Monday, September 29, 2014

மூலவர் தனி நபரா ?

இவர் தனி நபரா ?
ஒரு கால கட்டத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்த கோயில்கள் பலவற்றின் தல வரலாற்றுப் புத்தகங்களில், அந்த ஆலயங்களின் சொத்து விவரமும் ஆண்டு வருமானமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்பொழுது அவ்விவரம் தரப்படுவதில்லை. அண்மையில் சில ஆலயங்களின் முழு விவரங்களை  வலைத்தளத்தில் தரும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது பூர்த்தி அடையப் பல்லாண்டுகள் காக்க வேண்டியிருக்கும்.

சமீப காலமாக மக்களுக்கு அறநிலையத்துறையின் செயல் பாடுகளில் நம்பிக்கை குறைந்து வருவதாகத் தெரிகிறது. கோயில் சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. இந்த விஷயத்தில் மட்டும் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்காததால் , மக்களின் குரல்கள் மங்கிப்போகின்றன. ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இந்நிலையில் யாரை யார் திருத்துவது ? இதற்குக் கூட்டுக் கொள்ளை என்று பெயரிட்டாலும் தவறில்லை என்று தோன்றுகிறது.

கிராமக்கோயில்களில் பணியாற்றிவந்த மடைப்பள்ளி ஊழியர்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், துப்புரவாளர்களும் ,மாலை கட்டுவோரும் இப்போது எங்கே போயினர்? அறநிலையத்துறை தரும் சில நூறு ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டு இன்னமும் பணியாற்றும் அர்ச்சகர்களின் நிலையைக் கண்டு யார் பரிதாபப் படுகிறார்கள்? எத்தனை ஊர்களில் செயல் அலுவலர்கள் இதுபோன்ற கோவில்களுக்கு வருகை தருகிறார்கள்? அவர்களது வருமானம் மட்டும் ஏறிக்கொண்டே போகவில்லையா? அர்ச்சகர்களுக்கும் குடும்பம் இருக்கிறது என்று ஏன் தோன்றுவதில்லை? வறுமையின் உச்ச கட்டத்திற்குச் சென்ற பிறகு அவர்கள் ஊரைவிட்டே அகன்றபின் கோவில்கள் ஒவ்வொன்றாய் பூட்டப்பட்டோ , பெயரளவில் ஒரு கால பூஜை நடை பெற்றோ இருந்துவிட்டால் இவர்களுக்கு  நஷ்டம் எதுவும் ஏற்படப்போவதில்லை. சில ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைப்பதைத்  தான்  எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ ? இப்படிப்பட்ட செயல் வீரர்களைத்தான் நாம் செயல் அலுவலர்கள் என்கிறோமா ? . இதிலும் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும். அதனால் எத்தனை கோயில்களைக் காப்பாற்ற முடியப் போகிறது?

சொத்து விவரம் தெரிவிக்கப்படுவதில்லை என்பதால் ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பு அண்மையில் சட்டத்தின் துணையை நாடியது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் கேட்டால் சென்னைக் கோயில்கள் இரண்டின் செயல் அலுவலர்கள் அதிர்ச்சிதரும் பதிலைத் தந்துள்ளதை 29. 9. 2014 தேதியிட்ட தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ளது. அவர்கள் தந்த பதிலாவது: "கங்காதரேஸ்வரர் /ஏகாம்பரேஸ்வரர்  சட்டப்படி தனி நபர். எனவே அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த தகவல்களை அளிக்க இயலாது. கோயில் சொத்துக்கள் அனைத்தும் கோவிலின் மூலவருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை  அவரே இந்த சொத்துக்கள் அனைத்துக்கும் சட்ட நபர்(தனி நபர்) ஆவார். "  சட்ட வல்லுனர்கள் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட செய்தியைக் கண்ட அன்பர் ஒருவர் தினமலர் வலைத் தளத்தில் தந்துள்ள கருத்தை இப்போது காண்போம்:  " செயல் அலுவரை நியமித்தது மூலவரா அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அரசால் நியமிக்கப்பட்டவர் என்றால் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப் பட்டவர் .  இல்லாவிட்டால் உண்டியல் வசூலை மூலவரே எண்ணிக்கொள்ளட்டும். செயல் அலுவலர் தனது சம்பளத்தை மூலவரிடமே வாங்கிக்கொள்ளலாம் ."  இந்த அன்பரின் மனக்குமுறலில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சொத்து விவரங்களை ஒளிவு மறைவு இல்லாமல் தெரிவிக்க மறுப்பது ஏன் என்று கேட்டால் தகுந்த விளக்கம் தரப்படுவதில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் அறநிலையத்துறை தக்க விளக்கத்தை அளிக்கவேண்டும்.  

Friday, September 12, 2014

சிலை திருட்டைத் தடுக்க என்னசெய்யப்போகிறோம்?

                                                                                                        படம்: நன்றி,தினமலர்
ஸ்ரீ புரந்தரன் ப்ருஹதீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் விருத்தாசலம் ஆலயத்திலிருந்தும் களவாடப்பட்ட தெய்வத் திருமேனிகள் மீண்டும் நமது நாட்டை வந்து அடைய உதவிய இந்திய அரசுக்கும் பிற அதிகாரிகளுக்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோலவே  முன்பும்  சிவபுரம் , திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் மூர்த்திகள் களவாடப்பட்டு மீட்டுக் கொண்டுவரப் பட்டன.  இதுபோலப் பறிகொடுப்பது பல ஊர்களில் நடந்தும், நாம் தகுந்த பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. நமது அஜாக்கிரதையாலும்,அலட்சியத்தாலும் இவ்வாறு ஒவ்வொன்றாகக் களவாடப் படுகின்றன.கூட்டுக் கொள்ளையும் ஒரு  காரணமாகலாம். இல்லாவிட்டால் மிகக்கனமான மூர்த்தியை மிகப்பெரிய விமானமான  ஜம்போ ஜெட்டில் மட்டுமே கொண்டு வர முடிகிறது என்றால் எப்படித் திட்டமிட்டு இச் சதியைச் செய்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம். சட்டத்தின் பிடியில் இக்கொள்ளைக்காரர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

 இனிமேல் ஒரு ஊரில் கூட இதுபோன்ற கொள்ளை நடக்கக் கூடாது என்பதற்கு நாம் என்ன செய்கிறோம்? சிலை பாதுகாப்பு மையங்கள் வைத்துள்ளோம் என்று அறநிலையத் துறை பதில் சொல்லும். பாதுகாப்பு மையங்களில் காற்றுக் கூடப் போகாதபடியும்,வழிபாடு இன்றியும் பூட்டி வைப்பதற்காகவா அக்காலத்தில் மூர்த்திகளைக் கோயில்களில் நிறுவினார்கள்? ஒவ்வொரு ஆலயமும் தகுந்த பாதுகாப்புடன் இருந்தால் இதற்கான அவசியம் ஏற்படாது. வருடக்கணக்கில் இம்மையங்களில் பூட்டப்படுவதால் அவை பாசியும் தூசும் படர்ந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன.

களவாடப்பட்ட மூர்த்திகள் எங்கெங்கெல்லாமோ  அம்மூர்த்திகளுக்கான மரியாதை கிடைக்காத இடங்களில் காட்டப்பட்டு சிலவேனும் தாயகம் திரும்புகின்றன. அவற்றைத் தெய்வமாகக் கருதாமல், வெறும் கலைப் படைப்புக்களாகவே சிலரால் கருதப்படுகின்றன. ஒருகாலத்தில் இறை நம்பிக்கை மிகுந்தவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு நியமத்தோடு பூஜைகள் செய்யப்பட்டு மக்களின் பக்திக்குப் பாத்திரமாக அவை திகழ்ந்தன என்று நினைத்துப் பார்ப்பர்களேயானால் இங்ஙனம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ள மாட்டார்கள். சமீபத்தில் ஆலயம்தோறும் அவற்றை அளக்கவும் எடைபோடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

எப்படியோ தாயகத்துக்குத் திரும்பி வந்து விட்டாலும் அவை உரிய கோயில்களில் மீண்டும் ஒப்படைக்கப்படுகின்றனவா? கேட்டால் அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பார்கள். உரிய பாதுகாப்பை ஏன் செய்து தரக்கூடாது என்பதே கேள்வி. உள்ளூர் மக்களிடம் பொறுப்பைத் தள்ளிவிடப்பார்க்கிரார்கள். அர்ச்சகரே கையெழுத்துப்போட்டுப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார்கள். எவ்வளவு அர்ச்சகர்கள் தயங்காமல் பொறுப்பு ஏற்பர்? இதற்கு மாறாக ஸ்ரீ புரந்தரன் ஊர் மக்கள் தங்கள் ஊர் ஆலய மூர்த்தி மீண்டும் கோயிலுக்கே திரும்ப வர வேண்டும் என்று ஆர்வம் காட்டுகிறார்கள் என்ற பத்திரிக்கை செய்தி ஆறுதலைத் தருகிறது. அவ்வூராரை மனதாரப் பாராட்டுகிறோம்.

உற்சவர்கள் சன்னதியைத் திறக்க அதன் கதவுகள் வங்கிகளில்  பாதுகாப்பு அறையில் உள்ளதுபோல் இருவர் சாவி போட்டால் மட்டுமே திறக்கும்படி அமைக்கப்படவேண்டும். அர்ச்சகர், மெய்காவல்/ ஆலய அதிகாரி ஆகியோர் தனித்தனிச் சாவிகள் போட்டுத் திறக்கும்படி அமைக்கவேண்டும். தொங்கும் பூட்டால் எந்தவிதப்பயனும் இல்லை.

அறநிலையத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் அத்தனை ஆலயங்களிலும் மதில்  சுவர்கள் உயரமாகவும், சன்னதிக் கதவுகள் உறுதியாகவும், எச்சரிக்கை அலாரம் பொருத்தப்பட்டதாகவும் உடனடியாக அமைக்கப்படவேண்டும். இதற்கான அறிக்கையை அத்துறையிடம் மக்கள் உடனடியாக எதிர்பார்க்கிறார்கள். செய்வார்களா?

நிறைவாக ஒரு வார்த்தை. விக்கிரகங்களைக் கொள்ளை அடித்தவனைக் கைது செய்வது ஒரு பக்கம். அச்செய்தியை வெளியிடும் நாளிதழ்கள் இன்னமும் கொள்ளைக்காரனைக் "கடத்தல் மன்னன் " என்ற பட்டம் தந்து  "கௌரவிக்கிறார்கள்" இவர்கள் திருந்தவே மாட்டார்களா?