Friday, January 23, 2015

கோமுக்தீசர் அருளிய முக்தி

திருவாவடுதுறை சிவஸ்ரீ  தண்டபாணி சிவாச்சார்யார்  அவர்களின் மறைவு  அன்னாரை அறிந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அவர்களை சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருந்தபடியால் அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுதி அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எழுந்ததே இவ்வலைப்பதிவு.
தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இவர், தனது உடலில் சக்தி இருந்தவரை ஆலய பூஜைகளைத் தவறாது செய்து வந்தார் . திருவாவடுதுறை சன்னதி தெருவில் வசித்து வந்த இவர், மாசிலாமணீச்வரர் ஆலய உச்சிக்கால பூஜையை முடித்து விட்டு, சைக்கிளில் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருக்கோழம்பம் என்ற பாடல் பெற்ற சிவாலயத்திற்கும், அங்கிருந்து, பேராவூர், கறைகண்டம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களுக்கும் பூஜை செய்து விட்டு மதியம் சுமார் 3 மணிக்கு இல்லம் திரும்பிய பின்னரே உணவு உண்பார். மீண்டும் 5 மணிக்குப் பெரிய கோவில் பூஜைக்குத் தயாராகி விடுவார்.

இதில் பேராவூர், திருக்கோழம்பம் ஆகிய ஊர்க் கோவில்கள் எண்பதுகளில் புதர் மண்டிக் கிடந்தன. மேற்கூரை பிளந்து மரங்களின் வேர்கள் தொங்கிக்கொண்டு இருந்தன. விமானங்களில் மரங்கள் வேரூன்றிக் கிடந்தன. ஆங்காங்கு பாம்புப் புற்றுகள் வேறு !. ஊர்க்காரர்கள் பெரும்பாலும் திரும்பிப் பார்க்காத நிலை.மாதச் சம்பளமும் சில நூறுகளே! பரிதாபப் படுவோர் எவரும் இல்லாத காலம் அது. எப்போதாவது பாடல்  பெற்ற தல யாத்திரையாக யாராவது வந்தால் உண்டு. திருவாவடுதுறையில் உச்சிக் காலம் ஆன பிறகு அவர்களை அங்கு வரச் சொல்லித் தரிசனம் செய்து வைப்பார்.

திருவாவடுதுறைக் கோயிலில் தரிசனம் செய்து வைத்து விட்டு, கோமுக்தீச்வரர் மீது சம்பந்தர் பாடிய " இடரினும் தளரினும் " என்ற பாடலைப் பாடியபடியே பிரசாதம் கொடுப்பார். " சம்பந்த சுவாமிகளின் பெருமைக்கு ஈடு எது"  என்று வியந்தபடி, நம்மையும் வியக்க வைப்பார். தை மாதத்தில் அக்கோவிலில் வரும் பிரமோற்சவத்தில் சம்பந்தருக்கு உலவாக் கிழி கொடுத்த நாளன்று அவசியம் தரிசனம் செய்யும்படி சொல்லுவார். மேலும் திருமூலரிடத்திம் அவருக்கு நிறைய பக்தி இருந்தது. ஆதீனத்தின் மீதும் , மகாவித்துவான் பிள்ளை மற்றும் உ.வே.சா. ஆகியோரிடத்தும் மிகுந்த பற்று இருந்தது. மடத்திற்குள் அழைத்துச் சென்று திருமாளிகைத்தேவர்  நமசிவாய மூர்த்திகள் ஆகியோரது சன்னதிகளைத் தரிசனம் செய்து வைப்பதோடு, சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் முந்தைய மடாதிபதிகளின் படங்களைக் காட்டி விளக்குவார். அப்போது சின்ன  பட்டத்தில் எழுந்தருளியிருந்த ( பின்னர் 23 வது பீடாதிபதிகளாகப் பட்டம் ஏற்ற ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக) சுவாமிகளைப் பசுமடத்தில் அறிமுகம் செய்து வைத்ததை எவ்வாறு மறக்க முடியும்?

திருவாவடுதுறை செல்லும்போதெல்லாம், அவருடன் திருக்கோழம்பம் தரிசனம் செய்வதற்காகச் செல்வது வழக்கம். அபிஷேக சாமான்களை இங்கேயே வாங்கிக் கொண்டு செல்வோம். அங்கு செல்வதற்கான பாதை அப்போது மண் பாதையாக இருந்தது. மழை நின்றவுடன் சைக்கிளில் செல்வோம். மண் பாதையானபடியால் சைக்கிளைத் தள்ளிக்கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கும். ஒரு நாள் போவதற்கே இவ்வாறு சிரமப்படுகிறோமே.இவர் தினமும் இந்த முதிர்ந்த வயதில் எவ்வாறு செல்கிறாரோ என்று வியப்பது உண்டு. கோவிலில் சிப்பந்தி எவரும் இல்லாததால் நுழைந்தவுடன் சன்னதியை சுத்தம் செய்து விட்டுத் தீபம் ஏற்றுவார். பிறகு அருகிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீரை தோளில் சுமந்து கொண்டு வந்து அபிஷேகம் செய்வார். உதவி செய்யலாம் என்றால்,                      " வேண்டாம் அப்பா. மார்கழி மாதமாக இருப்பதால் நீ சுவாமிக்குத் திருப்பள்ளி எழுச்சியும் திருவெம்பாவையும் பாடிக் கொண்டு இரு. சிறிது நேரத்தில் வேண்டிய தண்ணீரைக் கொண்டு வந்து விடுகிறேன் " என்பார்.  பின்னர் இருவரும் ஸ்ரீ ருத்ரம் சொல்வோம். பிறகு அம்பாளுக்கும் நடைபெறும். அதற்குப் பிறகு பேராவூர் கோவில். இப்படித்தான் அவரது தினசரிக் கடமைகள் நடைபெற்று வந்தன.

சிரமமே இல்லாமல் வேலை செய்து விட்டுக் கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கம் உள்ள இக்காலத்தவர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைய வேண்டும். பாடல் பெற்ற ஸ்தலங்களிலும் பூஜை செய்வதற்கு ஆள் இல்லை என்ற நிலை ஏற்படக்கூடாது.

திருக்கோழம்பம் கோவிலுக்குத் திருப்பணி ஆகி , கும்பாபிஷேகம் நடைபெற்ற போது நாம் வாங்கிசென்று அர்பணித்த வஸ்திரங்களை சுவாமி- அம்பாளுக்கு சார்த்தி ஆனந்தப்பட்டதை நினைவு கூர்கிறோம். அவர்களது பணியினைப் பாராட்டி திருவாவடுதுறை மகாசன்னிதானம் அவர்கள் ருத்ராக்ஷ மாலையை வழங்கியதை மிகுந்த மகிழ்ச்சியோடும் பெருமையோடும் காட்டுவார். அதுபோலவே, திருவாவடுதுறை கும்பாபிஷேகம் ஆனதும்,சந்நிதானம் அவர்கள் பதக்கமும்,சம்பாவனையும் வழங்கியதை யாகசாலையிலேயே காட்டி மகிழ்வெய்தினார்.

சிவாச்சாரியாருக்கு மிகவும் அத்தியாவசியமானவை சிவபெருமானிடத்தில் பக்தியும், ஈடுபாடும், கடமை தவறாமையும் தான் என்பதைத் தனது வாழ்க்கையில் அனுசரித்துக் காட்டிய இவர்கள் சிவலோகத்தில் பெருமானுடைய சேவடிகளைச் சென்று அடைந்து விட்டார்கள். இத்தனை ஆண்டு காலமாகக் கோமுக்தீச்வரருக்கு கைங்கர்யம் செய்து வந்த அவருக்கு இறைவன் முக்தி வழங்காமல்  இருப்பானா? சென்னையில் மருத்துவம் பெறப் கடந்த பல மாதங்களாக வசித்து வந்த இவருக்கு திருவாவடுதுறையில் தை  மாதத்தில் நடைபெறும் உற்சவத்தைக் காண வேண்டித் திரும்பச் செல்லும்  எண்ணம் ஏற்பட்டது. திரும்பிய சில நாட்களில் அவர் மிகவும் விரும்பிய சம்பந்தர் பல்லக்கு உற்சவம் நடை பெற்றது. அவரது வீட்டு வாயிலோடு சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். மாலையில் இவர் கோமுக்தீச்வரரின் திருவடி நீழலை அடைந்து விட்டார். ஒவ்வொரு ஊரிலும் இவரைப் போன்று ஈடுபாடு கொண்ட சிவாச்சார்யார்கள் மேன்மேலும் தோன்றி ,இறை பணி ஆற்றுமாறு  அருள வேண்டிக் கோழம்ப நாதனை மனதாரப் பிரார்த்திக்கிறோம்.  

Wednesday, January 21, 2015

சிவாசார்யர் பற்றாக்குறை

அத்தியாவசியத் தேவைகளுக்கு மேலும் ஆசைப்படும் காலம் இது. அடுத்தவர்களிடம் இருப்பது  எல்லாம், ஏன், அதற்கும் மேலாகவும் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருக்கிறது. உண்ண உணவும், இருக்க வீடும், உடுக்கத் துணியும் இருந்தால் போதும் என்று இருந்தவர்கள் பெற்ற மகிழ்ச்சியைக் காட்டிலுமா நாம் மகிழ்ச்சி அடைந்து விட்டோம்? அந்த அத்தியாவசியத் தேவைகளும் இறை அருளால் கிடைக்கும் என்று உறுதியோடு இருந்தார்கள்.     "இம்மையே தரும் சோறும் கூரையும்" என்கிறது தேவாரம். ஆங்கிலப்பள்ளிக்  கல்விக்கு அடிமட்டத்தில் இருப்பவனும் ஏங்குகிறான். எப்பாடு பட்டாவது கல்விச் செலவை சமாளிக்க முயல்கிறான். எது எப்படிப் போனாலும் பரவாய் இல்லை.என் சொந்த முன்னேற்றம் ஒன்றே முக்கியம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.

அன்னியர் ஆட்சியால் ஏற்பட்ட இம்மாற்றம் தொடர்ந்து பேராசையில் கொண்டு விட்டு விட்டது. போதும் என்ற மனம் வராத நிலை ஏற்பட்டு விட்டது.குறுகிய காலத்திலேயே பணக்காரர்களாக ஆவதற்குக் குறுக்கு வழிகளையும் கையாள ஆரம்பித்து விட்டார்கள்.  கிராமங்களை விட்டு நகரங்களுக்குக் குடி புகுந்தது போக, வெளிநாட்டில் வசிப்பதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள்.  நிலைமை இப்படி விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கும்போது இதற்கு யார் தான் விதி வில க்காக இருப்பது சாத்தியம் ?  எல்லோரும் சௌகரியமாக இருக்கும்போது நான் மட்டும் கஷ்டப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா எனக்  கேட்க ஆரம்பித்து விடுவர்.

நாகரீகம் இப்படி மாறும்போது, சமயக் கோட்பாடுகள்,பாரம்பர்யங்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவதை நாம் காண்கிறோம். ஆதரிப்போர் இல்லாவிட்டால் ஆலய வழிபாடுகள் பாதிக்கப் படுகின்றன. ஆறு கால பூஜைகள் நடந்தது போய், நான்கு காலமாகி,பிறகு இரண்டு காலமாகித் தற்போது அதமத்திலும் அதமமாக ஒரு காலமாகிப் பூஜைகள் கிராமங்களில் நடைபெறுவதற்கு யார் கவலைப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. பல இடங்களில் அந்த ஒரு கால பூஜைகள் செய்யவும் சிவாச்சார்யர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக ஆகி வருகிறது. ஏனையோர் அதை ஏற்றுச் செய்தாலும் எத்தனை ஆண்டுகள் தான் சொற்ப  வருவாயில் பணி ஆற்ற முடியும்? கோயில் நிலங்களின் வருவாய் காலத்திற்கேற்ப அதிகரிக்கும் என்பதால் தான் மானியங்களை அக்காலத்தில் எழுதி வைத்தார்கள். இப்பொழுது அதிலும் கை வைக்க ஆரம்பித்த படியால் , யாரும் ஏழ்மையில் வாடிக் கொண்டு பூஜை செய்ய முன் வரத் தயங்குகின்றனர். சிவாசார்யர் பற்றாக்குறையால், பூஜா காலங்களில் கோயில்கள் பூட்டிக் கிடக்கின்றன.

அண்மையில் படித்த ஒரு செய்தியை  இங்கு பகிர்ந்து கொள்ளலாம் எனக் கருதுகிறோம். பல்லாண்டுகளுக்கு முன்பு, காஞ்சி பெரியவர்களைத் தரிசிக்க ஒரு சிவாச்சார்யார் வந்தாராம். பொருள் பற்றாக்குறையால்,  தனது  கிராமத்தை விட்டு நகர்ப்புறம் வந்து விட்டதாகப் பெரியவரிடம் அவர் தெரிவித்ததும், மகா சுவாமிகள், " உன்னுடைய ஊரின் பெருமை உனக்குத் தெரியுமா? அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். மறுபடி அங்கே சென்று உன் தகப்பனாருடன் பூஜை செய்துகொண்டு இரு " என்றார்களாம் . இதனை ஏற்ற அந்த சிவாச்சாரியாரும் தனது சொந்த கிராமத்துக்கே திரும்பினார். சில ஆண்டுகள் கழித்து சுவாமிகளைத்  தரிசித்தபோது, தனது கிராமத்துக் கோயில் திருப்பணி ஆகிக் கும்பாபிஷேகம் ஆகி விட்டதாகவும் அதற்குப் பின்னர் நிறைய மக்கள் அங்கு தரிசிக்க வருவதாகவும், அதன் பயனாகத் தனது வருவாய் கூடிவிட்டது என்றும் மகிழ்ச்சியுடன் கூறிய சிவாசாரியார், எல்லாம் பெரியவரின் அனுக்கிரகம் என்றாராம். அதற்குப் புன்னகைத்த பெரியவர், "என் அனுக்ரகம் இல்லை. சிவானுக்ரகம்  என்று சொல்லு" என்று சொல்லி ஆசியளித்து விடை கொடுத்தாராம்.   இதுபோல இப்போது சொல்வதற்கு யாரும் இல்லையா,  அல்லது கேட்பதற்கு யாரும் இல்லையா என்று புரியவில்லை.
  

Thursday, January 1, 2015

சிவமும் மரபும்

தங்களுக்கு உரிய மரபுகளைக் கடைப்பிடித்து, அவை  மறையாமல் பாதுகாக்க வேண்டிய கடமை  ஒவ்வொரு குலத்துக்கும் உண்டு. இல்லாவிட்டால், காலம்காலமாக நமது முன்னோர்கள் காட்டிய மரபுகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பித்துவிடும். தற்கால சூழ்நிலையில் இது சாத்தியமா என்று கேட்போர்  இருக்கிறார்கள்.  வருமானத்தையே மையமாகக் கொண்டு செயல்படும் இக்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் எழத்தான் செய்யும். தேவைக்கேற்ற வருமானத்தோடு, வசதிகளும் பெருகிவருவதால் இவை அனைத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடுகிறது. அதையே கெளரவம் எனவும் நினைக்கிறார்கள்.

குலமரபுகளைப் பின்பற்றிவருவோர் இருந்தாலும் நாளடைவில் அடுத்த தலைமுறையினரைப் பற்றிய கவலையும் ஏற்படுகிறது. அதற்காக இவர்களை சம்பாதிக்க வேண்டாம் என்றோ, வசதியாக இருக்க வேண்டாம் என்றோ யாராலும் நிர்பந்திக்க முடியாது. அதற்காக, மரபுகளைக் கைவிடுவதையும் ஏற்க முடியாது. இத்தனை காலம் பின்பற்றிவந்த குலத் தொழில் நம்மோடு போகட்டும். நமது அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்லிக் கொடுப்பதால் அவர்கள் எதிர் காலம் கேள்விக் குறியாகி விடாதா? என்று பெற்றோர்களே கேட்கும்போது, பிள்ளைகளின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று சொல்லத் தேவை இல்லை.

அப்படியானால், வேதமும் ஆகமமும் ஓதுவதும், விவசாயம் செய்வதும், சிற்பம்,ஓவியம், நாட்டியம், இசை,போன்ற பாரம்பர்யக் கலைகளைத் தொடர்வதும்  கைவிடப்பட வேண்டியதுதானா?  யாழ் போன்ற நமது பண்டைய இசைக்கருவிகள் வாசிப்பார் இன்றி மறைந்ததுபோல் மற்றவையும் காலத்தால் மறைய வேண்டுமா?  எல்லோரும் பொறியியலும் மருத்துவமும் படித்துக் கை நிறைய சம்பாதிப்பதைப் பார்த்து, நாமும் அதையே பின்பற்ற வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல முடியும்?

மரபுகளைக் காக்க மாற்று வழி இருக்கிறதா என்று யோசிப்பதே ஓரளவாவது இதற்குப் பலன் தரும். பள்ளியில் படிக்கும் பொது முடிந்தவரை தங்கள் மரபுவழிகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரது முக்கியமான கடமை. வளர்ந்தபிறகு வேலை தேடிச் சென்றாலும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தம் குலத்தொழிலைக் கற்றுக் கொண்டால் , பிற்காலத்திலாவது அது உபயோகமாக இருக்கும். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஆர்வம் காட்ட வேண்டியது இதற்கு மிகவும் அவசியம். இதனால், பிள்ளைகள் தவறான பாதைகளில் செல்வது கட்டுப் படுத்தப் படுகிறது.

வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகாவது, தம் மரபிற்கேற்ற தொழிலை முழு நேரப் பணியாக மேற்கொண்டால் வருமானமும் இருக்கும்.  பாரம்பரியமும், கலைகளும் அழிந்து விடாமல் பாது காக்கப்பட்டுவிடும். ஓய்வு பெற்ற பிறகும் பிற தொழில்களைச்  செய்து வருமானம் தேடுபவர்கள் இருக்கிறார்கள்.  அதை யாருக்கு வைத்துவிட்டுப் போகப்போகிறோம் என்று ஒரு கணம் சிந்திப்பது நல்லது. தேவைக்கு  மேல் பணம் ஈட்டுவதை விட, இத்தனை நாள் நாம் செய்யத்தவறிய குல தர்மத்தை இப்போதாவது செய்வோம் என்று எல்லோரும் எண்ணினால் எந்த ஒரு தொழிலிலும் அதைச் செய்வோர் இல்லை என்ற நிலை ஏற்படாது.

கோயில் பூஜை செய்யவும் , விவசாயம் செய்யவும் , நபர்கள் குறைந்து கொண்டே வருவதைப் பார்க்கும்போது, வேறு வேலைக்குச் சென்று பணி ஓய்வு பெற்ற பிறகாவது தங்கள் குலத் தொழிலை மேற்கொள்வார்களா என்ற ஆதங்கத்தால் இப்படி எழுத நேர்ந்தது. எந்த ஒரு தொழிலும் பிற தொழிலுக்குத் தாழ்வானது அல்ல. இன்னும் சொன்னால் உழுதுண்டு வாழ்வதே வாழ்வு என்று வள்ளுவம் கோடிட்டுக் காட்டுவதை இங்கு நினைக்க வேண்டும்.

எக்குலத்தோராயினும் சிவபெருமானுக்கு மீளா அடிமை பூண்டால் பெருமானது அருள் கிட்டும் என்பதைப் பெரிய புராணம் காட்டும் நாயன்மார்களது வாழ்க்கை மூலம் அறிகிறோம்.  " குலத்திற்கு ஏற்பதோர் நலம் மிகக் கொடுப்பது நமச்சிவாயவே" என்ற தேவார வாக்கின்படி, எத்தொழில் பூண்டாலும் இறை அருள் கிட்டும் என்பதே பெரியபுராணம் நமக்கு அறிவிக்கும் மையக் கருத்து. ஆகவே, நம்மில் உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் , சிவனடியார்களை சிவனாகவே பாவித்து , மரபுகளை மறையாது காத்தால் இந்தக் காலம் மட்டும் அல்ல. எந்தக் காலத்திலும் நமக்கு நன்மையே விளையும். இம்மையே நன்மை தரும்  பெருமான் சங்கரன் எனப்படுவதால் சார்ந்தவர்க்கெல்லாம் . " என்றும் இன்பம் தழைக்க" அருள் செய்வான். நமக்குத் தெரிந்தவர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது என்ற பழக்கம்  நல்லதுதான். அதைச் சற்று விரிவு படுத்தி அனைவரும் மரபு மாறாமல் இனிது வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே அதை விடச்  சிறந்த வாழ்த்தாக அமையும். அதுவே மரபுகளைக் காக்கும் வித்தாகவும் ஆகலாம் அல்லவா?