Tuesday, March 31, 2015

ஆலயங்களை அசுத்தக் கூடங்களாக ஆக்காதீர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலை ஒட்டிக் கழிப்பறைக்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருவதாக ஒரு அன்பர் முகநூலில் தெரிவித்திருந்தார். சென்னை கபாலீஸ்வரர் கோயில் மேற்புறச் சுவரை ஒட்டி உள்ள கழிப்பறை , அவ்வழியே வருவோரை முகம் சுளிக்க வைத்திருக்கும். போதாக் குறைக்குத்  தெரு  முனையில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியால்  ஏழும் துர்நாற்றம். வழி நெடுகிலும் உடைந்த கண்ணாடித் துண்டுகள்! இவ்வளவையும் தாண்டிக் கோயிலுக்குள் நுழைபவருக்காக ஆலய நிர்வாகமோ , நகராட்சியோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை குப்பை வாரினாலும் ஓரிரு முறை கழிப்பறையைக் கழுவிவிட்டாலும்  அவர்கள் வேலை முடிந்து விடுகிறது.

கோயிலுக்கு உள்ளேயும், மதிலை ஒட்டியும் கழிப்பறைகள் அவசியமா என்று யோசிக்க வேண்டும். கோயில் இடத்தை வெகு சுலபமாகக் கைப்பற்றி, கழிப்பறை , சமூகக் கூடம், உணவுக் கூடம் ஆகியவை கட்டுவது மிகவும் எளிதான படியால் இப்படிச்  செய்கிறார்கள். கோவிலுக்கு வருகை தருபவர்கள் முகம் சுளிப்பதோடு சரி. அதிருப்தியைத் தெரிவிப்பதில்லை. ஏராளமான அமைப்புக்கள் இருந்தும் ஒருவரிடமிருந்தாவது குரல் ஒலிக்கக் காணோம்!
கோயிலுக்கு உள்ளே எந்த புதிய கட்டிடமும் கட்ட அனுமதிக்கக் கூடாது. அது கழிப்பறையோ , உணவுக்கூடமோ  , கல்யாண மண்டபமோ, சமூக நலக் கூடமோ நிர்வாக அதிகாரியின் அலுவலகமோ எதுவானாலும் சரி. இக்கருத்தை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களும் உண்டு. முதலில் அவர்கள் இதன் குறைபாடுகளைப் புரிந்து கொண்டு பின் எதிர்க்கத் தயாராகட்டும்.  அவையாவன:

ஆகம விதிக்கு முரணான கட்டுமானங்கள் இவை

பராமரிப்பு வசதிகள் மிகக் குறைவு.

பராமரிக்கக் கூடுதல் ஆட்கள் நியமிக்க வேண்டும். அச் செலவை  ஏற்கனவே உள்ள ஆலயப்  பணியாளர்களின் நலனுக்குப் பயன் படுத்தலாமே!

கோயில் அலுவலக வாயிலில் கார் நிறுத்தம் 
புத்தகக் கடைகளும், வீடியோ ,ஆடியோ குறுந்தகடுகளும் . வழிபாட்டு நோக்கத்திலிருந்து திசைதிருப்பும் வியாபாரக் கூடங்கள் ஆகின்றன.
ஆலய மண்டபங்கள் நிர்வாக அதிகாரியின் அலுவலகங்களாக மாற்றப்படுகின்றன. சேவார்த்திகளை ஆலய வாசலில்  செருப்பைக் கழற்றி வைக்கச் சொல்லி, டெண்டர் மூலம் காசு பறிக்கும் நிர்வாகம், அதிகாரிகளும் ஆலய சிப்பந்திகளும் தங்கள் வாகனங்களுடன் அலுவலக வாசல் வரை செருப்புக் கால்களுடன் செல்வதை எப்படி  அனுமதிக்கிறது?.  இவர்கள் கழிப்பறைக்காகக் கோயிலுக்கு வெளியில் செல்வார்களா?

ஆலய வளாகத்துள் கல்யாண மண்டபம் அமைத்து, அமைதியைக் கெடுக்கும் ஒலிபெருக்கிகள். சாப்பிட்ட எச்சில் இலைகளைப் பிராகாரத்தில் வீசி எறிந்து விட்டு அங்கேயே கை கழுவும்  சிகாமணிகள் ! நிர்வாகத்திற்கு வேண்டியதெல்லாம் மண்டப வாடகை மட்டும் தானே!  சாப்பிட்ட கூட்டம் கோயிலுக்குள் வந்து பிற பக்தர்களுக்கு விளைவிக்கும் தொல்லைகள்! போகிற போக்கில் ஆலய வளாகத்தில் மல ஜலம் கழித்து விட்டுப் போவோர்கள் வெளியில் உள்ள கழிப்பறையையா பயன் படுத்தப் போகிறார்கள் ?  அப்படியே போனாலும் அது பயன் படுத்தும் நிலையிலா இருக்கும்?

ஆலய மதிலை ஒட்டியும் திருக்குளத்தை ஒட்டியும் அசுத்தப்படுத்தக்கூடாது  என்ற அறிக்கை  எழுதப்பட்டிருந்தால் தவறு செய்வோர் ஒரு நிமிடமாவது யோசிப்பர். ஒருவர் அத்தவற்றைச் செய்யும்போது அதைப் பார்த்து மற்றவர்களும் அவ்விடத்திலேயே செய்கிறார்கள். நமது ஒற்றுமை இதில் தானே இருக்கிறது !! கேவலமானதும் வெட்கித்  தலை  குனிய வேண்டியதுமான விஷயம்.

கழிப்பறை இல்லாவிட்டால் எங்கு போவார்கள் என்று கேட்கலாம். இதற்கான விடையை நகராட்சியே தர வேண்டும். வேறு எங்கும் இடம் கிடைக்காவிட்டால் இவர்களுக்குக் கோயில்தான் கிடைத்ததா? கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளைச் சுகாதாரப் பகுதியாக அறிவித்து விட்டு அவற்றின் வெளியில் தகுந்த இடத்தில் கழிப்பறைகள் அமைக்கலாமே ! இதற்கான விழிப்புணர்வைக் கோயிலுக்கு வரும்  மக்களுக்கு ஏற்படுத்தலாம். இதை விட்டு விட்டுக்  கோயில்களைச்   சுற்றிச் சுற்றியே இவர்கள் அசுத்தக் கூடங்கள் நிறுவுவது வெட்கக் கேடாக இருக்கிறது.   

Friday, March 13, 2015

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

நம்மில் இன்னும் பலருக்கு சுதந்திரம் என்பதன் உண்மையான பொருள் புரியவில்லை எனத் தோன்றுகிறது. தனது இஷ்டப்படி வாழ்வதும், பேசுவதும்,எழுதுவதுமே சுதந்திரம் என்று நினைக்கிறார்கள். பிறரது இடையூறு இல்லாமலும்,பிறருக்கு இடையூறு விளைவிக்காமலும் வாழ்வதே  அர்த்தமுள்ள சுதந்திரம். தனது கருத்தைப் பிறருக்குப் பக்குவமாகவும், புண்படாத வகையிலும், சொல்லாலும், எழுத்தாலும் தெரிவிப்பதில் தவறு  இல்லை. நானே உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ளட்டும். மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று சொல்வதற்கு சுதந்திரம் உண்டு என்று வாதம் இடுவதும் அதற்குப் பரிந்துகொண்டு அவர்களைச் சேர்ந்தவர்கள்  வரிந்து கட்டிக் கொண்டு வருவதும் நியாயம் ஆகாது.  உரிமை உண்டு என்று  சாதிக்கிறார்கள்!  உரிமை என்ற பெயரில் பிறரைக் காயப்படுத்திவிட்டு , அதையே தமது வருமானத்தைப் பெருக்கும் வழியாகவும் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களுக்கு என்ன சொல்வது ?

இதற்கிடையில், சமயங்களுக்கிடையில் கருத்து வேற்றுமை, பனிப்போர் ஆகியவை சுதந்திரம் என்ற போர்வையில் செயல் படுகின்றன. எனது தாயே உயர்ந்தவள், எனது தாய் மொழி உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் பிறரது தாயையும் தாய்மொழியையும் பழித்துரைக்க ஏது உரிமை? அதேபோல் நான் வணங்கும் தெய்வம் உயர்ந்தது என்று சொல்வது நம்பிக்கையைப் பறை சாற்றுவது. அக்கருத்தை ஏற்கும் மக்களிடையே சொல்வதிலும் தவறு இல்லை. அவரவரது சமயப்பத்திரிகையிலும் எழுதிக் கொள்ளட்டும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மேடையிலோ , பத்திரிகையிலோ, பல்வேறு சமயத்தவரும் காணும் தொலைக் காட்சியிலும் பிறருக்கு வேதனை அளிக்கும் தகவல்கள் பரிமாறப்பட வேண்டியதில்லை.

அரசாங்கமே ஏற்று நடத்தும் பல்வேறு துறைகளிலும் இக்கொள்கை பின்பற்றப்பட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை என்பது இந்து சமயத்தின் பல்வேறு உட்பிரிவுகளுக்கு உட்பட்டு அனைத்துப் பிரிவினரையும் அரவணை ப்பதாகச் செயல் பட வேண்டும். இத்துறை, பல்லாண்டுகளாகத் " திருக்கோயில் " என்ற மாதாந்திர வெளியீட்டை வெளியிட்டு வருகிறது.  இதன் மார்ச் மாத இதழின்  ஏழாம் பக்கத்தில் 18 புராணங்களின் பெயர்களை சாத்வீக, ராஜஸ , தாமஸ  புராணங்களாகப் பிரித்துக் காட்டி, அதில் சிவபுராணங்களைத் தாமஸ புராணங்கள் என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அறநிலையத்துறை ஆணையருக்குக் குடந்தை உழவாரப் பணிக் குழுவினர் கடிதம் எழுதியுள்ளார்கள். தேவை இல்லாத இந்த சர்ச்சையை வெளியிட்டுள்ள திருக்கோயில் ஆசிரியர் தான் விளக்கம் தர வேண்டும். தனது சொந்த விருப்பு வெறுப்புகளைக் காட்டிக் கொள்ளும் இடம் இது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அடுத்த இதழில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலைமை செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும், தொலைக் காட்சிகளிலும் இடம் பெறுவது வருந்தத் தக்கது. பிறர் எள்ளி நகையாடும்படி இவை துணை செய்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. எதுவானாலும் நமக்குள்ளேயே இருக்க வேண்டும். நமது சமயத்தைச் சேர்ந்த நம்பிக்கை அற்ற பிறவிகளுக்கும் இது பெரு விருந்தாக அமைந்துவிடுவதைக் கருத்தில் கொண்டு செயல் படுவது நல்லது. தாங்களே மேதாவிகள் என்று எண்ணிப் பிறரை எள்ளி நகையாடும் இந்தக் கூட்டங்கள் திருந்தப்போவதில்லை. அவர்கள் நம்பிக்கை அற்றவர்களாகவே இருந்து விட்டுப் போகட்டும். எந்த சமயத்தில் தான் இந்த நிலை இல்லை?  பிறரை ஏளனம் செய்ய இவர்களுக்குத் தகுதியோ உரிமையோ இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்வார்களாக. முடிந்தால் ஒற்றுமையாக வாழக் கற்றுக் கொள்ளட்டும். இல்லையேல் வாயை மூடிக் கொண்டு தமது வேலையைப் பார்ப்பது அவர்களுக்கும் பிறருக்கும் நல்லது. சர்ச்சைகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் இது என்பதை இனியாவது உணருவார்களா?