Tuesday, January 10, 2012

"பத்திரிகை தர்மம்"


                               "தர்மம்" என்ற வார்த்தையைத்தான் எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்கிறார்கள்!  " யுக தர்மம்" , "யுத்த தர்மம்" என்பதுபோலப் பத்திரிகைகாரர்களும் "பத்திரிகை தர்மம்" என்ற சொல்லைப் பயன்படுத்தி வருகிறார்கள்.   இந்த "தர்மம்" அந்த பத்திரிகையை நடத்துபவர்களுக்குப் பிடித்ததாக இருக்க வேண்டும். சமூகத்திற்குப் பிடித்ததாகவோ,பயன் படுவதாகவோ இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லை. "சமூக நீதி" என்று ஒரு சொல் இருக்கிறதே தவிர, அதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரக்காய் தான். வாசகர்கள் எழுதும் கருத்துக்களோ,கட்டுரைகளோ இந்த "தர்மத்தை" ஒட்டியிருந்தால் ஒரு வேளை பிரசுரிக்கப் படலாம்.

   மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய  செய்திகள் எவை என்பதில் ஒரு காலத்தில் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மறந்தும் தீய எண்ணங்களை மக்கள் மனத்தில் ஊன்றி விடக் கூடாது என்ற உயர்ந்த சிந்தனையோடு செயல் பட்டார்கள். சமூகத்தில் நடைபெறும் குற்றம்,குறைகளை  சுருக்கமாக வெளியிடுவார்களே தவிர , அதற்குக் கண்ணும் காதும் வைத்து எழுதமாட்டார்கள். இப்பொழுதோ, "உரத்த சிந்தனை" என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதித் தங்கள் கருத்துக்கு ஒத்து வெளிவரும் செய்தித்தாள்களிலும் , பத்திரிகைகளிலும் அச்சேற்றுகிறார்கள்.  இதற்குப் பெயர், "வித்தியாச சிந்தனை"யாம். "எதார்த்தமாம்.

    வித்தியாசமாக எழுதினால் மட்டுமே மக்கள் வரவேற்பார்கள் என்பது தவறான கருத்து. நல்ல எழுத்துக்களுக்கு என்றும் மதிப்பு உண்டு. அமரர் கல்கி அவர்கள் எழுதிய புத்தகங்களை இன்றும் எவ்வளவு பேர் விரும்பி வாங்குகின்றனர் என்பதைச்  சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். ஆன்மீகக் கட்டுரை எழுதினால் ,"சிலிர்ப்பூட்டும் அனுபவம்"   என்று எழுத வேண்டும் என்பதில்லை. உண்மையான பக்தனுக்கு அவை தாமாகவே சிலிர்ப்பூட்டுபவை அல்லவா?

   சுற்றி வளைத்துக் கடைசியில் விஷயத்திற்கு வருவோம். வழிபாட்டு முறைகளிலும் ,அவை நடைபெறும் கோயில்களிலும் மக்கள் கூட்டம் சேரும் போது ஆர்வத்தின் காரணமாகச் சில கருத்து வேறுபாடுகளும் ,தள்ளு - முள்ளுகளும் ஏற்படுவது இயற்கை. இவற்றையெல்லாம்  சம்பந்தப் பட்டவர்கள் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டுமே தவிர , பெரிதாக்கக் கூடாது. தாரை-தம்பட்டைகளை பூஜை நேரத்தில் பெரிதாக ஒரு கோஷ்டியினர்  சிதம்பரம்  நடராஜர் சன்னதியில் ஒலிக்கச் செய்ததாகவும் , தீட்சிதர்கள் அதற்கு ஆக்ஷேபித்ததாகவும் ,அதைத்  தொடர்ந்து "தள்ளு-முள்ளு " ஏற்பட்டதாகவும், ஜனவரி பத்தாம் தேதியிட்ட செய்தித் தாள்  வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தித்தாளின் "பத்திரிகை தர்மம்"தான் என்ன? இது உலகம் முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறார்களா? படிப்பவர்களுக்கு ,இப்படித் தடுத்துவிட்டர்களே என்ற அனுதாபமும் , தடுத்தவர்கள் மீது கோபமும் வர வேண்டும் என்பது நோக்கமா?  உண்மை, உண்மையாக இருக்கும் வரை உரைகல்லே தேவை இல்லை. இது  போன்ற சலசலப்புகள் எந்த மதத்தில் தான் இல்லை? அவை எல்லாம் வெளி வருகின்றனவா ?

பூஜை நேரத்தில் தில்லையில் ஒலிக்கப் படும் பெரிய மணியின் நாதமும் , நந்தி அருகில் அன்பர் பலர் ஒலிக்கும் சிறு சலங்கைகளின் ஒலியும் அந்த சூழலைச் சிவலோகம் என ஆக்கும் போது , மேன்மேலும்  ஒசைகள் தேவையா என்று யோசிப்பது நல்லது. இதனால் இசைக்குழு அன்பர்கள் மன வருத்தம் அடையாமல் பெரூமான் தேரில் வீதி வலம் வரும்போது தாரை -தம்பட்டை போன்ற வாத்தியங்களை வாசிக்கலாம். பக்தர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போதுகூட, பாரம்பர்யமாக இறைவன் முன் வாசிக்கப் படும் நாதஸ்வர இசைக்குப் பங்கம் வராமல் ,சற்றுத் தொலைவில் இருந்து ஒலிக்கலாம்.

    சன்னதியில் பக்தி பரவசம் ஏற்படுவதற்கு அருகிலுள்ள சூழ்நிலையும் ஒரு காரணம். அவை நமது பக்தியை மேலும் வளர்க்கத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, இடைஞ்சலாக ஒரு போதும் அமைந்து விடக்கூடாது. இன்னிசை வீணையும் ,யாழும், வேத ஒலியும், தோத்திர  ஒலியும் , அன்பர்களை மெய்மறக்கச்செய்து இறைவனோடு ஒன்றாக்கும் அற்புதத்தைத் திருவாசகம் நமக்குக் காட்டுகிறது. ஆகவே, சைவ அன்பர்கள் தங்களால் இயன்ற சிவப் பணியை  பிற அன்பர்களும் விரும்பும் வகையில் ஆற்றி வந்தால் எந்த வேறுபாடுகளும் தோன்றாது. சூடான செய்திகளுக்குக் காத்திருக்கும் மீடியாக்களும் மக்களுக்குள் கருத்து வேறுபாடுகளை உண்டாக்கும் செய்திகள் வெளியாவதைத் தவிர்த்து, ஒற்றுமைக்கு வித்திட வேண்டும்.  மக்கள் ஒற்றுமையும் நலனுமே தேச நலன் என்ற ஒரே தர்மத்தைக் கடைப் பிடிக்க வேண்டும். அதுவே உண்மையான " பத்திரிகை தர்மம் " ஆகும்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உலகம் என்பது உயர்ந்தோர் மட்டு . இந்த காலத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். அதனால் அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். மரபில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றுபட்டு பயமில்லாமல் தன முனைப்புடன் தன்னுறுதியோடு (self-assertive) செயல்பட்டால் இந்த விதமான அசம்பாவிதங்களை தடுக்கலாம். சைவ மடங்கள் இந்த விஷயங்களில் பச்கோந்தியாக இருக்கும் வரை பத்திரிக்கைகளை நாம் குறை சொன்னால் எந்த மாற்றமும் நிகழாது. மடங்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதை பின்னிறுத்தி மரபை முன்னிருத்தினால் இவ்வாறு நம் சமயம் அவமனபடுத்தபடுவதை தவிர்க்கலாம். நம: சிவாய

    ReplyDelete