Thursday, May 2, 2013

கேலிகள் தேவையா?


நமது பாரம்பர்யம் பல வகைகளிலும் கைவிடப்படுவதைக் கண்டு வருந்தும் இவ்வேளையில் அதனைச் சிலர் வேரோடு வீழ்த்திவிடுவார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. மேலும் சிலருக்கு அது நகைப்புக்கு உரியதாக ஆகி வருகிறது. இத்தகைய கேலிகள் ஒன்றும் புதியதில்லை என்றாலும் இதனால் சிலர் பிரபலம் அடைய முயல்வதும், சம்பாதிக்க முயல்வதும் தான் வேதனையாக இருக்கிறது. கேட்க யாரும் இல்லாததால், கிண்டல்கள் தொடர் கதை ஆகி வருகின்றது.

சமயச் சின்னங்களையும், பாரம்பர்யச் சின்னங்களையும் பழிப்பவர்களும் இழிப்பவர்களும் இருப்பது ஒரு பக்கம். சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்ததுபோல் பேசுபவர்களுமா  இப்படி மக்கள் மத்தியில் பேசவேண்டும்?
சிகையின் முக்கியத்துவத்தைக் கூற வந்த காஞ்சி பெரியவர்கள், 1932 ம் ஆண்டு சொன்னதை முதலில் படித்துவிட்டு, அப்புறம் விஷயத்திற்கு வருவோம்.

" சிகை வைக்கும் கர்மாவும் பகவானுக்கு அர்ப்பணமாகிறது. சத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ண வேண்டும். மந்த்ரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையை முன்பு பரமேச்வரனுக்குப் பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்துவிடுவது தப்பு. பரமேச்வரப் ப்ரீதியாக சங்கல்பம் பண்ணிக்கொண்டு சம்ஸ்காரம் பண்ணி கிள்ளுக்கீரையாக எண்ணி ,வைத்துக்கொண்ட சிகையை மனம் போனபடி எடுக்கக் கூடாது. இப்படிப் பண்ணுபவர்கள் முதலில் அதைப் பண்ணாமல் இருக்க வேண்டும்."

திருப்பூரில் அண்மையில் நடந்த ராமாயண உபன்யாசம் செய்த அனந்த பத்மனாபாசார்யார் சொன்னதாக வெளிவந்த பத்திரிகை செய்தி, " குடுமி வச்சா அவ்ளோதான்" என்ற தலைப்பில் வந்துள்ளது. இச்செய்தியின் நம்பகத்தன்மை அதை வெளியிட்ட நாளிதழுக்கே உரியது. இருப்பினும் , மக்கள் பார்வைக்குத் தெரியும்படி அச்சேறியுள்ளதால், நமது பாரம்பர்யத்தில் நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளவர்களது மனத்தைப் புண் படுத்தும் வகையில் இக்கேலிப்பேச்சு அமைந்துள்ளது. உபன்யாசகரை மெச்சிக் கொள்வதா அல்லது இதையும் ஒரு செய்தியாகக் கருதி வெளியிட்ட நாளிதழின் "பத்திரிகை தர்மத்தை" மெச்சிக் கொள்வதா தெரியவில்லை.

அனந்த பத்மநாபாசார்யார் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி: " ஒரு உபன்யாசத்துக்கு சென்ற போது,ஒருவர், "சுவாமி, உங்க குடுமியிலே பூ வைக்கலாமே" என்று கூறி, பூ கொடுத்தார். "இப்போதைக்கு "ஹேர் பின் தான் வைக்க முடியும். பூ வேண்டாம்னு சொல்லிட்டேன் " என்றார். இதைகேட்ட முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்பர் ஒருவர், "அந்தக் காலத்துலே ஆத்துக்காரிஎல்லாம் குடுமியைப் பிடித்து அடிக்க மாட்டா ; இப்பெல்லாம் குடுமி வைச்சா அவ்ளோதான். பின்னிப் பெடலெடுத்துடுவா. அதனால் தான் எல்லோரும் "ஹேர் கட் " பண்ணிடறா." எனத் தன் அனுபவத்தை எடுத்துக் கூற மற்றவர்கள் சிரித்தனர்."  சிரிக்கும் படியான விஷயமா இது? வெட்கப்படவேண்டிய விஷயம் அல்லவா? ராமன் குடுமி வைத்திருந்தான் எனக் கூறி எங்கெங்கோ போனதால் வந்த விளைவு தானே இது? பின்னிப் பெடலெடுக்கும் ஆத்துக் காரிகள் என்று பொதுப் படையாகச் சொல்வது தவறு. ஆண்களை விட, நமது சம்பிரதாயத்தில் மிக்க ஈடுபாடும் பக்தியும் கொண்ட எத்தனையோ பெண்மணிகளைக் காண்கிறோம். தாழ்வு மனப்பான்மை காரணமாக சிகையை  எடுத்துவிடத் துணியும்  ஆண்  வர்க்கம், அப்பழியைப் பெண்கள் மீது போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது.

அரை டிராயர்,முக்கால் டிராயர், நைட்டீ என்றெல்லாம் உடுக்கும் இக்காலத்தில் . சிகையையும் பாரம்பர்ய உடைகளையும் பின்பற்றும் மிகச்சிலரின் மனம் புண்பட வேண்டுமா? அதற்கு உபன்யாச மேடையே துணை போகலாமா? அப்படியே போனாலும் அதைப் பெரிது படுத்திப் பத்திரிகையில் வெளியிட்டு அனைவரின் நகைப்புக்கு ஆளாக்க வேண்டுமா? நெற்றியில் நாமம் இட்டுக் கொள்வதைப் பிறர் பரிகசித்தால் அதை இட்டுக் கொள்ளாமல் விட்டு விடுவார்களா? ஒருவேளை ஓரிரு ஆத்துக்காரிகள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால், அவர்களை அன்பாகத் திருத்தி, சமயச் சின்னங்களின் உயர்வைத் தெரியப்படுத்த வேண்டாமா? அதை விட்டு விட்டு, ஏளனமாகப் பேசினால், சிலரின் கைத்தட்டுக்களை வேண்டுமானால் சம்பாதிக்கலாம். அதே நேரத்தில் பலரின் மனக் கசப்பையும் கூடவே சம்பாதிக்க நேரிடுகிறது. வெளிவர இருக்கும் ஒரு படத்தின் தலைப்பு, பாரம்பர்ய உடை உடுத்தும் ஒரு சாராரை மனம் நோகவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உபன்யாச அரங்கத்தில் எழும்பும் கேலிகளை யாரிடம் போய் முறையிடுவது?

1 comment:

  1. சௌளம் மூலமாக ஶிகை வைப்பது வைதீக மரபு. அதை ஸ்வாமிகள் குறித்துள்ளார். ஆனால் குடுமி என்பது சமயத்திற்காகவோ ஜாதிக்காகவோ கிடையாது. அது தொன்று தொட்டு வரும் பழக்கம் அவ்வளவே. மூவேந்தர்கள் குடுமி வைத்து பூச்சுடி வலம் வந்தனர் என்று சங்கப்பாடல்கள் கூறும். தமிழனின் அடையாளம் குடுமி.50-60 ஆண்டுகளுக்கு முன் வரை குடியானவன் கூட குடுமி வைத்திருந்தான். திராவிட பிதற்றல் பிரசாரத்தால் பல வழக்கங்கள் சமயச்சாயமும் பார்ப்பணச்சாயமும் பூசப்பட்டு ஒழிந்து போயின. என் அடையாளத்தின் பகுதி என்று குடுமியை ஆண்கள் கருதி நடைமுறைபடுத்தினால் பெண்களும் இப்போது போன்று விரித்த குஞ்சியர்களாக அலகை போல் அலையாமல் இருப்பார்கள். இதே போன்று கொசவம் வைத்து வேட்டியோ புடவையோ உடுத்துவதும் இப்படியே!

    ReplyDelete