Saturday, April 26, 2014

சிலைத் திருட்டைத் தடுக்க முடியாதா?

அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தரன் என்ற ஊரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய உற்சவ விக்கிரகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் களவாடப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரபரப்புச் செய்திகளுக்காகவே காத்துக் கொண்டு இருக்கும் பத்திரிகைகளும்  வழக்கம்போல செய்தியை வெளியிட்டதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாக நினைத்து ஓய்ந்து விட்டன. ஆனால், கொள்ளைக்காரனுக்குக் "கடத்தல் மன்னன்" என்று பட்டம் மட்டும் தவறாமல் கொடுத்து வருகிறார்கள்! சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மட்டும் விசாரணை நடத்தி வந்தது. கொள்ளைக்காரன் சுபாஷ் கபூர் என்பவனைக் கைது செய்து விசாரித்ததில் இச்சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரிய வந்து, அவற்றை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவபுரம்,திருவேள்விக்குடி ஆகிய ஊர்களின் சிலைகளும் கடத்தப்பெற்று , லண்டனில் வழக்கு நடைபெற்ற பின்னர் தமிழகத்திற்கு வந்து சேர்ந்தன. இவ்வாறு பல்லாண்டுகளாக இத்திருட்டுத் தொழில் நடைபெற்றும், நமது அறநிலையத்துறையும்,ஊர்மக்களும் ஏன்  அலட்சியமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதவுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தெரிந்தும் நிர்வாக அதிகாரி என்ன செய்து கொண்டு இருந்தார்? ஊர்மக்களாவது கதவைப் பழுது பார்க்கக் கூடாதா? மெய்க்காவல் செய்பவர் எல்லாக் கோயில்களிலும் இல்லையா? அப்படியானால் ஐந்தடி உயரமான மூர்த்தி களவாடுவதற்குள்  கூக்குரல் எழுப்பலாம் அல்லவா? மணியையாவது ஓலிக்கச் செய்யலாம் அல்லவா? சோதனைச்சாவடிகள் தூங்கிக் கொண்டு இருந்தனவா? வெளி நாட்டுக்குக் கப்பல் மூலமும் விமானம் மூலமும் அனுப்பப்படும் சரக்குப்       பெட்டிகள் ஸ்கேன் செய்யப்படுவதில்லையா; அல்லது அதிகாரிகளும் கொள்ளைக்காரர்களுக்கு  உடந்தையா? இப்படிப் பல கேள்விகள் கேட்கத்தான் வேண்டி இருக்கிறது.

இவ்வாறு பறிகொடுத்து விட்டுப் புலம்புவதை விட, சிலை கடத்தலைத் தடுக்க அரசு என்ன செய்கிறது என்பதே முக்கியம். சிலை பாதுகாப்பு மையங்கள்  அமைத்திருக்கிறோமே என்று அறநிலையத் துறை உடனே பதில் சொல்லும். கோவில் தோறும் இருக்க வேண்டிய மூர்த்திகளை இவ்வாறு கும்பலாக ஒரே இடத்தில் வைத்துப் பூட்டிவிடுவது  எந்த விதத்தில் நியாயம்? அரசு எடுத்துக்கொண்டு போனாலும், கொள்ளைக்காரன் எடுத்துக்கொண்டு போனாலும் கடைசியில்,கோயிலில் அம்மூர்த்திகள் இல்லை என்பதுதானே நிதர்சனமான உண்மை! பாதுகாப்பு  மையங்களில் அபிஷேகம் இன்றிப் பாசியும் தூசியும் பிடித்துக் கிடக்கும் அவற்றைக் காண்போர் இதயம் கலங்கும். இதுவே அச்சிலைகளுக்கு நிரந்தரமான புகலிடமாக இருந்தால் காலப்போக்கில் எந்த ஊர் விக்கிரகம் என்று அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்படுமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது.

பாதுகாப்பு மையங்களில் செய்யப்படும் பாதுகாப்பை(?) ஒவ்வொரு கோவிலிலும் செய்தால் என்ன? வலுவான சுவரும் ,கதவும், உறுதியான பூட்டும், பாதுகாப்புக் கேமெராவும் அவசர கால அலாரமும் , மெய்க்காவலர் ஒருவரும் இருந்து விட்டால் எப்படிக் களவாட முடியும்? உற்சவ மூர்த்தி அறையை இருவர் தனித் தனி சாவிகள் போட்டால் மட்டுமே திறக்க முடியும் என்று முறைப்படுத்த வேண்டும்.எத்தனையோ கோவில்களில் சுற்றுச் சுவர் இல்லாது இருந்தும் அறநிலையத்துறை மெத்தனமாகவே இருக்கிறது. இவர்கள் சுவர் கட்டுவதற்குள் எஞ்சியுள்ள சிற்பங்களும் சிலைகளும் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டி இருக்கிறது.  பெரும் வருமானம் ஈட்டித் தரும் ஆலயங்களின் உபரி நிதியிலிருந்து இதைச் செய்ய முடியாதா? முடியாது என்றால் அதற்கென்று ஒரு அரசுத் துறையும்,அதிகாரிகளும் எதற்கு என்று மக்கள் கேட்கத்தான் செய்வார்கள்.  

Friday, April 18, 2014

மயிலையில் கலை விழா

ஆடலரசனான நடராஜப் பெருமானை ந்ருத்த ராஜா என்று வடமொழியில் கூறுவர். அவன் ஆடும் சிற்றம்பலம் ந்ருத்த சபை என்றும் அப்பெருமான் சபா நாயகன் என்றும் அடியார்களால் போற்றப்படுவதைக் காணலாம்.  அவனது திருவடிகளோ " மலர் சிலம்படிகள்" . அதாவதுசிலம்பினை அணிந்த பொற்பாதங்கள். அத்திருவடியைக் கண்ட கண் கொண்டு வேறொன்றைக் காணவும் வேண்டுமோ என்பார் அப்பர் சுவாமிகள். அக்குஞ்சித  பாதத்தைத் தரிசிக்கப் பிறவியும் வேண்டுவது என்றார் அவர். எனவே, ஆடற்கலை பயிலும் மாணாக்கர்கள் சலங்கையைக் காலில் கட்டிக்கொள்ளும்போதே ஆனந்த தாண்டவ மூர்த்தியின் நினைவு வரவேண்டும். அவனிடமிருந்து வந்த கலை அல்லவா இது?

பல ஆலயங்களில் கலை விழா நடத்துகிறார்கள். ஆனால் அமைப்பாளர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சிவராத்திரியை ஒட்டி நடைபெறும் விழாவானால் சிவபெருமானைப் பற்றிய சொற்பொழிவோ, இசை நிகழ்ச்சியோ அல்லது நடன அரங்கோ நடத்தலாம். அதேபோல் நவராத்திரியை ஒட்டிய நிகழ்ச்சிகள் அம்பிகை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் தெரிந்தவர்கள் என்பதற்காகவோ அல்லது சிபாரிசு செய்யப்பட்டதாலோ சில இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

சிவாலயமாக இருந்தால் சிவன், அம்பிகை, விநாயகர், முருகன், அடியார்கள் ஆகியோருக்குத் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். அதேபோல், பெருமாள் கோயிலாக இருந்தால் ராமாயணம், பாரதம்,பாகவதம் போன்ற புராண சொற்பொழிவுகளை நடைபெறச்செய்யலாம். ஒரே ஆலயத்தில் சிவ - விஷ்ணு சன்னதிகள் இருந்தால் மேற்கூறிய எல்லாவற்றையும் நடத்துவது பொருத்தமாக இருக்கும். சிவாலயத்தில் நடைபெறும் கலை விழாவில் சிவ சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெறுவது பொருத்தம்.

மயிலாப்பூர் கபாலீச்வரர் கோயிலில் 2014 ஏப்ரல் மாதம் நடைபெறும் கலை விழாவில் முதல் நாள் (18.4.2014) அன்று, வெங்கடாத்திரி வைபவம் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. "மயிலையே கயிலை கயிலையே மயிலை " என்று சொல்லிக்கொண்டு இவ்விதம் பொருத்தமற்ற நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. கயிலையில் வெங்கடாத்திரி வைபவம் நடைபெறுகிறதா? இல்லையே! அதனைப் பார்த்தசாரதி திருக்கோயிலில் நடத்தினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்! விழாக்குழுவினர் யோசிக்க வேண்டும். நிகழ்ச்சியின் மீதோ, அமைப்பாளர்கள் மீதோ அல்லது ஆலய நிர்வாகத்தின் மீதோ நமக்குச் சற்றும் காழ்ப்பு உணர்ச்சி இல்லை. இருக்கப்போவதும் இல்லை. செய்வதைத் திருந்தச் செய்யலாம் என்ற எண்ணத்தால் மட்டுமே இவ்வாறு எழுத நேர்ந்தது. குறை கூறும் எண்ணம் அறவே இல்லை.இதனைச் செயல் படுத்த வேண்டியவர்கள் ஆடல் பயிலும் மாணாக்கர்களே . ஆடற் கலைக்கே அதிபதியான சபாபதியை முன்னிட்டு மயிலையில் நடனம் நடைபெற்றால் அதுவே கயிலையாகப் பரிணமிக்கும் என்பதில் ஐயம் இல்லை.   

Monday, April 14, 2014

ஆகம வழி நிற்போம்

 சிவபெருமானை  ஆகமமாகவே ஆனவன்  என்கிறார் மாணிக்கவாசகர். " ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் " என்கிறது திருவாசகம். நம் தென் தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்கள் ஆகம வழிப்படி அமைக்கப்பெற்றவை. அதை மாற்றம் செய்வதோ அல்லது புதிதாகக் கட்டப்படும் சிவாலயங்களை ஆகமத்தை ஒட்டாமல்  தமக்குப் பிடித்தவகையில் மாற்றிக்கொள்வதோ  பெரும்  பிழையே ஆகும். சிவாலய நிர்மாணம் என்பது எந்தெந்த சன்னதிகள் ஆலயத்தின் எவ்விடத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக ஆகமங்கள் மூலம் அறிகிறோம்.

வட நாட்டில்  போற்றப்படும்  சில தெய்வங்களையும் , மகான்களையும் வடிவமைத்து நமது சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்கின்றனர் சிலர். இப்படிச் சொல்வதால் அத்தெய்வங்களையும் மகான்களையும் போற்றக்கூடாது என்பது அர்த்தமல்ல. வேண்டுமானால் அவர்களுக்குத் தனிக் கோயில்கள் கட்டிக் கொள்ளட்டும். சிவாலயத்திற்குள் சன்னதி அமைக்க வேண்டாமே! அதேபோல் நம்மூரில் வாழ்ந்த மகான்களுக்கும் சிலை அமைத்து சிவாலயங்களில் வைக்கக் கூடாது.

வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று எண்ணி என்னென்னவோ புதுமைகளை செய்யத் துணிந்து விட்டார்கள். கேட்டால் எங்கும் இல்லாத வகையில் இங்கு அமைக்கப்படுகிறது என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்குப் பத்திரிகைகளும் துணை போகின்றன.

வட நாட்டில் செய்யாத பூஜை முறைகளை எல்லாம் அந்தப் பக்கத்து மூர்த்திகளை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டபிறகு பால்,தயிர்,பஞ்சாமிர்தம் ,விபூதி,சந்தனம் முதலிய பொருள்களால் அபிஷேகம்  செய்து பின்பற்றுகிறார்கள்.. அப்படிச் செய்யும்போது வேத முழக்கமும் ஒலிக்கிறது. இம்முழக்கத்தை எத்தனையோ கிராமக் கோயில்கள் கேட்பதற்குக் காத்துக் கொண்டு இருக்கின்றன!

இப்படிப் பிரதிஷ்டை செய்யப்பட்ட மகான்களின் சன்னதிகள் பிரபலப்படுத்தப்பட்டு, மூல மூர்த்தியின் சன்னதியின் பால் கவனம் குறைய ஆரம்பித்து விடுகிறது.. பணம் வசூலாகிறது என்றால் இதுபோன்ற சன்னதிகளை அமைக்க வேண்டுமா? இருக்கிற சன்னதிகளைப் பராமரித்தாலே போதுமானது என்று உணர மாட்டார்களா?

அருள் நூல்களில் காணப்படும் வாசகங்களைத் தமக்குப் பிடித்த தெய்வங்கள் மற்றும் மகான்களின் பெயரில் மாற்றிக் கொள்ளும் போக்கையும் காண்கிறோம். யார் மனத்தையும் புண் படுத்தக்கூடாது என்பதால் இங்கு விரிவாக அது பற்றிச் சொல்ல வேண்டாம். தங்களுக்கு உள்ள பக்தியைக் காட்டிக் கொள்ள ஆயிரம் வழிகள் இருக்கும்போது இப்படிச் செய்வானேன்?  

விநாயகருக்கும் முருகனுக்கும் புதியதாக யாரும் புகழ் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. முருகனுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல் விநாயகருக்கும் அறுபடை வீடுகள் என்று ஆறு கோயில்களை அடையாளம் காட்டுகின்றனர். முருகனுக்கு ஆறுபடை வீடுகள் என்பதோடு , எட்டாவது படை வீடு வரையில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பஞ்ச பூதத் தலங்கள் என்றால் எங்கள் மாவட்டத்திலும் பஞ்ச பூதத்  தலங்கள் உண்டு என்கிறார்கள். நவக் கிரகங்கள் வழிபட்ட கோயில்கள் என்றால் சென்னையைச் சுற்றிலும்கூட  நவக் கிரகக் கோயில்கள் உண்டு என்கிறார்கள். இப்படியே போனால் பிற்காலத்தில் வரும் சந்ததிகளுக்கு நமது முன்னோர் சுட்டிக் காட்டிய கோயில்கள் எவை என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடும்.

இதேபோலத்தான் சிவாலயங்களில் ஆகமத்திற்கு உட்படாத சன்னதிகளை அமைப்பதும். ஆன்மீகப் பெரியோர்களும் சிவாசார்யப் பெருமக்களும் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாநகரங்களில் இதுபோன்ற விதிமீறல்கள் நிறைய நடைபெற்றாலும் கிராமப் பகுதிகளில் அவ்வாறு இல்லை என்று எண்ணிக் கொண்டு     இருந்தோம். இப்போது அங்கேயும் தவறுகள் அரங்கேறுகின்றன. இத்தகைய தவறுகள் கண்டிப்பாகத் திருத்தப்பட வேண்டும் இல்லாவிட்டால் அவை வேரூன்றி விடும். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று வாதிட ஆரம்பித்து விடுவர். ஆகமங்கள் அர்த்தமற்றவைகளாக ஆகிவிடக்கூடாது. " ஆகம சீலர்க்கோர் அம்மானே" என்று  சுந்தரர் கூறுவதால் ஆகமத்தின் சிறப்பும் பெருமானின் பெருமையும் ஆகமங்களைப் போற்றுவோரின் பெருமையும் ஒருங்கே வெளிப்படுகிறது அல்லவா?