Saturday, October 20, 2012

சுய நிதிக் கோயில்கள்


சில சமயங்களில் ஏற்கனவே பலமுறை சொன்னதையே  திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. முதல் தடவை சொன்னபோது இரண்டு பேர் காது கொடுத்துக் கேட்டார்கள் என்றால் , இன்னொரு முறை சொன்னால் வேறு இரண்டுபேர் கேட்க மாட்டார்களா என்ற எண்ணத்தால் இப்படித் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்தக் காலப் பேச்சாக , "அரைத்த மாவையே அரைக்கிரார்கள்" என்று வேண்டுமானால் சொல்லி விட்டுப் போகட்டும். ஆனால், சொல்ல வேண்டிய தருணங்களில் சொல்ல வேண்டியவைகளை  சொல்லாமல் "நமக்கேன்" என்று மட்டும் இருந்துவிடக் கூடாது. கேட்டால், "சும்மா இருப்பதே சுகம்" என்று விவேகமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு சம்பந்தமில்லாமல் பதில் சொல்கிறோம்.
நல்லதைக் கேட்பவர்கள் இல்லையோ என்று நமக்குள் பலபேருக்கு சந்தேகம் வரலாம். சொல்கிறபடி சொன்னால் கேட்பவர்கள் கண்டிப்பாக இருக்கத்தான் செய்வார்கள்.இதில் துளிக்கூட சந்தேகம் இல்லை. ஆனால் ஒன்று: சொல்பவன் சுயநலம் இல்லாமல் சொல்ல வேண்டும் என்பதே முக்கியம். அவனது வார்த்தைகளில் கேட்பவனுக்குமுதலில்  நம்பிக்கை ஏற்படவேண்டும் ஆகவே, அந்த அளவுக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட ஒருவனையே மக்கள் மதிப்பார்கள்.

கிராமங்களில் யாத்திரை செய்யும்போது, அங்கு மக்களை நல்ல பாதையில் சுய நலமில்லாமல் வழி நடத்துபவர்கள் மிகவும் குறைந்து விட்டதால், மக்கள் தன்னிச்சையாகச் செயல் படுவதைக் காண்கிறோம்.தீய வழிகளில் பணம் சம்பாதிப்பவர்களைப் பார்த்துத் தாமும் குறுக்குவழியில் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முனைகின்றனர். மற்றவர்களோ,அவர்களைப் பார்த்துக் குமுறத்தான் செய்ய முடிகிறது. மற்றவர்களை ஏமாற்றிப் பொருள் சம்பாதிக்கவும் துணிந்து விட்டனர். கோயில்களின் நிலையோ பரிதாபத்துக்கு உரியது. கோயில் இடத்தில் வீடுகளில் பரம்பரையாக வசிப்பவர்கள் , முப்பாட்டன் காலத்தில் கொடுத்துக் கொண்டிருந்த அந்த அற்ப வாடகையைக் கூடக் கோயிலுக்குச் செலுத்துவதில்லை. சென்னையிலும் பிற ஊர்களிலும் இவ்வாறு வாடகை பாக்கி , பல கோடிகள் என்று பத்திரிக்கைகளில் செய்தி வருகிறது. அவ்வாறு  வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை  அந்தக் கோவில்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். இதைப் பார்த்தாவது, வாடகையைக் கொடுக்க முன் வருவார்களா பார்ப்போம்.

கோவிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து தரவேண்டிய குத்தகைப் பாக்கியை வசூலிக்க என்ன செய்யப்போகிறார்கள்? பெயரை எழுதி வைத்தால் அவர்கள் கவலைப் படப் போவதாகத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் முடிவு தெரிய பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் அனுபவிப்போமே என்று இருக்கிறார்கள் குத்தகைக் காரர்கள். அவர்களைத் தெய்வம் மட்டுமே திருத்த முடியும். மழையே பெய்யாமல் இருந்துவிட்டால் என்ன செய்ய முடியும்? வறண்டுபோன நிலத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டியது தான். இந்த ஆண்டு அப்படித்தான் நிகழ்ந்து இருக்கிறது. காவிரியும் பொய்த்து விட்டது. இப்பொழுதாவது தவற்றை உணர்ந்து திருந்துவார்களா? மழை பெய்தால் ஆறு வேலி நிலமும் , வெள்ளம்  நின்றால் ஆறு வேலி நிலமும் தருவதாக வேண்டிக் கொண்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருப்புன்கூர் இறைவன் அவ்வண்ணமே அருளியபடியால், தன் பிரார்த்தனையை நிறைவேற்றினார். இக்கால விவசாயிகள் அதுபோல் நிலம் தரும் தாராள மனத்தவர்களாக இல்லாவிட்டாலும் , குறுவைப் பயிர்  நன்றாக விளைந்தால் , கோவிலுக்கு உரிய நெல்லை முழுவதுமாகத் தருவார்களா?

குளங்களும் பிற நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப் படுகின்றன. பல கிராமக் கோவில்களுக்கு உள்ளேயே வீடுகள் கட்டி இருக்கிறார்கள். தவறைச் சுட்டிக் காட்டுவோர் யாரும் இல்லாததால் , இறைவனே ஏதாவது வழியில் உணர்த்தியாக வேண்டும்
.
ஒவ்வொரு கோவிலும்  ஒரு நிர்வாக அதிகாரியின் பொறுப்பில் உள்ளது. கோவிலுக்கு வருமானம் இல்லாவிட்டால் அந்தக் கோவிலின் பக்கமே அவர் திரும்பிப் பார்ப்பது கிடையாது. தப்பித் தவறி அக்கோவிலைத் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்பவர்கள் யாராவது முன்வந்தால் , கும்பாபிஷேகப் பத்திரிகையில் எல்லா அதிகாரிகளின் பெயர்களும் அச்சிடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதில் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் கோவில் சார்பில் மரியாதை வேறு செய்ய வேண்டுமாம்! அற்ப சம்பளம் வாங்கும் சிப்பந்திகளுக்கு மாதக் கணக்கில் பாக்கி வைத்திருக்கும் இவர்களுக்குக் கண்டிப்பாக மரியாதை செலுத்தியே ஆகவேண்டும்.

இந்த நிலைக்கு யார் காரணம்? மக்கள் தான் என்று நிச்சயமாகக் கூறலாம். நாம் அக்கறை இல்லாமலும் தட்டிக் கேட்காமலும் இருந்துவிட்டால் , விளைவுகள் இப்படித்தான் இருக்கும். விமானத்தின் மீது செடிகள் முளைக்கும் போதே பிடுங்கி எறியாமல் இருந்துவிட்டு, அதுவே பெரிய மரமாக வேரூன்றியபின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது போலத்தான் இதுவும்.இவ்வளவையும் பார்க்கும் பொது, அறநிலையத்துறை அவசியமா என்று யார் கேட்கப் போகிறார்கள்?  குறைந்த பட்சமாக, அத்துறையை அரசின் தலையீடு இல்லாமலாவது செய்யலாம் அல்லவா? சுயநிதிக் கல்லூரிகள் இருக்கும்போது, சுயநிதிக் கோவில்களை உருவாக்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?  

2 comments:

  1. SIVAYANMAMAHA.
    IT WAS VERY WOUNDING AND MAKLING TO HEAR SUCH MATTERS AS MENTIONED HERE IN.I JOIN PRAYING AT THE LOTUS FEET OF SHIVA TO CORRECT THE SATATUS AND TO BRING BACK THE ORIGINAL GLORY OF TEMPLES WITH WARMEST REGARDS
    SIVAYANAMAHA

    ReplyDelete
  2. மக்களுக்கு ஏன் இறைவன் மேல் பக்தி இல்லை?
    சிவன் சொத்து குல நாசம் என்று தெரிந்திருந்தும் ஏன்மக்கள் கோயில் சொத்துக்களை அபகரிக்கிறார்கள்?
    பல புராதன கோயில்கள் கவனிப்பாரற்று
    பாழடைந்து நிற்கும் நிலையில் புதிது புதிதாக ஏன்கோயில்களை கட்டுகிறார்கள்?
    ஏனென்றால் மக்களுக்கு இறைவனிடம் உண்மையான பக்தி கிடையாது.
    எல்லாம் போலி
    மேலும் எல்லா கோயில்களும் வியாபார கூடங்கலாகிவிட்டன
    கடவுளைக்காண காசு கொடுக்கவேண்டியிருக்கிறது
    கடவுளின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படை
    உண்மைகளை கூட மக்கள் கடைபிடிப்பதுகிடையாது.
    இவைகளையெல்லாம் தட்டி கேட்கவும் யாரும் இல்லை
    உண்மை கடவுள் நெறியை போதிக்க தகுந்த ஆசான்களும் இல்லை

    ReplyDelete