Thursday, August 2, 2012

"வானங்காள் பெய்க மழை"


காவிரி பொய்த்துவிட்டது. ஆடிப் பெருக்கன்று காவிரியில் நீர் இல்லை என்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டதாக நினைவில்லை. சிலர் சொல்லலாம் , அணை திறக்காததால் தானே நீர் வரவில்லை என்று. பெய்ய வேண்டிய மழை பெய்திருந்தால் அணையை மூடி வைக்கவா முடியும்? வேண்டுமானால் காவிரி பொய்த்துவிட்டது என்று சொல்வதற்கு பதிலாக, வானம் பொய்த்து விட்டது என்று சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் சொல்லப்போனால் மனிதர்கள் பொய்த்து விட்டதால் தான் இந்த நிலை வந்திருக்கிறது எனலாம். வேதமும் வேள்வியும் மிகுந்திருந்த காலத்தில் வான் முகில் வழாது பெய்து மலி வளம் சுரந்தது. செங்கோல் வழியில் அரசனும் ஆட்சி செலுத்தினான். உயிர்கள் யாவும் குறைவில்லாமல் வாழ்ந்தன. மெய்மொழி யாகக் கருதப்பட்ட  நான்மறைகளை  ஓதியவர்கள் "பொய்யாத வேதியர்" என்று சிறப்பிக்கப்பட்டனர். மந்திர மறைகளால் வான் மழை பொழிந்தது.

மழை பொய்த்த காலங்களில் இறைவனிடம் ஊருக்காக, நாட்டிற்காக மனமுருகி வேண்டியதால்  மழை பெய்த வரலாறுகள் உண்டு.  திருப்புன்கூர் என்ற தலத்தில் வயலில் நீர் இல்லாமல் வறட்சி ஏற்பட்ட போது , மழை வேண்டிய  ஏயர்கோன் கலிக்காம நாயனார் , ஆறு வேலி நிலம் கோயிலுக்குத் தருவதாகப்ப்ரார்த்தித்தார். கன மழை பெய்தது. வாக்குத் தவறாத நாயனாரும் ஆறு வேலி நிலத்தை சிவலோகநாதருக்கு அர்ப்பணித்தார். மழை விடாது பெய்து வெள்ளம் வந்ததால் , அதனை நிறுத்தினால் மேலும் ஆறு வேலி நிலம் தருவதாக இறைவனிடம் வேண்டினார். வெள்ளம் நின்றவுடன்  சிவார்ப்பணமாக மேலும் ஆறு வேலி நிலத்தை வழங்கினார் என்று திருமுறைகளால் அறிகிறோம். இப்பொழுது ஊருக்காக இறைவனிடம் வேண்டுவோர் இல்லையா? ஆறும் ஆறும் பன்னிரண்டு ரூபாய் தருவதாகக்கூட யாரும் முன்வருவதாகத் தெரியவில்லையே!! தானும் தன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுபவர்கள் மட்டும் உண்டியல்களை நிரப்புகிரார்களே தவிர உலக நலன் என்று சொல்வதெல்லாம் வாய் அளவோடு  சரி.

சங்கீத பிரபலங்களும் பெயருக்கும் புகழுக்கும் பணத்துக்குமே நாட்டம் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது. சங்கீத மும்மணிகளுள் ஒருவரான  ஸ்ரீ  முத்து ஸ்வாமி தீக்ஷிதர், அம்ருத வர்ஷனி என்ற ராகத்தில் அம்பிகையின் மீது பாடி மழை வரவழைத்தார். விளம்பரம் இல்லாமல் ஆத்மார்த்தமாக அந்தக் கிருதியை உலக நமைக்காகப் பாட முன்வருவோர் எத்தனை பேர்?
திருநெல்வேலி சீமையில் ஸ்தல யாத்திரை செய்து வந்த சைவ மடாதிபதி ஒருவர் , அங்கு மழை இல்லாமல் மக்கள் துயரம் அடைவதைக்  கண்டு, "வானங்காள்  பெய்க மழை " என்ற ஈற்றோடு ஒரு பாடல் பாடியதும் பெரு மழை பொழிந்தது. காஞ்சி காமகோடி பெரியவர்களும் நமக்காகப் பிரார்த்தித்து  மழை வரவழைத்த வரலாறுகளும் உண்டு. குன்றக்குடி முருகனைத் தரிசிக்கச் சென்ற சிருங்கேரி ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ஒரு சுலோகம் சொல்லி மழை பெய்வித்தார்கள்.

முன்பெல்லாம் சன்யாசிகள் சாதுர் மாஸ விரதத்தை சிறிய ஊர்களிலும் ,கிராமங்களிலும் அனுஷ்டித்து வந்தார்கள். இப்பொழுது பெரும்பாலும் அது நகரங்களிலேயே நடை பெறக்  காண்கிறோம். இதற்குப் பல காரணங்கள்  இருக்கலாம். பல அஸௌகர்யங்களும் இருக்கலாம். அவற்றைப் பொருட்படுத்தாமல் , குறைந்த பக்ஷம் சிறு ஊர்களிலாவது நடத்தி உலக நன்மைக்காகப் பூஜை செய்தால் ஊர் மக்களும் நல்வழிப் பட  ஏதுவாகும் அல்லவா?

ஸ்திரீ தர்மம் நிலைத்திருக்கும் வரை நமது மதத்திற்கு ஆபத்து கிடையாது என்று கூடச்  சொல்லலாம். அதைப் பதிவ்ரதா தர்மம் என்றும் சொல்வர். அதற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தொலைக்காட்சி வீடு தேடி வந்து புத்தியைக் கெடுக்கிறது. பெண்கள்  பழி வாங்குபவர்களாகவும், கொலை செய்யவும் அஞ்சாதவர்களாகவும் தொடர்களில் சித்தரிக்கப்படுவதைப் பெண்களும் வயோதிகர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கோயில்களில்  பெண்கள் கூட்டம் இருந்தாலும் இந்த மாயை அவர்களைப் பெரிதும் பாதித்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. கோயிலில் இருக்கும் போதுகூட, சீரியல் பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்ற நினைப்பு வந்து விட்டால் அப்புறம் வழிபாடாவது ஒன்றாவது!! நேராக வீட்டுக்கு ஓடி வரும் நிலை வந்து விடும். இப்படிப்பட்டவர்கள் "பெய்" என்றால் மழை எப்படிப் பெய்யும். இப்படிச் சொல்வதை , யாரையும் புண் படுத்துவதாகக்   கொள்ளக் கூடாது. நமது கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு முன்னால் சீரழிவதைப் பார்த்து வேதனையோடு எழுத வேண்டியிருக்கிறது.

 விவசாய நிலங்கள்  ஏராளமாகக் கோயில்களுக்கு வழங்கப்பட்டிருந்தும் அவற்றிலிருந்து சல்லிக்காசு கூட வருமானம் வராத கோயில்கள் ஏராளம். அற நிலையத்துறை என்ன  செய்து கொண்டிருக்கிறதோ  தெரியவில்லை. சென்ற ஆண்டைப் போல பல ஆண்டுகள்  நல்ல மகசூல் கிடைத்தும் கோயிலுக்கு உரியதைக்  கொடுக்காதவர்கள் ஏராளம். ஓட்டைக் குறி வைப்பவர்களுக்கு இது பற்றிக் கவலை இல்லை. நெல்லை மட்டுமாவது வாங்கிக் கொண்டு அரசாங்கம் தரும் அற்ப சம்பளத்தைப் பற்றி மூச்சு கூட விடாமல் கடமை ஆற்றி வந்த கிராமக் கோயில் அர்ச்சகர்கள் இன்னும் எத்தனை  நாட்கள் அந்த நெல்லும் தரப் படாமல் காலம் தள்ள முடியும்? எப்படி ஐயா நம் ஊரில் மாதம் மும்மாரி பெய்யும்? சிவாலய பூஜைகளுக்குத் தட்டுப்பாடு வந்தால் மழை பெய்யாது என்று திருமூலரும் எச்சரித்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் இது பற்றிக் கொஞ்சமும் கவலைப் படுவதில்லை. பணத்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நினைப்பில் மிதப்பவர்கள் இவர்கள். அந்தப் பணமும் சிவன் தந்தது என்று அவர்களும் உணரும் காலம் விரைவிலேயே வந்து விடும். பேராசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து இறைவனே அவர்களைத் திருத்தி விடுவான்.
உண்மையான அடியார்கள் என்ன  செய்வார்களாம் தெரியுமா? வானம் பொய்த்தால் என்ன, மண்ணுலகம் ஸ்தம்பித்துவிட்டால் தான் என்ன, எல்லா அரசர்களுமாக ஒன்று சேர்ந்து நம்மைத் தாக்க முற்பட்டால் என்ன, சிவனருள்  இருக்கையில் நாம் எதற்காக அஞ்ச வேண்டும்? இப்படிச் சொல்கிறார்  அப்பர் பெருமான் . இதோ அப்பாடல்:

"தப்பி வானம் தரணி கம்பிக்கில் என்
ஒப்பில் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என்
செப்பமாம் சேறை செந்நெறி மேவிய
அப்பனார் உளர்  அஞ்சுவது என்னுக்கே. "

இவ்வாறு அப்பர் சுவாமிகளைப் போன்ற மகான்கள் மட்டுமே சொல்ல முடியும். நமக்கு இன்னும் அப்பக்குவம் வரவில்லையே!என்ன செய்வது?  

1 comment:

  1. திருச்சிற்றம்பலம்,
    நாம் வாழும் இந்த கலி காலத்தில் நடக்ககூடிய அவல நிலைகளை மிகவும் வெளிப்படையாக கூறினீர்கள்! இதை படித்து எல்லோரும் சிவதர்மம் என்றும் நிலைத்து ஓங்க முழுமுதற் பொருளான சிவபெருமானிடம் நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்வோம்!
    திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete