Thursday, January 1, 2015

சிவமும் மரபும்

தங்களுக்கு உரிய மரபுகளைக் கடைப்பிடித்து, அவை  மறையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை  ஒவ்வொரு குலத்துக்கும் உண்டு. இல்லாவிட்டால், காலம்காலமாக நமது முன்னோர்கள் காட்டிய மரபுகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்துவிடும். தற்கால சூழ்நிலையில் இது சாத்தியமா என்று கேட்போர்  இருக்கிறார்கள்.  வருமானத்தையே மையமாகக் கொண்டு செயல்படும் இக்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். தேவைக்கேற்ற வருமானத்தோடு, வசதிகளும் பெருகிவருவதால் இவை அனைத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடுகிறது. அதையே கெளரவம் எனவும் நினைக்கிறார்கள்.

குலமரபுகளைப் பின்பற்றிவருவோர் இருந்தாலும் நாளடைவில் அடுத்த தலைமுறையினரைப் பற்றிய கவலையும் ஏற்படுகிறது. அதற்காக இவர்களை சம்பாதிக்க வேண்டாம் என்றோ, வசதியாக இருக்க வேண்டாம் என்றோ யாராலும் நிர்பந்திக்க முடியாது. அதற்காக, மரபுகளைக் கைவிடுவதையும் ஏற்க முடியாது. இத்தனை காலம் பின்பற்றிவந்த குலத் தொழில் நம்மோடு போகட்டும். நமது அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடாதா? என்று பெற்றோர்களே கேட்கும்போது, பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று சொல்லத் தேவை இல்லை.

அப்படியானால், வேதமும் ஆகமமும் ஓதுவதும், விவசாயம் செய்வதும், சிற்பம்,ஓவியம், நாட்டியம், இசை,போன்ற பாரம்பர்யக் கலைகளைத் தொடர்வதும்  கைவிடப்பட வேண்டியதுதானா?  யாழ் போன்ற நமது பண்டைய இசைக்கருவிகள் வாசிப்பார் இன்றி மறைந்ததுபோல் மற்றவையும் காலத்தால் மறைய வேண்டுமா?  எல்லோரும் பொறியியலும் மருத்துவமும் படித்துக் கை நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து, நாமும் அதையே பின்பற்ற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

மரபுகளைக் காக்க மாற்று வழி இருக்கிறதா என்று யோசிப்பதே ஓரளவாவது இதற்குப் பலன் தரும். பள்ளியில் படிக்கும் பொது முடிந்தவரை தங்கள் மரபுவழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரது முக்கியமான கடமை. வளர்ந்தபிறகு வேலை தேடிச் சென்றாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தம் குலத்தொழிலைக் கற்றுக் கொண்டால் , பிற்காலத்திலாவது அது உபயோகமாக இருக்கும். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஆர்வம் காட்ட வேண்டியது இதற்கு மிகவும் அவசியம். இதனால், பிள்ளைகள் தவறான பாதைகளில் செல்வது கட்டுப் படுத்தப் படுகிறது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகாவது, தம் மரபிற்கேற்ற தொழிலை முழு நேரப் பணியாக மேற்கொண்டால் வருமானமும் இருக்கும்.  பாரம்பரியமும், கலைகளும் அழிந்து விடாமல் பாது காக்கப்பட்டுவிடும். ஓய்வு பெற்ற பிறகும் பிற தொழில்களைச்  செய்து வருமானம் தேடுபவர்கள் இருக்கிறார்கள்.  அதை யாருக்கு வைத்துவிட்டுப் போகப்போகிறோம் என்று ஒரு கணம் சிந்திப்பது நல்லது. தேவைக்கு  மேல் பணம் ஈட்டுவதை விட, இத்தனை நாள் நாம் செய்யத்தவறிய குல தர்மத்தை இப்போதாவது செய்வோம் என்று எல்லோரும் எண்ணினால் எந்த ஒரு தொழிலிலும் அதைச் செய்வோர் இல்லை என்ற நிலை ஏற்படாது.

கோயில் பூஜை செய்யவும் , விவசாயம் செய்யவும் , நபர்கள் குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கும்போது, வேறு வேலைக்குச் சென்று பணி ஓய்வு பெற்ற பிறகாவது தங்கள் குலத் தொழிலை மேற்கொள்வார்களா என்ற ஆதங்கத்தால் இப்படி எழுத நேர்ந்தது. எந்த ஒரு தொழிலும் பிற தொழிலுக்குத் தாழ்வானது அல்ல. இன்னும் சொன்னால் உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்று வள்ளுவம் கோடிட்டுக் காட்டுவதை இங்கு நினைக்க வேண்டும்.

எக்குலத்தோராயினும் சிவபெருமானுக்கு மீளா அடிமை பூண்டால் பெருமானது அருள் கிட்டும் என்பதைப் பெரிய புராணம் காட்டும் நாயன்மார்களது வாழ்க்கை மூலம் அறிகிறோம்.  " குலத்திற்கு ஏற்பதோர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே" என்ற தேவார வாக்கின்படி, எத்தொழில் பூண்டாலும் இறை அருள் கிட்டும் என்பதே பெரியபுராணம் நமக்கு அறிவிக்கும் மையக் கருத்து. ஆகவே, நம்மில் உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் , சிவனடியார்களை சிவனாகவே பாவித்து , மரபுகளை மறையாது காத்தால் இந்தக் காலம் மட்டும் அல்ல. எந்தக் காலத்திலும் நமக்கு நன்மையே விளையும். இம்மையே நன்மை தரும்  பெருமான் சங்கரன் எனப்படுவதால் சார்ந்தவர்க்கெல்லாம் . " என்றும் இன்பம் தழைக்க" அருள் செய்வான். நமக்குத் தெரிந்தவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது என்ற பழக்கம்  நல்லதுதான். அதைச் சற்று விரிவு படுத்தி அனைவரும் மரபு மாறாமல் இனிது வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே அதை விடச்  சிறந்த வாழ்த்தாக அமையும். அதுவே மரபுகளைக் காக்கும் வித்தாகவும் ஆகலாம் அல்லவா?      

1 comment:

  1. THANK YOU SIR,
    A GOOD NEWS / MESSAGES TO SENIOR CITIZENS LIKE ME
    REGARDS
    DHARUMAIDASAN

    ReplyDelete