Monday, July 5, 2010

தீர்த்த மகிமை


ஸ்தலத்திற்கும் மூர்த்திக்கும் எவ்வளவு மகிமை உண்டோ அந்த அளவு பெருமை அங்கு உள்ள தீர்த்தத்திற்கும் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தீர்த்தமே சிவ ஸ்வரூபம் தான். "சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே " என்று அப்பர் தேவாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. காஞ்சிப் புராணத்தில் வாரம் ஏழு நாட்களில் காஞ்சிபுரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டிய தீர்த்தங்கள் அமைந்துள்ள கோயில்கள் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அந்தந்தக் கோயிலில் உள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வதை காஞ்சி மகா பெரியவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்ரீ கச்சபேச்வரசுவாமி ஆலயத்தில் உள்ள இஷ்ட சித்தி தீர்த்தத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்நானம் செய்யும் பொழுது ஸ்ரீ பெரியவர்கள் , அந்தக் குளக்கரையில் இருந்த கல்வெட்டுக்களைப் பார்த்து, அது சூரிய சதகத்தில் வரும் ஸ்லோகங்கள் என்று கண்டுபிடித்தார்கள். அதைப் பாராயணம் செய்து வந்தால் கண் சம்பந்தமான உபாதைகள் நீங்கும் என்றும் சொன்னார்கள்.


திருவெண்காடு என்ற க்ஷேத்திரத்தில் கோயிலுக்குள் மூன்று தீர்த்தங்கள் உண்டு.அவை சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் எனப்படும். இவற்றில் ஸ்நானம் செய்பவர்களுக்குப் பேய் பிடித்திருந்தால் விலகிவிடும் என்றும் புத்திர பாக்கியம் வேண்டுவோர்க்கு அந்த வரம் கிடைக்கும் என்றும் திருஞான சம்பந்தர் அந்த ஊர் தேவாரத்தில் பாடியிருக்கிறார். இதில் சந்தேகப் படுபவர்கள் எந்தக்காலத்திலும் இருப்பார்கள் அல்லவா? அதனால் தான் ,"ஐயுற வேண்டா " (சந்தேகப்பட வேண்டாம்) என்றும் அதோடு சொல்லியிருக்கிறார். இதில் நம்பிக்கை வைத்துப் பாராயணம் செய்ததோடு, திருவெண்காடு சென்று மூன்று குளங்களிலும் ஸ்நானம் செய்த அச்சுத களப்பாளர் என்ற சிற்றரசருக்கு மகனாக சிவஞானபோதம் அருளிய மெய்கண்டார் அவதரித்தார் என்றால், அந்த தீர்த்தங்களின் மகிமையை யாரால் சொல்ல முடியும்?


ஆனால் ஆலய தீர்த்தங்களின் தற்போதய நிலை பரிதாபத்திற்கு உரியது. கோவிலின் வெளியில் இருக்கும் தீர்த்தங்கள் பலவகையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன. குப்பை கொட்டும் இடங்களாகவும் மாறி வருகின்றன.வறண்டு போன தீர்த்தங்கள் தூர் வாரப் படுவதில்லை. ஆலயத் திருப்பணியே மிகவும் கஷ்டப்பட்டுச் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் திருக் குளங்களை சீரமைக்க முடிவதில்லை. கிராமக் கோவில்கள் திருப்பணி செய்யப் படும்போது,அந்த ஊர் பஞ்சாயத்தில் ஏதாவது ஒரு வேலை வாய்ப்புத்திட்டத்தின் பேரில் குளங்களைத் தூர் வாரலாம்.இதனால் அந்தக் கிராமத்தில் சிலருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். செய்ய முன்வரவேண்டுமே? நிலத்தடி நீரைப் பற்றிப் பேசுவதோடு சரி. புதியதாகக் குளங்களா வெட்டப் போகிறார்கள்? நம் முன்னோர்கள் சிவ தர்மமாக ஏற்படுத்திக்கொடுத்ததைக் காப்பாற்றவே நாம் தயங்குகிறோம்.


"காவினை இட்டும் குளம் பல தொட்டும்" என்பார் சம்பந்தர். நந்தவனங்கள் அமைத்தும் , குளங்கள் பல உண்டாக்கியும் சிவ தர்மங்கள் செய்தால் பாவ வினைகள் நம்மை நெருங்காது என்பது அவரது உபதேசம். குரு உபதேசத்தை இனியாவது ஏற்று இருக்கிற நந்தவனம் மற்றும் திருக் குளங்களை அழியாமல் காப்போமாக.

No comments:

Post a Comment