஸ்தபதிகளைக் கொண்டு திருப்பணி செய்வித்தனர். இதற்கு மூலகாரணம் ,சிவபெருமானிடமும் சைவத்  திருமுறைகளிடத்தும்  அவர்களுக்கு இருந்த பக்தியே ஆகும். பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செய்யும்போது, அவற்றில் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்த கோயில்களைத் தாங்களே முன் வந்து கருங்கல் திருப்பணியாகவே செய்து தந்தனர்.

திருக்களர் பிராகாரக் கருங்கல் மதில் 
அப்படித் திருப்பணி செய்யப்பட்டவைகளில் உள்ளடங்கியுள்ள ஊர்களும் அடங்கும். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர்  சைவத் திரு ராய.சொ.  அவர்கள் வெளியிட்ட தேவாரத் தலயாத்திரை பற்றிய நூலில் நகரத்தார்கள் செய்த கோயில்களின் விவரம் தரப்பட்டுள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பல லக்ஷம் ரூபாய் செலவில் பல கோயில்கள் திருப்பணி செய்யப்பட்டன.

திருக்காறாயில் திருக்குளம் 
திருக்கோயிலை  மட்டுமல்லாமல் திருக்குளங்களுக்கும் கருங்கல் படித்துறை அமைத்துத் தந்தனர்.உதாரணமாகத் திருக்காரவாயில், திருக்களர் போன்ற ஊர்த் திருக்குளங்களைக் கூறலாம்.  அது மட்டுமல்ல. வேதபாடசாலைகள், தேவார-ஆகம பாடசாலைகள்,பசுமடங்கள்,நந்தவனங்கள்   ஆகியவற்றையும் அமைத்தனர். சிவாகம நூல்கள் பலவற்றை அச்சில் ஏற்றித்தந்த பெருமையும் இவர்களைச் சாரும். இப்பணிகள் எல்லாம் சுமார் எழுபது ஆண்டுகள் முன் வரை தொடரப்பட்டது என்று  சொல்லலாம்.  அவர்களது பரம்பரையினர் இன்றும் தம்மால் முடிந்த அளவில் அக்கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த அரை நூற்றாண்டைப் பார்க்கும்போது, புராதனக் கோயில்களைப் புதுப்பிப்பதில் நகரத்தாரின் பங்கு பற்றி அறிய ஆர்வம் ஏற்படுகிறது. நாம் அறிந்தவரையில் ,பல கோயில்களின் திருப்பணிக்கு இன்றும் உதவுகிறார்கள். ஆனால் அவர்களது முன்னோர்களைப் போன்று, மிகவும் பழுது அடைந்த சிவாலயங்களில் கருங்கல் திருப்பணி மேற்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்பட்டதாகவும் தெரியவில்லை. பண்டைக் காலம் போல் இன்றும் திரைகடல் தாண்டித்  திரவியம் ஈட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அப்படியும், புதியதாக எந்த சிவாலயத்திலும்  முழுமையாகக் கருங்கல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழ்க்கை நடத்துபவர்கள் முன்வந்தால், முன்னைக் காட்டிலும் அதிக அளவில்  சிவத் தொண்டாற்ற முடியும்.

வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சங்கங்கள் அமைத்துத் தங்கள் சமூகத்திற்கு உதவி புரிந்து வருவதை மறுக்க முடியாது. அதில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலய வைபவங்களிலும் பங்கேற்கிறார்கள். அதோடு, சுற்றுலா போன்றவைகளும் இடம் பெறுகின்றன. முன்னோர்கள் காட்டிச் சென்ற சிவாலயப் புனரமைப்பு , முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இடம் பெறாதது பெரிதும் ஏமாற்றத்தை  அளிக்கிறது.

தமிழகக் கோயில்கள் பலவற்றின் தற்போதய நிலை என்ன என்பதைத் தலயாத்திரை செய்பவர்கள் நன்கு அறிவார்கள். அரசாலும்,ஊர் மக்களாலும் கைவிடப்பட்டு, மரம் முளைத்துப் போன ஆலயங்கள் ஏராளம். ஆண்டுக்கு நூறு கோயில்களைப் புனரமைத்தாலும்,எல்லாக் கோயில்களையும் சீர் செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. சுற்றுச் சுவர்கூட இல்லாததால் மூர்த்திகள் களவாடப்படும் அவலம் வேறு ! இதை எல்லாம் யாரிடம் சொல்வது? பரம்பரையாக சிவபக்தி உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சொல்ல முடியும்.

நிலங்களிலிருந்து வருமானம் இல்லாததால் நான்கு காலம் பூஜைகள் நடந்த கோயில்கள் ஒரு கால பூஜை செய்யப்படுவதையும், விளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாத நிலையையும் கண்டு எத்தனை பேர்  மனம் உருகுகிறார்கள்? அற்ப சம்பளத்தை மாதக் கணக்கில் தராமல் இழுக்கடிக்கப்பட்டும் பூஜையை விடாமல் செய்யும் அர்ச்சகர்களை எவ்வளவு பேர் ஆதரிக்கிறோம்? இந்நிலை நீடித்தால் ஒரு கால பூஜைக்கும் ஆபத்து வரக்கூடிய நிலை தூரத்தில் இல்லை.

எஞ்சியது சிவனார் மட்டுமே 
எல்லா சமூகத்திலும் வசதி உள்ளவர்களும் பக்தி உள்ளவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நகரத்தார் போல முழுக் கோயிலையும் கருங்கற்களால் திருப்பணி செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. இந்த நற்பெயர் நீடித்து நிலைக்க வேண்டும். தற்கால சந்ததியினரும் தங்கள் முன்னோர் போல அத்  தொண்டைச் செய்து வரவேண்டும் என்பதே நமது கோரிக்கையும் விருப்பமும் ஆகும். பல துறைகளிலும் இன்று பிரபலமாக விளங்கும்  நகரத்தார் சமூகம் இவ்வேண்டுகோளை ஏற்கும் என நம்புகிறோம்.

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர்  கூடலையாற்றூர் என்ற தேவாரப் பாடல் பெற்ற தலத்திற்குத் திருப்பணி செய்வதற்காக செட்டிநாட்டைச் சேர்ந்த ஒரு செட்டியார் மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தாராம். கருங்கற்கள் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்தனவாம். இருட்டில் வழி மாறி, விடியற்காலையில் கண் விழித்துப் பார்க்கும்போது, வேறு ஒரு சிவத்தலத்தில் (கடம்பூர் என்று நினைவு) வண்டி வந்து சேர்ந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் சிவாலயமும் திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்ததைக் கண்டு இரங்கிய செட்டியார், அக்கற்களை அங்கேயே இறக்கச் சொல்லி, அக்கோயிலைத் திருப்பணி செய்து தந்தாராம். பின்னர் கூடலையாற்றூர்  ஆலயமும் திருப்பணி செய்யப்பட்டது. அப்பொற்காலம் மீண்டும் வருமா?  

Tuesday, June 16, 2015

பாரம்பரியமும் முன்னேற்றமும்

வாழ்க்கையில் முன்னேற ஆசை யாருக்குத்தான் இல்லை? இங்கேதான் ஒரு  நெருடல்  ஏற்படுகிறது. முன்னேற்றம் என்று நாம் எதை நினைக்கிறோம்?   அதற்கு அளவுகோல் எது? அந்த அளவை எட்டியவுடன்  முன்னேறியது போதும் என்ற எண்ணம் ஏற்படுமா?  வாழ்க்கைத் தரம் என்று  சொல்கிறோமே, அது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது? தனி மனிதனின் வருமானத்தையா? அப்படியானால் பணவசதி ஒன்று மட்டுமே அளவுகோல் என்று தானே அர்த்தம்? இதை வைத்துப் பார்த்தால் "கற்றவர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு " என்பது ஏட்டு அளவில் மட்டுமா?  படித்தும் வேலைக்கு அலைபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஒருவேளை வேலை கிடைத்தாலும், வருமானம்  பலருக்குப் போதுமானதாக இல்லை.

தேவைகள் நாளடைவில் பெருகவே, கடைகளில் விற்கப்படும் நவீனப்போருள்கள் அத்தனையும் நம்மிடம் இருந்து விட்டால் அதையே முன்னேற்றம் என்று எண்ணுபவர்கள் உண்டு. அப்படிப்பட்ட பொருளாதாரம் எற்படுவதற்குப் பல்வேறு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு குரல் கொடுக்கிறார்கள். அதுவே ஒற்றுமை என்றும் அந்த ஒற்றுமை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் கொள்கை உடையவர்களாக இருக்கிறார்கள். அதற்காகத் தங்கள் பாரம்பர்யத்தை இழக்கவும் துணிந்து விட்டதுதான் துரதிருஷ்டம். கைப்புண்ணுக்கு மருந்து போடலாம். மருந்து வாங்கப் பிறர் உதவலாம். கையையே வேண்டாம் என்று சொல்லலாமா?

மேலை நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்றது உண்மைதான். இந்த வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் வீழ்ச்சியையும் அவர்கள் சந்திப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எத்தனையோ குடும்பங்களில் பெற்றோரிடமிருந்து பதினெட்டு வயதுக் குழந்தைகள் பிரிந்து தனித்து விடப்படுகிறார்கள் என்பதைப் பலர் அறிவர். அப்படி வெளி வந்தவர்களில் பலர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆவதையும் , மண வாழ்க்கைகள் முறிவதையும் காண்கிறோம். பணக்கார நாடுகளிலும் ஏழைகள் இருக்கவே செய்கிறார்கள். அங்கும் வீடற்றோர் ஏராளம். இந்நிலையை நாமும் சந்திக்கத் தயாராகி வருகிறோமா?  

அரசியல் ரீதியாக நம்மிடம் பலம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இதற்கு உறுப்பினர் சேர்க்கை, வலைத்தளம் மூலம் கருத்துப் பரிமாறல், சலுகைகள் கேட்டுப் போராட்டம் என்று இப்படிப் பல செயல்கள் அரங்கேறுகின்றன. இத்தனைக்கும் காரணம் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லாததுதான். அதை ஒரு பலவீனமாகவே மக்கள் கருதி இத்தகைய செயல்களில் இறங்குகிறார்கள். இவையெல்லாம்  தனி நபர் உரிமை என்று பறை சாற்றப்படுகிறது. ஓட்டுப் போடுவது உரிமை என்று சொன்ன பிறகு, ஓட்டுப் போட்டவர்கள் உரிமை கேட்டுப் போராடுவது என்பது ஜனநாயகத்தின் கட்டாயம்.

இப்படி மக்களை ஒன்று சேர்த்துப் போராடுவது ஒன்றுதான் இதற்குத் தீர்வா என்று நாம் சிந்திக்க வேண்டும். எந்த சமுதாயத்தை எடுத்துக் கொண்டாலும் அதைச் சார்ந்த அத்தனை பேரும் ஏழைகள் அல்ல. அதே சமயம் பணக்காரர்களும் அல்ல. ஏதாவது ஒருசில சமுதாயத்திற்கு அரசு போதிய நீதி வழங்கவில்லை என்றால் அச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவது தங்களுக்குள்  உதவி செய்ய முன் வரலாம். ( அடிப்படையில் பார்த்தால் இதுவும் தவறு தான். ஏழ்மையில் எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் உதவுவதே முறை.) அப்படிச் செய்யாமல் இருப்பதால் இந்த எளியவர்களை எவரும் கைகொடுக்க முன் வருவதில்லை. ஒருக்கால் சமூக அந்தஸ்து வந்துவிட்டாலும் இந்நிலை அத்தனை எளிதாக மாறாது. நமது பாரம்பர்யங்கள் தேவை அற்றவை என்ற எண்ணத்தையே அவை ஏற்படுத்தும்.

ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு வறுமையில் வாடுபவர்களுக்கு உதவுவது என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் பட வேண்டும்.  அரசுச்  சலுகையை எதிர்பார்த்துக் கொண்டு  இருப்பதால் வசதி உள்ளவர்கள் ஒருநாளும் உதவ முன் வரப்போவதில்லை. காலம் வேகமாக நகர்கின்ற போது, நமது பாரம்பர்யம் காற்றில் விடப் பட்டு விடும். வேடிக்கை பார்த்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் இருக்கும்நிலை மாற வேண்டும்.கருத்துத் தெரிவிப்பதால் காலணாவுக்குக் கூடப் பயன் இல்லை. செயலில் காட்டுகிறோமா, ஒரு குடும்பத்திற்காவது உதவுகிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்வது நல்லது. முன்னேற்றம் என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்பது பின்னேற்றத்திற்கு அடிகோலும் என்பதை உணரவேண்டிய தருணம் இது.இல்லாவிட்டால் முன்னேற்றம் என்னும் போர்வையில் மிருக வாழ்க்கை ஒன்றே மிஞ்சும்.

நல்ல குணங்கள் அமைவது இறைவன் கொடுக்கும் வரம். " அடியார்க்கு என்றும் குணங்களைக்  கொடுப்பர்" என்பது   அப்பர் சுவாமிகள் வாக்கு.  இறைவனுக்கு அடிமை செய்யாமல் மனிதனுக்குத்  தலை வணங்கும் சமூகம் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாம் சிவன் செயல் என்று இருக்க வேண்டியதுதான். அவரவர்கள் தாங்கள் செய்வதே சரி என்று வாதிடும் இந்தக் காலத்தில் நல்ல வழி காட்டப்போனால் கொள்வார் இருப்பது சந்தேகமே. மாற்றம் ஏற்பட சாத்தியக் கூறுகள் இருப்பது துர்லபம் என்று தெரிந்தும் சொல்லாமல் இருக்கக் கூடாதல்லவா? நமது கடமையை ஆற்றினோம் என்ற திருப்தியாவது இதனால் ஏற்படட்டுமே!