Friday, August 2, 2013

தெய்வத் திருவுருவம்

தெய்வத்திருமேனிகளைத் தரிசிக்கும்போது  அவற்றை ஒரு கணம் அசையாதவண்ணம் இருந்தபடியே உற்று நோக்க வேண்டும். அப்போதுதான் அந்தத் திருவுருவம் நமது உள்ளத்தில் பதிந்து நீங்காது நிற்கும். மேலெழுந்தவாரியாக நோக்கினால் பல செய்திகள்  புலப்படாமல் போய்விடும். தூண்களில் காணப்படும் சிற்பங்களிலும் பல புராணச் செய்திகளும் நாம் இதுவரை  கேள்விப்படாத வரலாறுகளும் தெரிய வாய்ப்பு உண்டு.

உண்மையில் நாம் அவ்வாறு தரிசனம் செய்கிறோமா என்று பார்த்தால் நேரம் இல்லாதததைக் காரணம் காட்டி இல்லை என்றே பதில்சொல்கிறோம். நேரம் இருக்கும் போதாவது அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். மூர்த்தியின் முகத்தைப் பார்த்த மாத்திரத்தில்  இன்ன மூர்த்தி என்று எல்லா மூர்த்திகளையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. யானை முகமாக இருந்தால் விநாயகர் என்றும் ஆறு முகத்தோடு இருந்தால் சண்முகர் என்றும் நான்கு முகத்தோடு இருந்தால் பிரமன் என்றும் எளிதாகக் கூற முடியும். ஆனால் ஒரு முகமும் நான்கு திருக் கரங்களும் கொண்ட மூர்த்தியைப் பார்த்தால் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதற்கு ஒரே வழி, அம்மூர்த்தியின் பின் இரண்டு கரங்களிலும் என்ன இருக்கிறது என்று உற்று நோக்க வேண்டும். சூலமும் வஜ்ரமும் இருந்தால் முருகன் என்றும், சங்கும் சக்கரமும் இருந்தால் திருமால் என்றும் மானும்  மழுவும் இருந்தால் சிவன் என்றும் சொல்கிறோம்.

சில சமயங்களில் பின் இரு கரங்களில் உள்ளவற்றைக்  கொண்டு ஊகித்தாலும், பிற அம்சங்களை நோக்கும் போது எந்த அவசரத்தில் இத திருக்கோலம் ஏற்பட்டது என்று புராண ரீதியில் பார்க்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒரு நிலை சென்னைக்கு அருகிலுள்ள திருசூலத்தில் உள்ள திருசூல நாதர் ஆலயத்தில் தரிசிக்கும்போது  நேர்ந்தது. சோழர் காலக் கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயத்தின் முக மண்டபத் தூண் ஒன்றில் உள்ள சிற்பம் தான் இவ்வாறு நம்மைக் கவர்ந்தது.

பின்னிரு கரங்களில்  மான் மழு ஏந்தி நிற்கின்றார் பெருமான். அவரது முன் இரு கரங்களில் நரசிம்மர்  துவண்டு கிடக்கிறார். அதைப்  பார்த்த மாத்திரத்தில் அம்மூர்த்தி சரபர் என்று சொல்லிவிடுவார்கள். ( ஆலய அர்ச்சகரும் அப்படித்தான் சொல்கிறார்.) இப்பொழுது சந்தேகத்துக்கு வருவோம். சரபருக்குப் பொதுவாக இறக்கைகளும் சிங்க முகமும் உண்டு அல்லவா? ஆனால் இச் சிற்பத்திலோ இறக்கைகளும் இல்லை. சிங்க முகமும் இல்லை. இரண்டு முகங்கள் இருக்கின்றன. இரு முகம் கொண்ட சரப நிலை தியானத்துடன் இருக்கிறதா என்று தெரியவில்லை. (தெரிந்தவர்கள் விளக்கினால் பலரும் பயன் பெறுவர்).

தூண் தானே என்று பாராமல் சென்றுவிட்டால் இது போன்ற புராண வரலாறுகள் தெரியாமல் போய் விடும். பரபரப்பு எதுவும் இல்லாமல் ஆலயத்தை வலம் வரும் போது இது போன்ற செய்திகள் திருவருளால் நமக்குப் புலப்படும். நந்தியாகட்டும்,துவார பாலகர்கள் ஆகட்டும், பூத கண வரிசை ஆகட்டும் , மகர தோரணங்கள் ஆகட்டும் -- இவை எல்லாம் எத்தனையோ தகவல்களை நமக்குச் சொல்லக் காத்திருக்கின்றன. நமக்குத்தான் அவற்றைத் தரிசிக்கும் பாக்கியம் இருக்க வேண்டும்.

3 comments:

  1. எத்தனையோ தகவல்களை நமக்குச் சொல்லக் காத்திருக்கும் சிற்ப அதிசயப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இரண்டு முகங்களைக் கொண்ட சரபர் வடிவம் உண்டு. அதற்கு சிம்ஹக்ன மூர்த்தி என்று பெயர். தவிர,

    தியான ஸ்லோகங்களுக்கு ஏற்ப, அந்த வடிவத்திலும் சிறுசிறு வித்தியாசங்களும் அமையும்.

    பழவேற்காட்டில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இந்த சிம்ஹக்ன மூர்த்தியை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்

    பார்த்திருக்கிறேன்.

    - கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்

    ReplyDelete